Published : 07 Jan 2017 10:30 AM
Last Updated : 07 Jan 2017 10:30 AM
சிறுதானியங்கள் பற்றி மட்டுமே இந்தத் தொடரில் தொடர்ந்து பேசிவருவதால் அரிசியின் மீது மறுப்புணர்வு இருக்குமோ என்று பலரும் நினைக்கலாம். ஆனால், இல்லை. முப்போதும் எப்போதும் அரிசியை மட்டுமே சார்ந்திருப்பதைத்தான் நாம் மறுக்க வேண்டும்.
மெத்தென்ற அரிசிச் சோற்றை மெல்லுகிறபோது முதலில் இளம் இனிப்புச் சுவையும், அடுத்து மென்மையான துவர்ப்பும், கசப்பும் கூடி இறுதியில் உப்பாக நாவில் நின்று நர்த்தனமாடும். நிதானமாக அரைத்துக் கூழாகித் தொண்டையில் இறங்குகிறபோதும், ஒரு மலர், காம்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தரையில் வந்து அமர்வதுபோல இரைப்பையைச் சென்றடைகிறபோதும் அரிசிச் சோறு தரும் சுகமே அலாதிதான்.
அரிசி ஆர்வம்
எனக்கு நெருக்கமான அண்ணன் ஒருவர் இருக்கிறார். மூன்று வேளையும் எதை ருசித்து, எவ்வளவு உண்டாலும் அவருக்கு வயிறும், மனதும் அடங்காது. இறுதியாக ஒரு கவளம் சோற்றைத் தயிர் அல்லது மோரில் பிசைந்து சுவர்ப் பூச்சுக்குச் சிமிண்டு சாந்து அறைவதுபோல் கப்பென்று அறைந்தால்தான் `ஹப்ப்ப்ப்பா…’ என்று அவருக்கு நிறைவாக இருக்கும். அரிசியின் மீது பலருக்கும் இதே பிடிப்பு உண்டு.
அதிலும் நேற்றிரவு ஆறின சோற்றில் வடி கஞ்சி ஊற்றி, உப்பு போட்டு ஊற வைத்த பழைய சோற்றை மையாகப் பிசைந்து, பிசைக்குத் தப்பிய பருக்கைகளைத் (தெலுங்கில் இதை `மெதுக்குலு’ என்பர். எவ்வளவு பொருத்தமான பெயர்) வலையில் மீனை அரித்து எடுப்பதுபோல் விரல்களில் திரட்டி, உருண்டை பிடித்து, வாயில் நிரப்பி மென்று உள்ளிறக்கி, அதே வாயில் நீராகாரத்தையும் இரண்டு வாய் குடித்தால் சொர்க்கமே நமக்குப் பக்கத்தில் வரும். நல்ல வெயில் நேரத்தில் அந்த மப்புடன் வேப்ப மரத்தடியில் தூங்கினால் சொர்க்கம் நம் கண்ணுக்குள் நிலைக்கும். இத்தனை சுகம் தருவதால்தான் அரிசி நமக்கு முதன்மை உணவாக இருக்கிறது. உலகின் பெரும்பகுதி மக்களுக்கும் அதுதான் முதன்மை உணவு.
அரிசியின்றிக் கழிவதில்லை
உலகின் வெவ்வேறு ஆற்றின் கரையொட்டிய பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் நெல் வேளாண்மை தோன்றியிருக்கும் என்பது பொதுவான ஒரு அனுமானம். உலகின் பெரும்பகுதி உணவுத் தேவையை ஈடுசெய்வது அரிசியே. அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியர்களான நமக்கு, ஒவ்வொரு பொழுதும் அரிசியின்றிக் கழிவதில்லை.
ஏழைத் தாய்மார்கள் தங்களிடம் இருப்பில் உள்ள கடைசிப் பிடியரிசியை உலையில் இடும்போது, அவர்களது அடிவயிற்றில் இனம் புரியாத பயம் கிடுகிடுக்கும். இந்தப் பயம் வேளாண் கலாச்சாரம் சார்ந்தது. முன்பு ஒவ்வொரு விவசாயக் கூலித் தொழிலாளி வீட்டிலும்கூட மூலை அடுக்குப் பானைகளில் தானியங்கள் சேமிக்கப்பட்டிருக்கும்.
நாம் முன்னரே சொன்னதுபோல இன்று குதிர்களும், அடுக்குப் பானைகளும் முற்றாக வழக்கொழிந்து, அடுப்பிலே உலை வைத்துவிட்டு, சுருட்டின ரூபாய் நோட்டை விரித்துக்கொண்டு அரிசி வாங்கக் கடைக்கு ஓடுகிறார்கள் தாய்மார்கள். 1960-களின் மத்தியில் தொடங்கிய பசுமைப் புரட்சிக்குப் பின்னரே நெல் விளைச்சல் பரவலானது. பசுமைப் புரட்சி நிலத்தினின்றும் சிறுதானி யங்களை அகற்றிவிட்டு, ஏகபோக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.
அரிசி அரசியல்
தமிழகத்தில் அரிசி ஏகபோக இடத்தைப் பிடித்ததைப் போலவே மற்ற நாடுகளிலும் மற்ற தானிய விளைச்சல் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, பெருஞ்சோளமாகிய மக்காச் சோளம் ஆகிய மூன்றும் இப்படிப் பேராதிக்கம் செலுத்துகின்றன (நம்முடைய நாட்டுச் சோளம் எளிதில் மட்கிவிடும். அமெரிக்க மஞ்சள் சோளம் அவ்வளவு எளிதில் மட்குவதில்லை. அதனால் இதற்கு மக்காச் சோளமென்று பெயர் வைத்துள்ளனர் நம் மக்கள்). இவை மூன்றையும் பெரு உற்பத்திக்கும், ஆலை சார்ந்த வணிகப் பண்ட உற்பத்திக்கும் பயன்படுத்துவது எளிது. அதனால் அரிசி, கோதுமை, மக்காச் சோளம் ஆகிய மூன்றும் ஏகபோக நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்குப் பின்னுள்ள விரிவான அரசியலைப் பேசுவதற்கான களம் இதுவல்ல.
அண்ணா காலத்தில் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்ட ஒரு முக்கியக் கருவியாக அரிசி இருந்தது. அப்போது ‘ரூபாய்க்கு ஒரு படியரிசி நிச்சயம், மூன்று படியரிசி லட்சியம்’ என்பது திமுகவின் 1967 சட்டமன்றத் தேர்தல் முழக்கம். கருணாநிதியின் அதிகாரம் எம்.ஜி.ஆர். கைக்கு மாறியதற்குக் காரணம் அரசியல் மட்டுமல்ல. `அரிசி’யியல் காரணமும் உண்டு.
விசேஷ அரிசி
விவசாயக் குடும்பங்களில் சிறுதானியமே முதன்மை உணவு என்றாலும் அரிசிக்குக் கூடுதல் முக்கியத்துவம் இருக்கத்தான் செய்தது. ஆற்றுப் பாசனம், ஏரிப் பாசனம் என நீர் வசதி நிரம்பிய பகுதிகளில் இரண்டு மூன்று போகங்களாக நெல் விளைவிக்கப்பட்டது.
என்னதான் சிறுதானியங்கள் சத்து மிகுந்தவை என்றாலும் ஒரு விசேஷம், சடங்கு, சம்பிரதாயம், கொண்டாட்டங்கள் அனைத்திலும் முதலிடத்தைப் பிடித்திருப்பது நெல்லும் அரிசியும்தான். அதற்குப் பின்புலத்திலும் ஒரு காரணி உண்டு என்றாலும் இங்கே அதற்குள் இறங்க வேண்டாம்.
மறைந்த பிள்ளைச் சோறு
மிதமான சுவையுடைய அரிசிச் சோறு செரிக்க எளிதானது. நிறைய எரிமச் சத்தை வழங்கக்கூடியது. உடல் பலவீனமானவர்களுக்கு, திட உணவு உண்ணத் தொடங்கும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.
அரிசிச் சோறு வடிக்காத விவசாயக் குடும்பங்களில் குழந்தை இருந்தால், அக்குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு அரிசிச் சோறு வடிக்கிறவர்கள் முதல் வேலையாகக் கிண்ணத்தில் போட்டு, சம்பந்தப்பட்ட வீட்டுக்குக் கொடுத்தனுப்பி விடுவார்கள். கொடுப்பவர்களுக்கும் பெறுகிறவர்களுக்கும் சண்டை இருந்தால்கூட ‘பிள்ளை சோறு’ கிண்ணம் நகர்வது நின்று போகாது. பிள்ளைச் சோறு தரத் தவறுவதும், பெரியவர்கள் சண்டையை முன்னிட்டுப் பிள்ளைச் சோற்றைப் பெற மறுப்பதும் பாவம் என்று கருதுகிற உயரிய பண்பு பசுமைப் புரட்சி வரையும் தமிழகக் கிராமங்களில் நீடித்தது.
மறையாத பொங்கலின் சுவை
‘அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்’ என்று வள்ளுவர் சொல்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும், பிள்ளைக்கு ஊட்டுவதற்காக அன்னையின் கை நையப் பிசைகிற சோறும் பெருமளவு இனிதுதான். சோற்றைப் பிசைகிற அம்மாவின் விரலிடுக்கில் பிதுங்கி நிற்கும் வெள்ளை முத்துகளை வழித்து நக்கி மகிழும் பெரிய பிள்ளைகளாக நீங்கள் இருந்ததில்லையா?
கிராமத்துக் கோயில்களில் அன்றாடம் மாலை வேளையில் மணியடித்துப் பூசை செய்து அரச இலையில் பிடியளவு பொங்கல் தருவார்கள். பொங்கல் என்றாலே வெல்லம், நெய் என்ற படிமத்தை வழித்து எடுத்துவிடுங்கள்.
பச்சை நெல்லை பூசாரினி உரலில் இட்டுக் குற்றிய இளஞ்சிவப்பு அரிசியை எதுவுமே போடாமல் பொங்கி, கறுப்பாக எண்ணெய்ப் பிசுக்கு பிடித்த பிள்ளையாருக்குப் படைப்பார்கள். உள்ளங்கை பொத்துப் போகும் அளவுக்கான சூட்டுடன் அரச இலையில் தரப்படும் அந்தப் பொங்கலை ஆள்காட்டி விரலால் தொட்டு நாக்கில் வைத்தாலே, தலைக்குச் சுரீர் என்று ஏறும். அத்தனை சுவை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் சுவைத்தது, நினைக்குந்தோறும் நாவில் நீர் ஊறச் செய்கிறது.
அந்தச் சுவை அரை நூற்றாண்டில் எங்கே தொலைந்தது? பிளீச் செய்தது போன்ற இன்றைய மின்னலடிக்கும் பளீர் வெள்ளை அரிசி நமக்கு ஏற்றதுதானா? இதை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்.
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT