Published : 21 Oct 2014 06:49 PM
Last Updated : 21 Oct 2014 06:49 PM
உருவத்தில் சிறியதாகத் தோன்றினாலும், உங்கள் குழந்தைக்குள் ஒரு விஞ்ஞானி உருவாகத் தொடங்கிவிட்டார். எதைக் கையில் எடுத்தாலும், இனிமேல் ஆராய்ச்சிதான். அப்படி என்றால் குளறுபடிகளும் நடக்கும் என்றும் அர்த்தம். இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பின்வரும் குறிப்புகள் உதவும்.
1. மறைத்து வைக்கப்பட்ட பொருட்களைத் தேடிக் கண்டுபிடிக்கும்போது குழந்தையின் கற்றல் திறனும், நினைவாற்றலும் வளரும்.
2. அனைத்தையும் புரிந்துகொள்ளக் குழந்தை ஆவலாக இருக்கும். நீரை ஊற்றுதல், பொருட்களைக் கிளறுதல், பொம்மைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி விளையாடுதல் போன்ற செயல்பாடுகள் மூலம் குழந்தை அறிவியல்ரீதியாகச் சிந்திக்கத் தொடங்கும்.
3. துள்ளிக் குதிப்பது, தள்ளிவிடுவது, தன் பக்கமாக இழுப்பது என அசைவுகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் குழந்தை முயற்சிக்கும்.
சுய உணர்வு: சாப்பிடுதல், பொருட்களை அடுக்குதல் எனத் தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளக் குழந்தை முயலும். அத்தகைய நேரங்களில் பல குளறுபடிகள் நிகழ்ந்தாலும், அவற்றைச் செய்யக் குழந்தையை அனுமதித்தால் சீக்கிரம் நல்ல முன்னேற்றம் தெரியும்.
உடல்: குழந்தை மிகவும் துறுதுறுவென இயங்கும் பருவம் இது. புதுப்புது விஷயங்கள் கிடைக்கும்போது, குழந்தை சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் விளையாடும்.
உறவுகள்: குழந்தையுடன் நீங்கள் விளையாடுவதன் மூலம், மற்றவர்களுடன் எப்படி விளையாடலாம் என்பதைக் குழந்தை தெரிந்துகொள்ளும்.
புரிதல்: சட்டை, பாவாடை, சாக்ஸ், ஷூ என வெவ்வேறு வகையான பொருட்களைப் பிரித்து வைத்து அடுக்குவதன் மூலம், தன் சுற்றுப்புறத்தைக் குழந்தை புரிந்துகொள்ளத் தொடங்கும். அப்படிச் செய்யும்போது எவையெல்லாம் ஒரே மாதிரியானவை, எவையெல்லாம் வித்தியாசமானவை, எது கடினமான பொருள், எது மென்மையான பொருள் என்பது போன்ற வேறுபாடுகளைக் குழந்தைக்கு விளையாட்டாகச் சொல்லிக் கொடுக்கலாம்.
கருத்துப் பரிமாற்றம்: குழந்தையுடன் சேர்ந்து பாடுங்கள். இசையின் மூலம் ஒரே நேரத்தில் சொற்கள், உணர்வு, மெட்டு, தாளம் போன்றவற்றைக் குழந்தை ஜாலியாகக் கற்றுக்கொள்ளும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT