Last Updated : 01 Sep, 2018 11:14 AM

 

Published : 01 Sep 2018 11:14 AM
Last Updated : 01 Sep 2018 11:14 AM

நல்லா சாப்பிடுவோம்… நல்லதையே சாப்பிடுவோம்…

தேசிய ஊட்டச்சத்து வாரம் -  செப் 1 முதல் 7 வரை

இன்று பெரும்பாலான வீடுகளில் இருக்கும் மிகப் பெரிய சவால் குழந்தைகளைச் சாப்பிட வைப்பதுதான். அவர்களை ஒரு இட்லி சாப்பிடச் செய்வதற்கு நாம் நான்கு இட்லிகள் சாப்பிட வேண்டியிருக்கும். அவ்வளவு ஆற்றலும் பொறுமையும் தேவைப்படுகிறது.

இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இந்தியக் குழந்தைகளில் சரிபாதி அளவினர் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் வாடுகின்றனர். இன்னொரு புறம் மூன்றில் ஒரு பங்குக் குழந்தைகள் அதிக ஊட்டச்சத்தால் உடல் பருத்து அவதிப்படுகின்றனர்.

ஊட்டச்சத்து குறைபாடு, அதிக ஊட்டச்சத்து ஆகிய இரண்டுமே குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல. அதைக் கருத்தில்கொண்டு இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

குழந்தைகளின் ஊட்டச்சத்துப் போதாமை, தேசிய வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருக்கும் என்பதால் மக்களிடம் நல்வாழ்வு குறித்த பிரச்சாரத்தை மத்திய அரசு 1982-ல் முன்னெடுத்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்துடன் சில தொண்டு நிறுவனங்கள் இணைந்து மக்கள் மத்தியில் ஊட்டச்சத்தின் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

2011 முதல் தேசிய ஊட்டச்சத்து வாரம் ஏதாவதொரு கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, ‘உணவால் இன்னும் மேம்படுவோம்’ என்பதை மையப் பொருளாகக் கொண்டு தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பாலினப் பாகுபாடும் காரணம்

குழந்தைகளுக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைக்காததற்கு வறுமை மட்டுமே காரணமல்ல. நம் வாழ்க்கை முறை மாற்றத்துக்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாரம்பரிய உணவுப் பழக்கம் குறைந்துவரும் சூழலில் பெரும்பாலான வீடுகளில் துரித உணவு, சக்கை உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.

குழந்தை பிறந்தது முதலே டப்பாக்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களைக் கொடுத்துப் பலரும் வளர்க்கிறார்கள். இதனால் ஒரு குழந்தையின் சீரான வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை ஊட்டசத்துக்கள் போதுமான அளவில் கிடைப்பதில்லை.

வறுமையால் ஊட்டச்சத்து கிடைக்காமல் வாடும் குழந்தைகளுக்கு அதைக் கிடைக்கச்செய்வது அரசாங்கத்தின் கடமை. அதேபோல் முறையற்ற உணவுப் பழக்கத்தால் குழந்தைகள் ஊட்டச்சத்து கிடைக்காமலோ அதிக ஊட்டச்சத்துடன் வளர்ந்தாலோ அதற்குப் பெற்றோரே பொறுப்பு.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஊட்டச்சத்து அவசியம். ஆண்களைவிடப் பெண்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள். பாலினப் பாகுபாடு இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் சீரான ஊட்டச்சத்தைப் பெற்று வளரும்போதுதான் நாட்டின் மனித வளம் மேம்படும். உணவுப் பழக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலமே இதைச் சரிசெய்ய முடியும். பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு மாறுவது அதன் முதல்படியாக இருக்க வேண்டும்.

இனி கவலையில்லை!

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவை சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவே சிறந்தது. கொழுப்பு உடலுக்குக் கெடுதல் எனப் பலர் தவறாகப் பிரசாரம் செய்வதை நம்பிப் பலரும் கொழுப்பு உணவை அறவே தவிர்த்துவிடுகின்றனர். இது தவறு. நல்ல கொழுப்பு உடலுக்கு நன்மை தரும்.

தவிர, எதையுமே சரியான அளவில் சாப்பிட்டால் சிக்கல் இல்லை. அளவுக்கு மிஞ்சினால் மட்டுமல்ல குறைந்தாலும் கெடுதல்தான். பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பயறு வகைகள், சிறுதானியங்கள், இறைச்சி, பால், முட்டை, மீன் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். ரசாயன நிறமூட்டிகள், மணமூட்டிகள், சுவையூட்டிகள் போன்றவை சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் குழந்தைகளின் சாப்பிடும் உணர்வை மட்டுப்படுத்தும். அதனால்தான் பெரும்பாலான குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம்பிடிக்கிறார்கள்.

கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களைத் தவிர்த்து வீட்டில் சமைக்கப்படும் ஆரோக்கிய உணவைக் குழந்தைகளுக்குக் கொடுத்தாலே போதும். ஊட்டச்சத்து குறித்த கவலை இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x