Published : 24 Sep 2016 11:21 AM
Last Updated : 24 Sep 2016 11:21 AM

மனமே நலமா? - எங்கே போனது அந்தக் குழந்தையின் கரிசனம்?

வெப்பத்தோடும் புழுக்கத்தோடும் பேருந்து ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தேன். ஒரு குழந்தை முகத்தைச் சுழித்து, கண்களை இறுக மூடிக்கொண்டு, உச்ச ஸ்தாயியில் 'வீர் வீர்'ரென்று கத்த ஆரம்பித்தது. குழந்தையின் அம்மாவும் எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தார். குழந்தையின் அழுகை குறைந்தபாடில்லை. சுற்றி இருந்தவர்கள் செய்வதறியாது வெறுமனே திகைத்து நின்றனர். அந்த அம்மாவின் முகம் அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் தோரணையில் வாடிக் கிடந்தது.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. பக்கத்தில் தன் தாயின் இடுப்பில் உட்கார்ந்திருந்த இன்னொரு குழந்தை, தன் வாயில் இருந்த ரப்பர் உறிஞ்சியை எடுத்து, அழுதுகொண்டிருந்த குழந்தையிடம் நீட்டியது. அழுத குழந்தை ஒரு கணம் அழுகையை நிறுத்தி, தனக்கு உதவி செய்யவந்த குழந்தையை ஆச்சரியத்துடன் பார்த்தது. இந்த மகத்தான தயாள குணத்தைக் கண்ட நான், அந்தக் குழந்தையின் தாயிடம் குழந்தைக்கு எத்தனை வயது என்று கேட்டேன். இரண்டு வயது என்றார் அவர்!

மற்றொருவரின் மனநிலையை உணர்ந்துகொள்ளும் இந்த மானுடப் பண்பு, உளவியலில் ஒத்துணர்வு (empathy) எனப்படுகிறது. இது இரண்டாவது வயதிலேயே தோன்றிவிடுவது எத்தனை ஆச்சரியம்?

வளர்ச்சிக் கோலங்கள்

குழந்தைகளின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் புலன் சார்ந்த உடல், உளவியல் மாற்றங்கள் குறித்துப் பல ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் தரும் வியப்புகள் குறைவதேயில்லை. கருவில் உள்ள சிசுவுக்கு, ஆச்சரியப்படும் பல திறன்கள் உள்ளதாக ஆராய்ச்சிகள் நிறுவியுள்ளன. பார்வையைத் தவிர மற்ற புலன் உணர்ச்சிகள் யாவும், கருவில் இருக்கும்போதே வளர்ச்சி பெற்றுவிடுகின்றன.

வெளிக்காற்றை சுவாசித்த நாள் முதல், தன் தாயின் குரலைக் குழந்தையால் இனம் கண்டுகொள்ள முடிகிறது. மற்ற பெண்களின் குரலைவிட தன் தாயின் குரலை நீண்ட நேரம் கவனிப்பதிலிருந்து, இது தெரியவருகிறது. கருப்பையில் இருக்கும்போது தன் தாயின் குரலைக் கேட்பதால், அதைப் பின்னாளில் சரியாக அடையாளம் காணவும் முடிகிறது. இப்போதெல்லாம் கர்ப்பத்தின்போது, புத்திசாலித் தாய்-தந்தைகள் கருப்பையில் இருக்கும் குழந்தையுடன் பேசுவதும் தாலாட்டுப் பாடுவதும் வழக்கத்துக்கு வந்துவிட்டன.

இதேபோல, புதிதாகப் பிறந்த குழந்தை தாயின் வாசனையை வைத்து, தன் தாயை அடையாளம் கண்டுகொள்கிறது. கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்குச் சுவையை உணரும் திறனும் உண்டு. இதனால் கர்ப்பக் காலத்தில் தாய் உண்ணும் உணவு வகைகளில், குழந்தைகளுக்குப் பின்னாளில் அதிக நாட்டம் ஏற்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

பிறந்த முதல் சில ஆண்டுகளில் குழந்தைகளிடம் காணப்படும் உளவியல் வளர்ச்சியும் பிரமிக்கத்தக்கதாகவே உள்ளது. மழலைக் குழந்தைகள் சுமார் 12 மாதங்களில் (‘அம்மா', ‘அப்பா' என்ற சொற்களைத் தவிர்த்து) கூடுதல் சொல்லைப் பேசும் ஆற்றலைப் பெறுகிறார்கள். ஐந்து வயதில் அதே குழந்தையால் கிட்டத்தட்ட வயது வந்தவர்களைப் போலவே தெளிவாகப் பேச முடிகிறது. அதாவது, நான்கே ஆண்டுகளில் எவரும் முறைப்படியாகக் கற்றுக்கொடுக்காமலே, இந்தப் பேச்சுத் திறன் வளர்ச்சி பெற்றுவிடுகிறது. இது குழந்தைப் பருவத்தின் மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

கேளா ஒலிகள்

பிறந்த சில மாதங்கள்வரை, உலகின் எல்லா மொழிகளில் உள்ள பேச்சு ஒலிகளையும் கற்றுக்கொள்ளும் ஆற்றல் எல்லாக் குழந்தைகளுக்கும் உண்டு. ஆனால், நாள் போகப்போக இந்த ஆற்றல் குறைந்துவிடுகிறது. பத்து மாதங்களில் தாங்கள் கேட்கும் மொழியை, அதாவது தனது தாய்மொழியில் உள்ள ஒலிகளை மட்டுமே, அவர்களால் உணர்ந்துகொள்ள முடிகிறது. முதல் 10 மாதங்களில் கேட்காத ஒலிகளை, திரும்ப ஒலிக்கும் திறனைக் குழந்தைகள் இழந்துவிடுகின்றன.

இதனால்தான் ஜப்பானியர்களால் ‘ர' என்ற ஒலியை உச்சரிக்க முடிவதில்லை; அவர்கள் ‘ர' என்ற ஒலியை, ‘ல' என்றே உச்சரிக்கிறார்கள். உதாரணமாக, ராதா என்ற பெயரை லாதா என்கிறார்கள். வங்க மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ‘வங்கம்' என்பதை ‘பங்கா' என்று சொல்வதும் இப்படித்தான். அவர்கள் ‘வ' ஒலிக்குப் பழக்கப்படவில்லை. வயது வந்த பின் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பவர்களின் ஆங்கில உச்சரிப்பு, பிரிட்டன் ஆங்கிலேயர்களின் உச்சரிப்புபோல ஏன் இருப்பதில்லை என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்!

மனிதருக்குப் பேச்சுத் திறன் உடன்பிறந்த ஒன்று. ஆனால், வாசிப்புத் திறன் (படிப்பு என்பதும் வாசிப்பு என்பதும் வித்தியாசமானவை என்பதில் சந்தேகம் தேவையில்லை) அப்படி அல்ல; அது பெற்றுக்கொள்ளப்படும் பண்பு (வாசிக்கத் தெரியாதவர்கள் எத்தனையோ பேர் உலகத்தில் இருக்கிறார்கள்). எனவே, முறைசார்ந்த கல்வி வழியாகவே, வாசிப்பைக் கற்றுக்கொள்கிறோம்.

இரண்டாம் வயதிலேயே குழந்தைகளிடம் ஒத்துணர்வு உணர்ச்சி தோன்றிவிடுகிறது என்பதைத் தொடக்கத்தில் கூறியிருந்தேன். ஒத்துணர்வு என்பது ‘ஐயோ பாவம்' என்று அனுதாபப்படுவதில் இருந்து வித்தியாசமானது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒத்துணர்வு என்பது வேறு, பரிவு அல்லது இரக்கம் (sympathy) என்பது வேறு. மற்றவர் இடத்தில் தன்னை நிறுத்திப் பார்த்து, அவர்கள் படும் வேதனையைத் தான் அனுபவிப்பதாக உணர்வதுதான் ஒத்துணர்வு. இதன் அடுத்த கட்டம்தான், அதைத் தீர்க்கத் தானாக உதவ முன்வருவது; இது பொதுநலப் பண்பு (altruism) எனப்படுகிறது.

இந்த இரண்டு மாபெரும் மானுட குணங்களும் நம்மோடு உடன்பிறந்தவை என்பதை, பேருந்தில் நான் கண்ட அந்தக் குட்டியூண்டு இரண்டு வயதுக் குழந்தை எனக்கு உணர்த்தியது. அதேநேரம், எந்தப் புள்ளியில் இந்த உணர்வை நாம் இழந்துவிடுகிறோம் என்பது தீவிரச் சிந்தனைக்குரியது.

- டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்
தொடர்புக்கு: ibmaht@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x