Published : 07 Oct 2014 11:41 AM
Last Updated : 07 Oct 2014 11:41 AM

மூட்டு வலி: முதலுக்கே மோசம் - உலக ஆர்த்ரைட்டிஸ் நாள் அக்டோபர் 12

நீங்கள் பருமனாக இருக்கிறீர்களா? கூடுதல் எடை உங்கள் கால் மூட்டை மோசமாக பாதிக்கக்கூடும்.

உடல் பருமன் என்பது ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்சினைகளுடன் நேரடித் தொடர்புடையது. இது நமக்குத் தெரியாததல்ல. இதையெல்லாம் தாண்டி உடல் பருமன் கால் மூட்டுகளுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கும் என்பது பலரும் அறியாத செய்தி.

வாழ்நாள் முழுவதும் நம் உடல் எடையைத் தூக்கி சுமப்பது இந்த மூட்டுகள்தான். உடல் நகர்வைச் சாத்தியப்படுத்துவதும், எளிமைப்படுத்ததும் நமது மூட்டுகள்தான்.

இளமையில் சேதம்

அதிகப்படியான எடையுடன் இருந்தால் ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் (osteoarthritis) என்னும் மோசமான நோய் தாக்கக்கூடும். இந்த ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸால் மூட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாகச் செயலிழந்து போகும். பிறகு உடல் நகர்வை முற்றிலுமாகத் துண்டித்து, கடும் வலியை உண்டாக்கும்.

இயல்பாகவே முதுமை மூட்டுகளுக்குச் சேதம் விளைவிக்கும். அதுவும் எடை கூடுதலாக இருந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். நிச்சயம், மூட்டுகள் சீக்கிரம் தேய்ந்துவிடும்.

முந்தைய காலத்தில் முதியவர்களுக்கே உண்டான உடல் பிரச்சினையாக இருந்த ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ், தற்போது இளைஞர்களையும் பெருமளவில் தாக்கி வருகிறது. சமீபக் காலத்தில் நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மோசமான மாற்றங்கள்தான் இதற்குக் காரணம்.

குருவி தலையில்

தொடை, கால் ஆகிய இரண்டு தனித்தனி உடல் உறுப்புகளை இணைக்கும் பாகம் மூட்டுதான். கால் மூட்டு எலும்பு தான் அசைந்து கொடுப்பதன் மூலம் உடல் நகர்வைச் சாத்தியப்படுத்துகிறது. மூட்டு என்ற உறுப்பு இல்லாமல் நம்மால் நடக்கவோ, ஓடவோ, குனியவோ, ஏன் உட்காரவோகூட முடியாது.

மூட்டு எலும்பைச் சுற்றிலும் இருக்கும் தசைகள் மகத்தான ஒரு காரியத்தைச் சத்தம் போடாமல் செய்துவருகின்றன. ஓர் எலும்பு மற்றொரு எலும்புடன் உரசிக் காயப்படாமல் காப்பாற்றுவது இந்தத் தசைகள்தான். மூட்டுப் பகுதியின் ஆரோக்கியம் என்பது தசைகளின் ஆரோக்கியத்தைப் பொறுத்ததே! அதிக எடையைத் தாங்கும்போது மூட்டை சுற்றியிருக்கும் தசைகள்தான் பெருத்த சேதம் அடைகின்றன.

அதாவது ஒருவரின் உடல் எடை ஒரு கிலோ அதிகரித்தால், அவருடைய மூட்டு அதைவிட பன்மடங்கு அழுத்தத்தைத் தாங்க வேண்டி வரும்.

அதுவே அவர் ஒரு கிலோ எடை குறையும்போது 4 கிலோ அளவுக்கு, அவருடைய மூட்டின் மீதான அழுத்தம் குறைகிறது எனச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு.

காரணம் என்ன?

மூட்டு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) எனப்படும் நோய் - எலும்பு தேய்ந்து, பலவீனமாகும் நிலை. காயங்கள், முதுமை, ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் போன்றவை மற்றக் காரணங்கள். தசை தேய்மானத்தால் உண்டாகும் ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் மூட்டுகளில் வலியை உண்டாக்கும் அல்லது மரத்துப் போகச் செய்யும். இந்த வலி-மரத்துப் போதல் அதிகரித்துக்கொண்டே போனால் ஒரு கட்டத்தில் மூட்டு மாற்று சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

ஒரு காலத்தில் முதுமையின் பிரச்சினையாக இருந்து வந்த ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ், இன்றைக்குப் பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களிடமும் காணப்படுகிறது. உடற்பயிற்சி, விளையாட்டு, சரிவிகித உணவு போன்றவற்றைக் கைவிட்டதால்தான் இந்த ஆபத்தான நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

வேலைக்குச் செல்லும் இன்றைய இளைஞர்கள் மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறார்கள். பெரும்பாலான நேரம் தவறான அமரும் நிலையும், உடல் அசைவின் முக்கியத்துவமும் அவர்களுக்குப் புரிவதில்லை. நடப்பது அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்ற நல்ல பழக்கங்கள் இல்லாமல் போன இவர்கள், அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் தொலைக்காட்சியைப் பார்ப்பதிலேயே மீதமிருக்கும் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

இதன் விளைவாக உடல் பருமன் பிரச்சினையால் நகர்ப்புற இந்தியாவில் பலரும் அவதிப்படுகிறார்கள். ஒரு புறம் இதய நோய், நீரிழிவு நோய் போன்ற வாழ்க்கை முறை சார்ந்த தொற்றாத நோய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. மறுபுறம் மூட்டு தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே போகிறது.

அதிக எடை கொண்ட உடல், மூட்டின் மீது கடுமையான அழுத்தத்தைச் செலுத்துகிறது. உடல்தான் நம் ஒவ்வொருவரின் முதலீடு. அந்த முதலீட்டுக்கே மோசம் செய்வதுதான் எடை அதிகரிப்பு. 10 கிலோ எடையை மட்டுமே சுமக்கும் திராணி கொண்ட ஒரு மூட்டையில், 20 கிலோ எடையைத் திணித்துச் சுமக்கச் சொல்லி வற்புறுத்துவது எப்படி நியாயமாகும்?

ஒரு கட்டத்துக்கு மேல் மூட்டுகள் தேய்ந்துவிட்டால் பின்னர் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்வது என்ற முடிவை மாற்ற முடியாது. அதனால், ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதுதான் நல்லது.

தீர்வு என்ன?

“ஆண்களைவிட பெண்களே ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் இதுதான் உண்மை. ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் மூட்டில் மட்டுமல்லாமல் விரல், இடுப்பு எலும்புகளில்கூட வரலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாகக் கால்சியம், வைட்டமின் டி போதாமைதான் இதற்குக் காரணம். அதேநேரம் உடல் பருமன் தொடங்கி, வயோதிகம், பாலினம், புகைப் பழக்கம், மரபணு எனப் பல்வேறு காரணங்களால் ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் தாக்குவது உண்டு.

அதனால், நாள்தோறும் உடற்பயிற்சி, சத்தான உணவு வகைகளைச் சாப்பிடுதல், புகைப் பழக்கத்தைப் புறக்கணித்தல், உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுதல் என வாழ்க்கையை ஆரோக்கியமான முறைக்கு மாற்றுவதே, இதைத் தடுப்பதற்குச் சிறந்த வழி" என்கிறார் சென்னை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எஸ். தீபக் குமார்.

கட்டுரையாளர்,
எலும்பியல் நிபுணர்
© தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: ம. சுசித்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x