Last Updated : 11 Feb, 2017 09:45 AM

 

Published : 11 Feb 2017 09:45 AM
Last Updated : 11 Feb 2017 09:45 AM

உயிர் வளர்த்தேனே 22: காய்ச்சி வடித்த தண்ணியும் ஏழாயிரம் ரூபாய் சமாச்சாரமும்

கஞ்சிகளைப் பற்றி கொஞ்சம் அதிகமாகத்தான் பேசிட்டோமோ என்று சிலர் நினைக்கலாம். அரிசிப் பயன்பாட்டைக் கொண்ட அனைத்துச் சமூகங்களிலும், ஒரு காலத்தில் கஞ்சியே முதன்மை இடம்பிடித்திருந்தது. ஆனால், இன்றோ அது முற்றாக வழக்கொழிந்துவருகிறது. வழக்கொழிந்தேவிட்டது என்றே சொல்லலாம். அப்படியிருக்க நலம் பயக்கும் கஞ்சி குறித்து, இன்னும் கொஞ்சம் பேசியே தீர வேண்டியிருக்கிறது.

உலகின் மூல ஆற்றலான நெருப்பு போதிய அளவுக்கு இருக்கிறபோது, இயங்கு ஆற்றல்களின் அடுத்த நிலையில் உள்ள நீர் ஆற்றல் உலக உயிர்களுக்கு அவசியமாக இருந்தது. இன்று மூல ஆற்றலான நெருப்பு (இதய ஆற்றல்) பற்றாக்குறையாக இருப்பதால், அப்போதைக்கு அப்போது சூடேற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது.

அதனால்தான் அடிக்கடி உடலைச் சூடேற்றிக்கொள்ளத் தேநீர், காபி போன்ற அல்லது உடல்நலத்தில் அக்கறை கொண்டிருப்பதாகப் பாவனை செய்துகொண்டு ‘கிரீன் டீ’ அருந்தி ‘நமக்கு நாமே’ உசுப்பேற்றிக் கொள்கிறோம். சோற்றைக்கூட மீண்டும் சூடேற்றி வறுத்த சோறாக, அதுதான் பிரைடு ரைஸாகச் சாப்பிடுகிறோமே.

அடிமைத்தனம்

சுய உந்துதல் இல்லாதபோதுதான், நமக்கு மறு உந்துதல் தேவைப்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. உணவிடையே சூடான பானம் அருந்துவதைக் காண நேர்கிறபோதெல்லாம், தனக்குத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டு ரத்த விளாரைக் காட்டி ஒரு ஆள் கையேந்தும் கற்பனைக் காட்சி என் மனக் கண்ணில் தோன்றி மறையும்.

காபி, தேநீர் அருந்துவது ஒன்றும் குற்றச் செயல் அல்ல. ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்கு அது இல்லையென்றால் ஒரு வேலையும் ஓடாது என்று பலர் கூறுவதை ஒரு விதமான அடிமை மனோபாவம் என்றே சொல்லலாம்.

மருந்தா, உணவா?

நாற்பது வருடங்களுக்கு முன்னர் நம்முடைய அரசு மருத்துவமனைகளில் ‘த/அ’ வெள்ளை மாத்திரைகள் உண்டோ இல்லையோ, கண்டிப்பாகச் சட்டென்று குளுமை காட்டும் சாத்துக்குடி, ஆரஞ்சு, நெளுநெளுப்பாக வாசனை வரும் அரிசிக் கஞ்சி, கோணிப்பை போன்ற பிரெட், நுரைத்து அடங்காத பால் போன்றவை வேளாவேளைக்குப் பினாயில் நெடி படரும் கட்டிலைத் தேடி வந்துவிடும். நோயாளிக்கு நலம் பயக்கும் மேற்படி உணவு வகைகள் எல்லாம் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் இப்போது மறைந்து போய்விட்டன.

இன்றைக்கு மக்களின் உடல்நலம் முழுவதும் மாத்திரைகளுக்குள் அடங்கியிருப்பதான பிம்பம் அழுத்தம் திருத்தமாகப் பதிக்கப்பட்டுவிட்டது. போதாக்குறைக்குப் பாசத்தின் நெகிழ்வடையாளமாக இரவெல்லாம் கண் விழித்து, கடிகார முள்ளைப் பார்த்துப் பார்த்து மாத்திரையைப் பிரிக்க, நோயாளி கண் கலங்க, இவர் அவரது தலைமுடியைக் கோத... அடா அடா அடா எத்தனை லட்சம் முறைதான் இக்காட்சிகளைப் பார்த்து உருகுவதோ…? நாம் உருகும் வேகத்துக்கு அண்டார்க்டிக் பனிப்படலம்கூட உருகுவதில்லை.

நோயை விரட்டலாம்

தொண்டைக்குள் லட்டியாக இறங்கி, வயிற்றுக்குள் தீ வைப்புக் கலவரங்கள் நடத்தும் மாத்திரைகள் இல்லாமலே, நமது உடல்நலனில் ஓர் அமைதிப் புரட்சியை நடத்த முடியும், கஞ்சியிடம் நாம் தஞ்சமடைந்தால். ஆம், எந்த நோயும் தலைகாட்டும் தொடக்கக் கட்டத்திலேயே நன்றாக நீர்த்த வெதுவெதுப்பான கஞ்சி, தொட்டுக்கொள்ளக் கறிவேப்பிலை சட்னி ஆகியவற்றை மட்டும் அருந்திவந்தால் நோய் இரண்டாம் படியைத் தாண்டாமல் தடுத்து விடலாம்.

நோயை ஜீரோ நிலையில் வைக்க விரும்பும் ஹீரோ நாம் என்றால், வாரத்துக்கு ஓரிரு வேளை கஞ்சி அருந்திவருவதை வழக்கமாகக் கொண்டால், கஞ்சிக்கு அஞ்சித் தொலைவில் இருந்தபடியே நோய் திரும்பிச் சென்றுவிடும்.

வடிநீர் போதும்

கஞ்சியிலும் குழைய வெந்த புழுங்கலரிசிக் கஞ்சிதான் என்றில்லாமல், வேறு பல கஞ்சிகளைப் பார்த்தோம். அதேபோல் கேரளச் சிவப்பு மட்டையரிசியில் கஞ்சி வைத்துப் பருக்கை இல்லாமல் வெறும் நீரை அருந்தினாலே போதும் வயிற்றுக்கு நிறைவை அளிக்கும், நோயைத் தொலைவுக்குத் துரத்தும். தொடர்ந்து அடுத்தடுத்து வேலைகள் இருக்கும் பிஸியான நாட்களில் உண்ணக்கூட நேரமிருக்காது. அதுபோன்ற நேரத்தில் வயிற்றில் பசியிருக்காது என்றாலும், உயிர்ச்சத்து அவசியத் தேவையாக இருக்கும். அதை ஈடுசெய்யும் அமிர்த பானம் கஞ்சி வடிநீர்தான்.

ஒரு டம்ளர் கைக்குத்தல் அரிசியை வேகவைத்து உறைந்து போகாத அளவுக்கு நீர்த்த கஞ்சியாக வடித்துக் கல் உப்பு, மிளகுத் தூள் சேர்த்துக் கலக்கி பிளாஸ்கில் ஊற்றி வைத்துக்கொண்டு பசிக்கும்போது குடித்துவந்தால், அன்றைய பொழுதெல்லாம் சோர்வின்றிக் கழியும்.

சிவப்பரிசியும் கிச்சிலியும்

கைக்குத்தல் அரிசியைப் போலவே சிவப்பரிசியும் கிச்சிலிச் சம்பா அரிசியும் மிகுந்த ஆற்றல் தருபவை. குடலிறக்கம், பெருங்குடல் உப்புசம் போன்ற உடற் தொல்லைகள் மிகுந்த நேரங்களில் சிவப்பரிசி, கிச்சிலிச் சம்பா அரிசிகளைத் தனியாகவோ, இரண்டையும் சம அளவில் கலந்தோ கஞ்சியாக வடித்து, அதை மட்டுமே அருந்திவர நோயிலிருந்து அதிவேகமாகக் குணமடையலாம்.

எவ்வளவு பெரியதென்று கூறப்படுகிற நோய்கள், உடலைக் காட்டிலும் பெரியவை அல்ல. அவற்றைப் பற்றிய பீதி மட்டுமே மிகவும் பயங்கரமானவை. நோய் கண்ட நாள் முதல் உடலை மேலும் மேலும் தொல்லைக்கு உள்ளாக்காமல் இருந்தால்போதும், உடல் தானாகவே நோயிலிருந்து மீளத் தொடங்கிவிடும்.

தொல்லைக்கு உள்ளாக்காமல் என்றால் உள்ளீடுகளைக் கவனித்து அனுப்ப வேண்டும் என்பதுதான். அதாவது எளிதில் செரிக்கக்கூடிய, அதேநேரத்தில் சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும். அந்த வகையில் சரியான உணவு அரிசிக் கஞ்சிதான்.

ஏழாயிரம் ரூபாய் சமாச்சாரம்

எனக்கு மிகவும் நெருக்கமான மாமா பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர்ச் சிறுநீரகப் பாதிப்பால் ஒரு மாதக் காலத்துக்கும் மேலாகத் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்தார். வாரக் கணக்காக உணவேதும் இல்லை. தொண்டையில் குழாய் செருகிப் புனல் வைத்துப் பிசுபிசுப்பான திரவத்தை மட்டும், அவ்வப்போதுச் செலுத்திக்கொண்டிருந்தார்கள். மேற்படி திரவம் ஜெர்மன் இறக்குமதி. சுமார் இருநூறு மில்லி விலை ஏழாயிரம் ரூபாய் என்றார்கள்.

மாதக்கணக்காக வீடும் மருத்துவமனையும் என்று அலைந்துகொண்டிருந்ததில் மருத்துவர்கள் எனக்கு நெருக்கமாகிவிட்டார்கள். நான் மருத்துவரை அணுகி ‘இந்த வெள்ளை பாக்கெட்டில் இருப்பது என்ன?’ என்று கேட்டேன். மருத்துவர் தோளில் கைபோட்டு பக்குவமாக ‘வேறொன்றும் இல்லை ஜெண்டில்மேன், எக்ஸ்ட்ராக்ட் ஆஃப் ரைஸ்தான். இதற்கென்றே விளைவிக்கப்பட்ட அரிசி. அதன் சாரக்கூறுகளை மட்டுமே பிரித்தெடுக்கும் நுட்பம் நம்மிடம் இல்லை’ என்றார்.

“அந்த நுட்பம்தானே அரிசியைக் காய்ச்சி வடிக்கிற தண்ணி, அது நம்மிடம் இருக்கிறதே” என்று நான் கேட்டிருந்தால், அது அதிகப்பிரசங்கித்தனமாகப் பார்க்கப் பட்டிருக்கும். என் தோள் மீதிருந்த கை பிறகு என்ன ஆகியிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

மாறாத சோறு

சரி போதும் நண்பர்களே கஞ்சிப் பிரஸ்தாபங்கள். சோற்றுக்குக் காட்டும் சிரத்தையில் பத்தில் ஒரு பங்காவது கஞ்சிக்குக் காட்ட வேண்டும் என்பதே நம் அக்கறை. இயற்கையின் விதிப்படி எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், நாம் உண்ணும் சோறு மட்டும் மாறுதல் விதியை மீறி, எப்போதும் மாறாமல் அப்படியே இருந்துவருகிறது.

எனவே, மாறுபட்ட சோறு வகைகளை, உடல்நலனுக்கு ஊக்கம் தரும் வகைகளை அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்.

அடுத்த வாரம்: கரம் மசாலா சாதம் தெரியுமா?
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x