Last Updated : 09 Sep, 2014 12:55 PM

 

Published : 09 Sep 2014 12:55 PM
Last Updated : 09 Sep 2014 12:55 PM

திரும்பத் திரும்பச் செய்றே நீ!

சுத்தமாக இருப்பது ஆரோக்கியமான, நல்லதொரு விஷயம். ஆனால் அதுவே முற்றிவிட்டால்...? அப்படி முற்றிய நிலையில் உள்ள ஒரு நோயாளி, கல்லூரி மாணவர்.

ஒழுங்குமுறை அதிகம் கடைப்பிடிக்கப்படும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். எல்லா வேலைகளையும் மிகச் சரியாக,நேரம் தவறாமல் செய்பவர். வீட்டில் வைத்த பொருள், வைத்த இடத்தில் இருக்கும். ஒழுங்குக்கு உதாரணமாகக் காட்டப்படுபவர்.

ஆனால், சில மாதங்களாக அவருக்கு ஓர் எண்ணம். தான் அசுத்தமாக இருக்கிறோம். தன் மீது ஏதோ மலம் போன்ற துர்நாற்றம் பட்டுவிட்டது என எப்போதும் தோன்றிக்கொண்டே இருக்கிறது. கல்லூரியில் வைத்துக் குளிக்க முடியாது என்பதால், கைகளை அடிக்கடி கழுவுகிறார்.

அந்தத் துர்நாற்ற வாசனை போகவில்லை. வீட்டுக்கு வந்ததும் உடனடியாகக் குளிக்கிறார். குளித்துக்கொண்டே இருக்கிறார். இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாகக் குளிக்கிறார். இதுதான் அவருடைய பிரச்சினை. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான நோயைப் பற்றி விவரிக்கிறார் கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரிப் பேராசிரியரும் மனநல மருத்து வருமான ஒய். அருள்பிரகாஷ்:

சந்தேகப் பேய்

இதே போன்ற பிரச்சினையுடன் என்னிடம் ஒருவர் வந்தார். அவருக்கு எந்த வேலையிலும் திருப்தியே இல்லை. வீட்டைப் பூட்டிவிட்டு வந்தால், வீடு திரும்பும்வரை வீட்டைச் சரியாகப் பூட்டினோமா, கேஸ் சிலிண்டரை மூடினோமா என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கும்.

இத்தனைக்கும் வீட்டைப் பூட்டி, சோதித்துவிட்டுத்தான் வந்திருப்பார். மீண்டும் மீண்டும் திரும்பப் போய்ப் பூட்டை இழுத்துப் பார்த்துவிட்டு வந்திருப்பார். ஆனாலும், ஓயாத சந்தேக அலைகள் அவர் மனதில் சுழற்றி அடித்துக்கொண்டே இருக்கும்.

பணத்தை எண்ணினாலும் திருப்தி வராமல் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்ப்பார். கூடை நிறைய காய்கறிகளுடன் வரும் மனைவியிடம், "எங்கே போனாய்?" எனக் கேட்பார். அவர் சரியான பதிலைச் சொன்னாலும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருப்பார். இப்படி எத்தனை முறை என்றால், சரியாக ஏழு முறை. ஏழாவது முறை மனைவி சொல்லும் பதிலில் திருப்தி அடைந்துகொள்வார்.

சுழல் எண்ணங்கள்

இந்த இருவரின் பிரச்சினையும் ஒன்றுதான். ஒரே எண்ணம் திரும்பத் திரும்ப வருவது. ஒருவருக்கு அழுக்காக இருக்கிறோம் என்ற எண்ணம். மற்றொருவருக்குச் சரியாக இல்லை என்ற சந்தேகம். இன்னொரு விதமான எண்ணமும் உண்டு. அதாவது வேண்டாம் என ஒதுக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் எண்ணங்கள்.

அதாவது கோபப்படக் கூடாது என நினைக்கும்போது கோப எண்ணம் திரும்பத் திரும்ப மனதில் சுழலும். இதைச் சுழல் எண்ணங்கள் (Obsession) என்போம். இதில் நான்கு வகைகள் உண்டு. அழுக்கு அல்லது தொற்று பட்டுவிட்டதாக வரும் எண்ணம், எதிலும் திருப்தியில்லாத சந்தேகம், நாம் வேண்டாம் என நினைத்தாலும் மனதை ஆக்கிரமித்து நுழையும் எண்ணங்கள், ஒழுங்கின்மையாக இருப்பதாகத் தோன்றும் எண்ணங்கள்.

இம்மாதிரி எண்ணங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். அன்றைய நாளின் கடமைகளில் இருந்து தவறும் நிலை ஏற்படும். எல்லா வேலைகளையும் முடிப்பதில் கால தாமதம் ஆகிவிடும்.

நினைப்பதெல்லாம் நடக்குமா?

இந்த எண்ணச் சுழற்சியைச் சமாளிக்க மீண்டும் மீண்டும் குளிப்பது, திரும்பத் திரும்பப் பணத்தை எண்ணுவது, பூட்டை இழுத்துப் பார்ப்பது போன்ற செயல்களைச் செய்துகொண்டி ருப்பார்கள். இப்படிச் சுழல் எண்ணங்களைச் சமாளிக்கச் செய்யப்படும் செயல்களை ‘கட்டுப்படுத்த இயலாத செயல்கள்’ (Compulsive Actions) என்கிறோம்.

இதனால் ஏற்படும் மனப் பிரச்சினையை ‘கட்டுப்படுத்த இயலாத எண்ணச் சுழற்சி நோய்’ (Obsessive–compulsive disorder) என அழைக்கிறோம். இந்த நோய் ஒரு சிலருக்கு வெறும் சுழல் எண்ணங்களை மட்டும் கொண்டதாக இருக்கலாம். பெரும்பான்மை யானவர்களுக்குக் கட்டப்படுத்த இயலாத செயலும் இணைந்தே வெளிப்படும். இன்னும் சிலருக்கு வித்தியாசமான சில வெளிப்பாடுகள் இருக்கலாம். மனதில் ஏதாவது நினைத்தால் உண்மையிலேயே நடந்துவிடுவது போலத் தோன்றும்.

உதாரணமாக ஒருவர் இறந்துவிடுவதாக நாம் நினைத்தால், அது நடந்துவிடுவதாகக் கற்பனை எண்ணம் தோன்றும். இதை மந்திர எண்ணம் (Magical Thoughts) என்கிறார்கள்.

இன்னும் சிலருக்குச் சில எண்ணிக்கை மீது அதீத ஈடுபாடு இருக்கும். அதாவது ஒரு விஷயத்தை ஏழு முறை செய்தால்தான் திருப்தி வரும். கேள்வி கேட்டாலும் சரியாக ஏழு முறை கேட்பார்கள். இதை மந்திர எண் நோய் (Magic number Disorder) என்கிறோம்.

சரியாக இருக்கிறோம்

மூளையில் தகவல் பரிமாற்றச் செயல்பாட்டைச் செய்யும் செரட்டோனின் (Serotonin) ரசாயன மாற்றம்தான் இதற்குக் காரணம். திடீர் மனஅதிர்ச்சியால் இம்மாதிரியான ரசாயன மாற்றம் ஏற்படலாம். பொதுவாக இம்மாதிரி மனப் பிரச்சினை, வளரிளம் பருவத்திலேயே வெளிவரத் தொடங்கிவிடும்.

மேலே குறிப்பிட்டது போன்ற சிற்சில பிரச்சினைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படுத்துவார்கள். தொடக்கத்திலேயே இதைக் கண்டறிந்துவிடும்பட்சத்தில் சில எளிய மனப் பயிற்சிகள் மூலமே இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த முடியும்.

அதாவது எண்ணங்களைத் தடுக்கும் முறையில் (Thought Stopping Techniques) இதைக் கட்டுப்படுத்த முடியும். உதாரணமாக, ஒரு ரப்பர் பேண்டைக் கையில் சுற்றி, அந்த எண்ணம் வரும்போது இழுத்துவிட்டால் சுளீர் என வலி வருமல்லவா. அப்படி வலிக்கும்போது, "நாம் நினைப்பது ஒரு கற்பனை எண்ணம். நாம் சரியாகத்தான் இருக்கிறோம். சுத்தமாகத்தான் இருக்கிறோம்" என எதிராகத் தோன்றும் எண்ணத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

மருத்துவர் அருள் பிரகாஷ்,
தொடர்புக்கு: arulmanas@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x