Published : 04 Mar 2014 11:57 AM
Last Updated : 04 Mar 2014 11:57 AM

நோய்களுக்கு எளிய தீர்வு

நீர்சுருக்கு எரிச்சல்

இதோ வெயில் காலம் ஆரம்பமாகிவிட்டது. இதன் காரணமாக வெப்பம் அதிகமாகி நீர் சுருக்கு எரிச்சல் அடிக்கடி வரக்கூடும். இதற்கு நல்ல தீர்வு அளிக்கும் மருந்து, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் வெண்டை விதை. இதை 2 டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவுக்குப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பார்லி கஞ்சி போல வரும். இதைக் குடித்தால் நீர்சுருக்கு சரியாகிவிடும்.

ஒற்றைத் தலைவலி

வெள்ளை எள்ளைச் சிறிது பால் விட்டு நைசாக அரைத்து, நெற்றியில் பற்று போடவும். காலையில் பற்று போட்டுக்கொண்டு இளம் வெயிலில் 15 நிமிடங்கள் நிற்க வேண்டும். இதைத் தொடர்ச்சியாக 4 நாட்கள் செய்து வந்தால் தலைவலி போய்விடும். தொடர்ந்து இளம் வெயிலில் நின்றால் வைட்டமின் டி கிடைக்கும்.

பொடுகுத் தொல்லை

மருதாணி பொடி 1 ஸ்பூன், டீத்தூள் 1 ஸ்பூன், கடுக்காய்த்தூள் அரை ஸ்பூன், துளசிச் சாறு 2 ஸ்பூன், நெல்லி பொடி 1 ஸ்பூன். இவை அனைத்தையும் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால், பொடுகுத் தொல்லை போய்விடும். தலைக்குச் சுடுதண்ணீர் ஊற்றாமல், வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்.

மூட்டு வலி

தினமும் காலை 4, 5 சின்ன வெங்காயத்தை எடுத்து நல்லெண்ணெயில் வதக்கிச் சாப்பிடவும். சாதத்துடன் ஒரு பிடி முருங்கை இலை, சோற்றுக் கத்தாழை ஒன்று, கற்பூரம் 2 வில்லைகள், பூண்டு 10 பல் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.

சோற்றுக் கற்றாழையைத் தோல் சீவி, அதனுள் இருக்கும் சதைப் பகுதியை எடுக்கவும். இரும்பு வாணலியில் நல்லெண்ணெய் விட்டுப் பூண்டு, முருங்கை இலை, கத்தாழை ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் காய்ச்சவும். சத்தம் அடங்கியதும் கற்பூரத்தைப் போட்டு இறக்கி ஆறவைத்துத் தினமும் இதைத் தடவி வந்தால் மூட்டுவலியும், காலில் எங்காவது வீக்கம் இருந்தால் அதுவும் சரியாகிவிடும்.

சைனஸ்

சைனஸ் இருப்பவர்கள் தண்ணீரை நன்றாகக் கொதிக்கவைத்து 1 பிடி துளசி, 1 ஸ்பூன் ஓமம் ஆகியவற்றைப் போட்டு ஆவி பிடிக்கவும். இதனுடன் வாரத்தில் 2 நாளுக்குக் கண்டந்திப்பிலி ரசத்தைச் சூடாகச் சாப்பிட்டால் சைனஸ் மறைந்துவிடும். திப்பிலி 2, மிளகு 1 ஸ்பூன், கொஞ்சம் கறிவேப்பிலை, துவரம் பருப்பு 1 ஸ்பூன் ஆகிய அனைத்தையும் வறுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை வைத்து ரசம் செய்து சாப்பிட்டால் சைனஸுக்கு நல்லது.

வாய்ப்புண், அஜீரணம்

மல்லிவிதையை நன்றாக வறுத்து மிக்ஸியில் நைசாக பொடி செய்து வைத்துக்கொள்ளவும். அஜீரணம், பசி இல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால் மல்லிவிதைப் பொடியை 1 டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும். வாய்ப்புண்ணுக்கு மல்லிவிதையை வறுக்காமல் மிக்ஸியில் நைஸாக அரைத்துச் சலித்துவைக்கவும்.

நாக்கில் புண் இருந்தால் நாக்கிலும் வாயிலும் நன்றாகத் தடவி வாயைத் திறந்து வைத்துக்கொண்டால் எச்சில் வரும். 2 நிமிடங்கள் கழித்து வாயைக் கொப்பளிக்கவும். இதைக் காலை, மாலை செய்து வரவும்.

உடல் அரிப்பு

பாசிப்பருப்பு மாவு, பூலாங்கிழங்குப் பொடி, குப்பைமேனி, வசம்புத் தூள் ஆகியவற்றைக் கடையில் வாங்கிக் கலந்து வைத்துக்கொள்ளவும். குளிக்கும்போது 2 ஸ்பூன் பொடியில் 1 ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, உடல் முழுவதும் தடவவும். 5 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் குளிக்கவும். இப்படிச் செய்தால், உடல் அரிப்பு சரியாகிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon