Last Updated : 22 Apr, 2017 10:09 AM

 

Published : 22 Apr 2017 10:09 AM
Last Updated : 22 Apr 2017 10:09 AM

ஆரோக்கியம் காக்கும் தலையாய நூல்கள்

உலக புத்தக நாள் சிறப்புக் கட்டுரை

மருத்துவக் களஞ்சியம் - 12 தொகுதிகள்

தமிழ் வளர்ச்சிக் கழகம் தமிழ்க் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டிருப்பதைப்போலவே அலோபதி மருத்துவம் தொடர்பாக 12 தொகுதிகளில் விரிவான மருத்துவக் களஞ்சியத்தையும் வெளியிட்டுள்ளது. இதன் முதல் தொகுதி 1994-லும் 12-வது தொகுதி 2003-லும் வெளியாகின. இந்தக் கலைக்களஞ்சியத்தின் கலைச்சொல் அடைவு 2006-ம் ஆண்டு வெளியானது. தமிழில் மருத்துவம் பற்றி தெரிந்துகொள்ள இந்த விரிவான தொகுதிகள் உதவும்.

டாக்டர் இல்லாத இடத்தில், டேவிட் வெர்னர், க்ரியா - அடையாளம்

உலகில் எண்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை 1984-ல் தமிழில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. கடந்த 30 ஆண்டுகளாகச் சாதாரண மக்களிடமும் மருத்துவ அறிவைப் பரப்பிவருகிறது. இன்றுவரை இந்த நூலுக்கு இணையாக வேறு விரிவான, எளிமையான, கையேடு போன்ற மருத்துவ நூல் தமிழில் வரவில்லை. 2013-ல் விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பை அடையாளம் வெளியிட்டிருக்கிறது.

உச்சிமுதல் உள்ளங்கால் வரை, விகடன்

தோல் ,கண், சிறுநீரகம் போன்ற பல்வேறு உறுப்புகளின் செயல்பாடுகள் மற்றும் நோய்கள், அவற்றுக்கான அறிகுறிகள் , சிகிச்சைகள் போன்றவற்றைக் கேள்வி பதில் முறையில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் விளக்கும் நூல் இது.

மணப்பேறும் மகப்பேறும், டாக்டர் ஞானசௌந்தரி, இந்திய மருத்துவ மையம்

கர்ப்பம் தரித்தல் தொடர்பாக 1990-ல் வெளியான இந்த விரிவான புத்தகத்தின் புதிய பதிப்பு 2014-ல் வெளியானது. மூத்த மகப்பேறு நிபுணர் ஞான சௌந்தரியின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஓர் அனுபவமே இந்த நூலை எழுதுவதற்கு முக்கியக் காரணம். இந்தத் துறை சார்ந்து தமிழில் முதலில் வெளியான மிகவும் விரிவான நூல்.

மனநோய்களும் மனக்கோளாறுகளும், டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா,
காலச்சுவடு

தமிழகத்தில் மனநோய்கள், மனக்கோளாறுகள் குறித்து மக்கள் மத்தியில் குழப்பங்களும் தவறான புரிதல்களும் நிறைய உள்ளன. மக்களிடையே பரவலாகக் காணப்படும் மனச்சோர்வு, மதுப் பழக்கம், அல்சைமர் மறதி நோய், பாலியல் கோளாறுகள் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு அறிவியல்பூர்வ விளக்கங்களை இந்நூல் தருகிறது. மனக் கோளாறுகளைக் கண்டுபிடிக்கும் கேள்விப் பட்டியல்களும், சுயஉதவிக் குறிப்புகளையும் கொண்டுள்ளது. மனநலம் பற்றி குறைவாக வெளியாகியுள்ள தமிழ் நூல்களில், இது குறிப்பிடத்தக்கது.

ஆறாம் திணை, மருத்துவர் கு. சிவராமன், விகடன்

தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவை அக்கறையுடன் உண்டாலே ஏராளமான நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ளலாம். அத்துடன் வாழ்க்கை முறையில் எப்படிப்பட்ட மாற்றங்களை மேற்கொண்டால், ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதைச் சுட்டிக்காட்டும் நூல்.

சித்த மருத்துவ அகராதி (5 தொகுதிகள்), சாம்பசிவம் பிள்ளை,
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை

1938-ம் ஆண்டு தொடங்கி இந்த அகராதி ஏழு நூல்களாக, ஏழு ஆயிரம் பக்கங்களில் வெளியானது. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைச்சொற்கள் இந்தத் தொகுதிகளில் இடம்பெற்றிருக்கின்றன. சித்த மருத்துவச் சொற்களோடு, வேதியியல், தாவரவியல் சொற்களும் இந்த அகராதியில் உண்டு. ஒரு தனிமனிதராக இந்த அகராதியைத் தொகுக்கும் சாதனையைச் சாம்பசிவம் பிள்ளை நிகழ்த்தியிருக்கிறார்.

உணவே மருந்து, டாக்டர் எல். மகாதேவன், காலச்சுவடு

ஆயுர்வேத மருத்துவத் துறையில் முன்னோடி மருத்துவரான டாக்டர் மகாதேவன், ஆயுர்வேத மருத்துவப் பின்னணியில் எளிமையாக எழுதியுள்ள நூல் இது. நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகள், மருத்துவக் குணம், பயன்கள், சமைக்கும் முறைகள் பற்றி இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.

தலைமைச் செயலகம், சுஜாதா, விகடன்

நமது மூளையைப் பற்றி தமிழில் மிக எளிமையாக விளக்கும் நூல். மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பளிப்பவை, புதிரானவை. நமது உடலைக் கட்டுப்படுத்தியும் கட்டளை பிறப்பித்தும் இயக்கும் மூளையைத் தலைமைச் செயலகமாகச் சுஜாதா குறிப்பிடுகிறார். இது நேரடி மருத்துவ நூல் இல்லை என்றாலும்கூட, சுவாரசியமாகச் சொன்னால் மருத்துவம்-அறிவியலை நன்கு புரிந்துகொள்ள முடியும் என்பதை உணர்த்தும் நூல்.

வேண்டாம் இந்த மருந்துகள் / வேண்டும் இந்த மருந்துகள்,
டாக்டர் தி. சுந்தரராமன், சவுத் விஷன் வெளியீடு

அலோபதி மருத்துவம் பரவலாகிவிட்ட நம்முடைய சமூகத்தில் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறாமல், மருந்தகத்தில் நாமே மருந்தை வாங்கி உட்கொள்ளும் ஆபத்தான போக்கு பற்றி முதன்முதலில் எச்சரித்த இரட்டை நூல்கள் இவை. எந்தெந்த மருந்துகள் அவசியம், ஆபத்து குறைந்தவை என்றும் எந்தெந்த மருந்துகள் தடை செய்யப்பட்டவை, ஆபத்தானவை என்றும் இந்த இரட்டை நூல்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன. இந்த நூல்கள் அறிவியல் வெளியீட்டால் பின்னர் மறுபதிப்பு செய்யப்பட்டன.

இன்னும் சில மருத்துவ நூல்கள்

> மனநல மருத்துவர் இல்லாத இடத்தில், விக்ரம் படேல், தமிழில்: ஆத்மன், அடையாளம் வெளியீடு

> சித்த மருத்துவ நூல் திரட்டு, ஜட்ஜ் பலராமய்யா

> ஹோமியோபதி ஒரு வாழ்கலை விஞ்ஞானம், மேஜர். தி.சா. ராஜூ

> மனித உடற்கூறு இயலும் உடல் இயங்கு இயலும், வி.ததாரினோவ், டாக்டர் அ. கதிரேசன், என்.சி.பி.எச்.

> ஹார்ட் அட்டாக் முன்னும் பின்னும், டாக்டர் சிவகடாட்சம், பாரதி பதிப்பகம்

> சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது, டாக்டர் கு. கணேசன், சூரியன் பதிப்பகம்

> ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு வழிகாட்டி, கீதா அர்ஜுன், திருமகள் நிலையம்

> நமது மருத்துவ நலப் பிரச்சினைகள், அ.மார்க்ஸ், எதிர் வெளியீடு

> எது மருத்துவம்? உதயசங்கர், நூல் வனம் வெளியீடு

> என் உடல் என் உரிமை, போப்பு, சந்தியா பதிப்பகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x