Published : 11 Mar 2017 11:53 AM
Last Updated : 11 Mar 2017 11:53 AM
மார்ச் 12-18 - கண்நீர் அழுத்த நோய் (கிளாகோமா) வாரம்
ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவரை அணுகாமல், மருந்துக் கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாள் அவர் கண் மங்கலாக இருப்பதாகக் கூறிக் கண் மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த கண் மருத்துவர் கண்ணில் பிரஷர் (கிளாகோமா) நோய் இருக்கிறது, உங்கள் கண் நரம்பானது கண்நீர் அழுத்த நோயால் (கிளாகோமா) 75% பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இதற்குக் காரணம் ஆஸ்துமா நோய்க்கு மருந்துக் கடைகளில் வாங்கிச் சாப்பிட்ட மருந்துகளில் ஸ்டீராய்டு இருந்தது தான். ஆம், ஸ்டீராய்டு மருந்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்குக் கண்நீர் அழுத்த நோய் (கிளாகோமா) பாதிக்கும் சாத்தியம் அதிகம்.
கண்நீர் அழுத்தம் என்றால் என்ன?
உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க ரத்த அழுத்தம் 120/80 mm/Hg ஆக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அது போல் கண்ணுக்குள் சுரக்கும் நீர் 10-21 mm/ Hg என்ற அழுத்தத்துடன் இருந்தால்தான் கண்ணின் வடிவமைப்பு பாதுகாக்கப்படுவதுடன் கண் நரம்பு ஆரோக்கியமாக இருக்க முடியும்.
கிளாகோமா என்றால் என்ன?
கண்ணின் நீர் அழுத்தம் அதிகமாவதால், அது பார்வை நரம்பை (optic nerve) கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்துக் கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் எந்தவித முன்அறிகுறிகள் தென்படாமல் நம் பார்வை முழுவதையும் ரகசியமாகத் திருடிவிடும் கண்ணின் நீர் அழுத்த நோயே கிளாகோமா என்று அழைக்கப்படுகிறது.
யார் கண்நீர் அழுத்தப் பரிசோதனையை உடனடியாகச் செய்துகொள்ள வேண்டும்?
நீங்கள் நாற்பது வயதுக்கு மேற்பட்டவரா? சிறு வயதிலிருந்தே கிட்டப் பார்வை, தூரப் பார்வைக்குக் கண்ணாடி அணிந்திருப்பவரா? கிளாகோமா பாதித்த குடும்பத்தில் பிறந்தவரா? ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து உட்கொண்டுவருபவரா? மனநல மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருப்பவரா? நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு நோய் (Hypertension), தைராய்டு நோய் உள்ளவரா? கண்களில் அடிபட்டவரா? கண்ணில் அறுவைசிகிச்சை செய்து கொண்டவரா? இக்கேள்விகளில் ஒரு சிலவற்றுக்காவது ‘ஆம்’ என்று பதில் அளித்தால், உடனே அருகில் உள்ள கண் மருத்துவரை அணுகிக் கண்நீர் அழுத்தப் பரிசோதனையைச் செய்துகொள்ளுங்கள்.
கண்நீர் அழுத்த நோய் (கிளாகோமா) அறிகுறிகள் என்ன?
சாதாரணமாகக் கண்ணின் நீர் அழுத்த நோய் எந்தவித முன் அறிகுறிகளுமே தென்படாமலேயே நோயாளிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்கவாட்டு பார்வையை இழந்து கடைசியாக மையப் பார்வையும் இழக்கச் செய்யும். சில சமயங்களில் ஒரு சிலருக்குக் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படலாம்
கிளாகோமா கண் பரிசோதனைகள்
கண்ணின் நீர் அழுத்தத்தை அளத்தல் (Intra ocular Pressure measurement)
இதை டோனோமீட்டர் (Tonometer) என்ற கருவியின் மூலம் துல்லியமாகப் பரிசோதிக்கலாம். கண்ணின் நீர் அழுத்தம் சராசரியாகப் பத்து முதல் இருபத்தி ஒன்றுக்குள் இருக்க வேண்டும்.
பார்வை நரம்பைப் பரிசோதித்தல் (Optic Nerve Examination)
கண்ணின் மையப் பகுதியான பாப்பாவை (Pupil) விரிவடையச் செய்து, பார்வை நரம்புகளை (Optic Nerve) பரிசோதித்து முன்கூட்டியே பாதிப்புகளை கண்டறிந்து அதற்குரிய மருந்துகளைக் கொடுத்து, பார்வை இழப்பைத் தடுக்கலாம்.
பார்வைப் புலப் பரிசோதனை (Visual Field Test)
இப்பரிசோதனை மூலம் பக்கவாட்டுப் பார்வை இழப்பை முன்கூட்டியே கண்டுபிடித்து மருந்துகள் மூலமோ அல்லது அறுவை சிகிச்சை மூலமோ பார்வை இழப்பைத் தடுக்கலாம்.
கிளாகோமா சிகிச்சை முறைகள்
கண்நீர் அழுத்த நோய்க்குத் தொடர்ச்சியாகச் சொட்டு மருந்துகளை இட்டு வருவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
# சொட்டு மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத நிலை யில் கண்நீர் அழுத்த நோயை அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம்.
# கண்நீர் அழுத்த நோய் உள்ள வர்களுக்கு முறையான வாழ்க்கை முறை மாற்றங்கள் தேவை.
மறந்து விடாதீர்கள்
பொதுவாகக் கண்நீர் அழுத்த நோயை மருத்துவர்கள் மூலம் அறிந்துகொண்டவர்கள் ஓரிரு மாதங்கள் மட்டும் மருந்தைப் பயன்படுத்தி விட்டு, வருடக்கணக்கில் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். மீண்டும் மருத்துவரை அணுகும்போது அவர்களுடைய பார்வை நரம்பு முழுவதும் பாதிக்கப்பட்டுப் பார்வையற்றவர்களாக மாறிவிடுகிறார்கள்
மருத்துவரின் அறிவுரைப்படி முழு கண் பரிசோதனையை, அவர் கூறும் கால அளவுக்குள் செய்துகொண்டு, சொட்டு மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால், இந்நோயால் ஏற்படும் பார்வையிழப்பைத் தடுக்கலாம்.
சர்வதேசப் பிரச்சாரம்
விழிப்புணர்வை ஏற்படுத்த ‘கண்ணுக்குத் தெரியாத கண்நீர் அழுத்த நோயை (கிளாகோமாவை) விரட்டுவோம்’ என்ற முழக்கத்துடன் உலகக் கண்நீர் அழுத்த நோய் வாரம் 2017 (World Glaucoma Week 2017) மார்ச் 12-18 வரை உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி கண்நீர் அழுத்த நோய் (கிளாகோமா) தடுக்கக்கூடிய பார்வை இழப்பு நோய்களில் உலகில் 2-வது இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டு உலகில் 7.6 கோடி மக்கள் கிளாகோமா நோயால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது.
முறையான விழிப்புணர்வு, சரியான நேரத்தில் சிகிச்சை மட்டுமல்லாமல் தொடர் கவனிப்பு ஆகியவற்றின் மூலம் இந்தப் பாதிப்பைத் தடுக்கலாம். கிளாகோமா இல்லாத உலகைப் படைப்போம்.
அறிகுறிகள்
பெரும்பாலான நோயாளிகள் மேற்கண்ட அறிகுறிகளுடன் மருத்து வரிடம் செல்லும்போது கிளாகோமா முற்றிய நிலையில்தான் செல்கிறார்கள். இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? கண்நீர் அழுத்தப் பரிசோதனை செய்துகொண்டால் கண்நீர் அழுத்த நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
கட்டுரையாளர், நாமக்கல் மாவட்டப் பார்வையிழப்பு தடுப்பு சங்க மாவட்டத் திட்ட மேலாளர்
தொடர்புக்கு: kpranganathan83@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT