Published : 15 Sep 2018 04:10 PM
Last Updated : 15 Sep 2018 04:10 PM
‘ஒரே ஒரு மூலிகைதான்… ஆனால், பல நோய்களுக்கான மருந்து… பல உறுப்புகளின் பாதுகாவலன்…’ இந்த வாக்கியம் ‘மூக்கிரட்டை’ மூலிகைக்குப் பொருந்தும். மழை இல்லாமல் வறட்சி தாண்டவமாடும் போதுகூட, மூக்கிரட்டை முளைத்திருப்பதைப் பார்க்க முடியும். வயல்களில் அல்லது காடுகளில்தாம் முளைக்கும் என்றில்லை. வாய்ப்புக் கிடைத்தால் சாலை ஓரத்தில்கூடப் படர்ந்து, லேசாகத் தலைதூக்கிப் பார்த்து, தனது இருப்பை உறுதிசெய்யும்.
பெயர்க் காரணம்: புட்பகம், மூக்குறட்டை ஆகிய வேறுபெயர்களுடன் உலா வருகிறது மூக்கிரட்டை. சிறிது செம்மை கலந்த ஊதா நிறத்தில் மலர்வதால் ‘ரத்த’ புட்பிகா எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். உடலுறுப்புகளின் செயல்பாடுகளைப் புதுப்பிக்கும் தாவரம் என்பதால், ‘புனர்நவா’ என்ற பெயர். (புனர்-மீண்டும்; நவா-புதிது)
அடையாளம்: தரையோடு படர்ந்து வளரும் தாவரம். ஊதா நிறத்திலான பூக்களைச் சூடியிருக்கும். இலைகளின் மேற்புறம் அடர்ந்த பச்சை நிறமாகவும், கீழ்புறம் சற்று வெளுத்தும் காணப்படும். வேர்கள் சற்றுத் தடிமனாகப் பூமிக்குள் மறைந்திருக்கும். ‘போயர்ஹேவியா டிஃப்யூசா’ (Boerhavia diffusa) எனும் தவாரவியல் பெயர் கொண்ட மூக்கிரட்டையின் குடும்பம் ‘நிக்டாஜினேசி’ (Nyctaginaceae). சாந்தோன்கள் (Xanthones), லிக்னன்கள் (Lignans), ரொடினாய்ட்கள் (Rotenoids), அராகிடிக் அமிலம் (Arachidic acid) போன்றவை மூக்கிரட்டையில் உள்ள தாவர வேதிப்பொருட்கள்.
உணவாக: மூக்கிரட்டைக் கீரையுடன் பாசிப்பருப்பு, தக்காளி, உப்பு, பெருங்காயம், சிறிது மிளகு சேர்த்து கூட்டுபோலச் செய்து, சாதத்தில் பிசைந்து சாப்பிட உடலுக்கு வலுவைக் கொடுக்கும். ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மூக்கிரட்டையை உணவு முறைக்குள் சேர்த்துக்கொண்டால், உடலில் மையமிட்டிருக்கும் வாத நோய்கள் எல்லாம் ‘பெட்டிக்குள் பாம்பு போல’ அடங்கிவிடும் என்று உவமை பேசுகிறது ‘தேரன் வெண்பா’. முதிர்ந்த வயதில் ஏற்படக்கூடிய வாத நோய்களைத் தடுப்பதற்கான அற்புத மூலிகை மூக்கிரட்டை. கப நோய்கள், உடலில் தோன்றும் அரிப்பை நீக்குவதுடன், தேகத்துக்குப் பொலிவைக் கொடுக்கும்.
மலமிளக்கி செய்கையைக் கொண்டு இருப்பதால், அவ்வப்போது சாப்பிட்டால் மலத்தை இளகலாக வைத்துக்கொள்ளும். சிறுநீர் அடைப்பு, சிறுநீர் எரிச்சல் போன்றவற்றுக்குச் சிறுநீர்ப்பெருக்கி செய்கையுடைய இதன் வேரைக் குடிநீரிட்டுப் பருகலாம். வீக்கங்களைக் குறைக்கும் தன்மையும் மூக்கிரட்டைக்கு உண்டு. மூக்கிரட்டையோடு முடக்கறுத்தான் கீரை சேர்த்துச் செய்யப்படும் அடையை, மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் சாப்பிட்டுவர, வலியின் தீவிரம் குறையும். மூக்கடைப்போடு மூச்சுவிடச் சிரமப்படுபவர்கள், மூக்கிரட்டையைக் குழம்பு வகைகளில் சேர்த்து வரலாம் என்கிறது ‘சித்தர் கற்ப முறை’.
மருந்தாக: ரத்தத்தில் அதிகரித்திருக்கும் யூரியா, கிரியாடினின் அளவை மூக்கிரட்டை குறைப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. மூக்கிரட்டைக் குடிநீர் சார்ந்து நடைபெற்ற ஆய்வில், பல்வேறு காரணங்களால் கல்லீரலுக்கு உண்டாகும் பாதிப்புகளை மூக்கிரட்டை தடுப்பது (Hepato-protective) தெரியவருகிறது. இதிலிருக்கும் ‘போயரவினோன் – இ’ (Boeravinone-E) எனும் வேதிப்பொருளுக்கு, உடலில் உண்டாகும் தசைப்பிடிப்புகளை இளக்கும் (Spasmolyitic) தன்மை காரணமாக, வலிநிவாரணி செய்கையும், இதயத் தசைகளில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் ஆற்றலும் உண்டு. மூச்சுக்குழலை விரிவாக்கும் செய்கையிருப்பதால், ஆஸ்துமா நோய்க்கான மருந்தாகவும் மூக்கிரட்டை பயன்படுகிறது.
வீட்டு மருந்தாக: ‘பேதியால் வாதம் தாழும்’ எனும் சித்த மருத்துவத் தத்துவ அடிப்படையின்படி, விளக்கெண்ணெய்யில் இதன் வேர்களைச் சேர்த்துக் காய்ச்சி அரைத் தேக்கரண்டி அளவு சாப்பிட, மிதமான கழிச்சலை உண்டாக்கி, வாத நோய்களைத் தடுக்கும். முழுத் தாவரத்தையும் நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, தேநீர் போலப் பருகலாம். காய் வகைகளைக் கொண்டு சூப் தயாரிக்கும்போது, இதன் இலைகளையும் அதில் சேர்க்கலாம். சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வன்மையுடைய கீரை என்பதால், வேனிற் காலங்களில் அதிகமாகப் பயன்படுத்தலாம்.
இதன் வேரோடு மிளகு சேர்த்து, விளக்கெண்ணெய்யிலிட்டுக் காய்ச்சி அரைத் தேக்கரண்டி அளவு பருக, மூலம் மற்றும் தோல் நோய்கள் குணமாகும். தண்ணீரில் மூக்கிரட்டை, சீரகம், சிட்டிகை பெருங்காயம் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்துப் பருக, மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி மறையும்.
மூக்கிரட்டை… முடக்கும் நோயை!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment