Published : 22 Sep 2018 11:28 AM
Last Updated : 22 Sep 2018 11:28 AM
உடல் நலம், சமூகத்தின் மிக முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது. ஆண், பெண் இருபாலரும் இளவயதில் தன்னை முன்னிலைப்படுத்தும் அழகைப் பராமரிப்பதற்காக உடல் நலனில் அக்கறை காட்டுகின்றனர். அவர்களே நடுத்தர வயதை எட்டிய பின்னர் இந்த உடலைத் தொல்லையில்லாமல் கொண்டு சேர்த்தால் போதும் என்று நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.
ஒருகாலத்தில் மேட்டுக்குடியில் நடுத்தர வயதைக் கடந்தவர்களுக்கு என்றிருந்த அன்றாட மேம்போக்கான உடற்பயிற்சி இன்று அனைத்துத் தரப்பினருக்கும் கட்டாயம் என்றாகி உள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் இயந்திரம் சார்ந்த இன்றைய வாழ்க்கை முறையில் குறைந்த அளவு உடலியக்கம்கூட நாளுக்கு நாள் விலக்கப்பட்டுக்கொண்டே வருவதுதான். உடலுழைப்பு ஒருபுறம் மறுக்கப்பட்டு வரும் அதேவேளையில் உடலைக் கசக்கிப் பிழிதலும் மறுபுறம் அதிகரித்துக்கொண்டு செல்கிறது.
இயந்திரங்கள் தரும் வேலைப்பளு
ஒரு பள்ளிக் குழந்தையை எடுத்துக்கொள்வோமே. முதிராத கை, கால் எலும்புகளுக்கு வலுச் சேர்க்கும், மனதுக்கு உற்சாகமளிக்கும் விளையாட்டுக்குப் போதுமான நேரமும் களமும் வாய்ப்பும் பாடச் சுமையால் மறுக்கப்படுகிறது. அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குக்கூட மஞ்சள் கலர் வேன் அல்லது ஒரு ஆட்டோ வந்து அள்ளிப் போட்டுக்கொண்டு போகிறது. பல வீடுகளில் பெற்றோர் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று விடுகின்றனர். இந்த எளிதான பயணத்துக்கு நேர் மாறாகக் குறைந்தது பத்து கிலோ எடையுள்ள புத்தகப் பையைக் குருத்தெலும்பு முதுகில் சுமந்தபடி மூன்று தளங்களுக்குப் படிக்கட்டில் ஏறிச் செல்ல வேண்டியிருக்கிறது.
ஒரு மென்பொறியாளர் கண்ணின் மென் நரம்புகள் தெறிக்க மானிட்டரை ஒரு நாளைக்குச் சுமார் 14 மணிநேரம் வெறித்துப் பார்க்க வேண்டிள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் கை கால் அசங்காத வேலை என்று தோன்றும். ஆனால், அமர்ந்த இடத்தைவிட்டு நகர வாய்ப்பில்லாத அவருக்கு ஆசன வாயில் ஏறும் சூடு, முதுகு நரம்பு, உச்சந்தலை வழியாக ஏறி எந்த நிமிடமும் தெறித்துக் கொட்டும் அளவுக்குக் கொதித்துக் கொண்டிருப்பதே அவரது பாடாக இருக்கிறது.
இறகுத் தடவல்தான் என்றாலும் அவரது பத்து விரல்களும் சதா இயங்கிக்கொண்டே இருப்பதால் கை நரம்புகளும் அசையாமல் இருப்பதால் கழுத்து நரம்பும் விரைத்து, ஐந்து வருட வேலையில் தோள்பட்டை, பிடரி வலி இல்லாத மென்பொறியாளரைக் காண்பது அரிது.மனித உழைப்பை எளிதாக்கு வதற்கென்றே வந்த இயந்திரங்களே முற்றிலும் உடலுழைப்பு சார்ந்திருப்ப வர்களுக்கு முன்னிலும் கூடுதலான வேலைப்பளுவைக் கொடுக்கின்றன. கான்கிரீட்டை உடைப்பதற்கென்று ஒரு பொறி இருக்கிறது.
மின்சாரத்தில் இயங்கும் முனையில் உளிகொண்ட அந்தப் பொறியை அழுத்திப் பிடித்தால் போதும். உளி தானாகவே மேலும் கீழும் ஏறியிறங்கித் துளையிட்டு உடைக்கும். ஆனால், அதை அழுத்திப் பிடிக்கும்போது தோள்பட்டையிலும், கை, கால் உடம்பு முழுவதிலும் ஏற்படும் அதிர்வால் உண்டா கும் வலியை எத்தகைய சோதனைக் கருவியாலும் அளக்க முடியாது.
சுமைதாங்கியா உடல்?
ஆக, இப்படி உடல் நலனுக்கு முரணான அன்றாடப் பணிச் சூழல் ஒருபுறம் என்றால், நம்முடைய வாழிடமும் சுற்றுச்சூழலும் முற்றிலும் ஒவ்வாததாகவே இருப்பதைச் சொல்ல வேண்டியதில்லை. சிங்காரச் சென்னையின் காற்று மாசு, ஒரு நபரின் தாங்கு திறனைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு அதிகம். டெல்லி போன்ற பிற இந்திய நகரங்களுடன் ஒப்பிட்டால் இது கொஞ்சம் குறைவுதான்.
ஒலி மாசு உடலுக்கு இழைக்கும் கேடு பற்றி இன்னமும் கணக்கு எடுக்கப்படவில்லை. அதுபோக இரவைப் பகலாக்கும் ஹாலஜன் வெளிச்சத்தையும் கண்கள் மட்டுமல்லாமல் முகத்தையும் தலை நரம்புகளையும் பாதிக்கும் மானிட்டர் வெளிச்சத்தையும் நாம் பொருட்படுத்தவே இல்லை.இத்தனைக்கும் மேலாக நம்முடைய அன்றாட வாழ்க்கை முறை - உணவு உண்ணும் முறை, குளியல் முறை, தூங்கும் முறை, ஓய்வெடுக்கும் முறை - அவ்வளவு ஏன், உடல், மன இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்வதற்காகச் செல்லும் உல்லாசப் பயணம்கூட உடலுக்குப் பொருத்தமானதாக இல்லை.
மிக முக்கியமாக உண்ணும் உணவில் பெரும்பகுதி, இயந்திர உற்பத்தி மயமாக்கப்பட்டு விட்டதால் சக்கையான உணவையே உண்கிறோம். அதைச் சத்துமயப் படுத்துகிறேன் என்ற பெயரில் உடலின் செரிமானத் திறனையும் மீறி உண்டு வைக்கிறோம்.
நமது உடல் மேலும் மேலும் சுமை தாங்கியாகி, தாங்க இயலாத ஒரு கட்டத்தில் நோய்க் களனாகிவிடுகிறது.
உடலே ஆதாரம்
வாழ்க்கை வசதிகளும் மருத்துவ வசதிகளும் எவ்வளவு பெருகினாலும் பெரும்பாலோர் நிரந்தரமாக மருந்து மாத்திரைகளுடன் வாழ்பவர்களாகி விட்டனர். அனைத்துத் தரப்பினருக்கும் அனைத்து வயதினருக்கும் உடல் நலம், பேசு பொருளாக இருக்கிறது. நீண்ட காலம் விவசாயம் சார்ந்த உழைப்பு, சூழல், வாழ்க்கை முறை என்றிருந்த நாம், புதிய, ஆலை உற்பத்தி வாழ்க்கைச் சூழலுக்குள் பொருத்திக்கொள்ள, நிறையச் சிக்கல்களை எதிர்கொள்கிறோம்.
சந்தை நுகர்விய காலத்தில் யாரும் யாரையும் சார்ந்திருக்க முடியாத, சார்ந்திருக்கக் கூடாத புதிய அறவியச் சூழலில் ஒவ்வொருவருக்கும் தமது உடலே முதன்மையான ஆதாரம்.
கமிட்மென்ட் தரும் காயம்
காற்றைப் புசித்து, காட்டில் தியானித்து, இயற்கையுடன் இயைந்த ஞானிகளைத் தெரியும் நமக்கு. அக உலக வாழ்க்கையை முதன்மையாகக்கொண்ட அவர்கள், புற உலக நடைமுறையை, வாழ்க்கைக்கு ஆதாரமான உடலை, ‘காயமே இது பொய்யடா’ என்று ஏகாந்தமாகத் திரித்திருக்கலாம்.
ஆனால் நாம், புற உலகில் லௌகீக வாழ்க்கை வாழ்கிறவர்கள். ‘இன்னைக்கு முதுகு வலிக்கிது, ஒரு நாள் லீவு போடேன்’ என்று உடல் கெஞ்சினால், அதை அடித்துத் துவைத்து வேலை வாங்கும் அளவுக்கு கமிட்மென்ட் மிக்கவர்கள். எனவே, ‘காயமே, நீதான் மெய்யடா’ என்று இருந்தாக வேண்டி உள்ளது.
இந்த உடலைக்கொண்டுதான் அத்தனையும் செய்தாக வேண்டும். அதற்காக உடலைப் பேண பெரும் சிரத்தை எடுக்கிறோம். ஜிம்மில் பணம் கட்டுவது, யோகா கற்பது, தியானத்தில் அமர்வது என்று என்னென்னவோ முயற்சிகள் மேற்கொள்கிறோம். அத்தனையையும் மீறி உடலுக்கு ஏதாவது ஒன்று என்றால், மருத்துவரைப் பார்க்கப் பயம்.
ஆயிரத்தெட்டு டெஸ்ட்டுகள் எடுக்க வைத்து ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லிவிட்டால்? ஊடகங்களில், வலைத்தளங்களில் தேடுகிறோம். மருந்து மாத்திரைகள்தாம் உபத்திரம் என்று வேப்ப இலையில் தொடங்கி பாகற்காய்வரை அரைத்துக் குடிக்கிறோம். திரிபலா தொடங்கி அமேசான் காட்டு அரிய மூலிகைகள் வரை முயன்று பார்க்கிறோம்.
அந்த உறுப்பு எது?
ஒரு அம்சம் நமக்கு விளங்குவதில்லை. பொதுத்தளத்தில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் பொருந்துவதல்ல. ஒவ்வோர் உடம்பும் தனித் தன்மையானது. அதற்கென்று இயல்புணர்வு உண்டு. அந்த இயல்புணர்வு அவ்வுடலின் லட்சக்கணக்கான செல்களின் இயக்கம் சார்ந்தது.
உடலின் இயல்புணர்வைப் புரிந்து அதற்கேற்ற வகையில் நமது வாழ்க்கை முறையை வரையறுத்துக் கொள்ளும்போதுதான் உடலை மட்டுமல்ல; வாழ்க்கையையும் சீராக நடத்திச் செல்ல முடியும்.ஆனால், நமது உடலின் புற அவயங்களான கண், காது, மூக்கு, வாய், நாக்கு போன்றவற்றின் நுண் உணர்வுகளும் அவற்றின் ஆதாரமான மூல உறுப்புகளும் அவற்றின் இயக்கமும் ஒரு பொது விதிக்கு உட்பட்டவையே.
தற்கால வாழ்க்கைச் சூழலில் நம்முடைய புற, அக உறுப்புகளைப் பராமரிக்கும் முறைகளையும் அந்த உறுப்புகள் அறிவிக்கும் இயல்புணர்வு என்ன, அவற்றை எப்படிப் புரிந்துகொள்வது, அதற்கு மறுவினை என்ன ஆகியவற்றையும் குறித்த தொடர்தான் ‘காயமே இது மெய்யடா!’சரி, உங்களுக்கு ஒரு வீட்டுப் பாடம். நமது உடலின் மிகப் பெரிய உறுப்பு எது? விடையைத் தேடிக் கண்டுபிடித்து வையுங்கள். அடுத்த வாரம் சந்திப்போம். மெய் உணர்வோம்!
(தொடரும்)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT