Published : 21 Oct 2014 06:48 PM
Last Updated : 21 Oct 2014 06:48 PM
சோர்வாக இருக்கும்போது புத் துணர்வு பானங்களைப் (Energy drinks) பருகினால் பல மணி நேரத்துக்கு மனம் உற்சாகத்தில் கரைபுரளும் என்று டிவி விளம்பரங்கள் நம் தலைக்குள் நுழைந்து, வாங்கச் சொல்லும் காலம் இது. ஒரு காலத்தில் தேநீர் இலவசமாக வழங்கப் பட்டுப் பழக்கப்படுத்தப்பட்டது போல, விலை கூடிய புத்துணர்வு பானங்கள் மக்கள் கூடும் இடங்களில் இலவசமாகத் தரப்படுகின்றன.
இந்தியச் சந்தையில் தற்போது பிரபலமாகி வரும் புத்துணர்வு பானங்கள் இளைஞர்கள் இடையே பரவலான வரவேற்பைப் பெற ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், இப்பானங் கள் அச்சுறுத்தும் ஆரோக்கியக் கேடுகளைத் தோற்றுவிக்கப் போகின்றன என்று எச்சரிக்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.
கேஃபைன் எச்சரிக்கை
புத்துணர்வு பானத் தயாரிப்பின்போது கேஃபைன் (caffine) என்னும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இதுவே உற்சாகம் உண் டாகக் காரணம். கேஃபைன் சேர்க்கப்படும் அளவுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். கேஃபைனின் அளவு அதிகரித்தால் படபடப்பு, ரத்தஅழுத்தம், வாந்தி, வலிப்பு, அதிகப் பட்சமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் ஆபத்துவரை நேரலாம்.
புத்துணர்வு பானங்களில் இருக்கும் அதே அளவு கேஃபைன் நாம் அருந்தும் காபியிலும் இருக்கிறது. ஆனால், புத்துணர்வு பானங்கள் குளிரூட்டப்பட்டிருப்பதால் நாம் சட்டென்று குடித்துவிடுகிறோம். அதுவும் ஒரு விதத்தில் சிக்கலை அதிகப்படுத்தலாம்.
சமீபத்தில் நடத்தப் பட்ட ஆய்வுகளின்படி புத்துணர்வு பானங்களில் கேஃபைன் தவிரக் குவாரனா (guarana), தாரைன் (taurine), வைட்டமின் பி உள்ளிட்டவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை கேஃபைனோடு சேரும்போது ஏற்படும் எதிர்விளைவுகள் பற்றித் தெரியவில்லை.
குளிர்பானமும் மதுபானமும்
அடுத்த சிக்கல், புத்துணர்வு பானங்களை மதுவுடன் கலந்து பருகுவதால் ஏற்படும் விளைவுகள். உலகளவில் 18 முதல் 29 வயதுவரையிலான இளைஞர்களில் 70% பேர் புத்துணர்வு பானங்களை மதுவோடு கலந்து குடிப்பதாக ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இப்படிக் கலந்து குடிப்பது கூடுதல் ஆபத்து.
விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட, உடல் எடை குறைய, பல் வலி குறையப் புத்துணர்வு பானங்கள் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், விளைவுகள் விபரீதமாகலாம்.
எச்சரிக்கை தேவை
இப்பானங்கள் அடைக்கப்பட்டுள்ள பாட்டில்களில் “குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார் களுக்கு உகந்ததல்ல” எனக் குறிப்பிட வேண்டும் என்கிறது உலகச் சுகாதார நிறு வனம். அது போன்ற எச்சரிக்கை அறிவிப்பும், நம் உடலில் ஆபத்தான விளைவுகளும் ஏற்படும்வரை நாம் காத்திருக்க வேண்டுமா?
தொகுப்பு: ம.சுசித்ரா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT