Last Updated : 15 Jun, 2019 11:23 AM

 

Published : 15 Jun 2019 11:23 AM
Last Updated : 15 Jun 2019 11:23 AM

சிகிச்சை டைரி 09: மருத்துவரின் அலட்சியத்தால் விளைந்த அறுவைசிகிச்சை

பள்ளிக் காலத்தில் விளையாட்டு வீராங்கனையாக இருந்தேன். அதனால் எந்த நோயும் எளிதில் என்னைத் தாக்காது என நம்பிக்கொண்டிருந்தேன். காய்ச்சல், இருமல்கூட எப்போதாவதுதான் வரும். ஆனால், திடீரென ஒருநாள் வயிற்றின் இடதுப் பக்கத்தில் கட்டி போன்ற உருண்டை இருந்ததைக் கவனித்தேன்.

ஒருவேளை வாயு பிரச்சினையால் இதுபோல் இருக்கலாம் எனப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், சில மாதங்களிலேயே வயிற்றிலிருந்த கட்டி சற்றுப் பெரிதாக வளர்ந்திருந்தது. கணவரிடம் சொன்னபோது ‘‘இப்படிச் சொல்லிக்கொண்டே இருக்காமல், உடனடியாக மருத்துவரைச் சென்று பார்” என ஆறுதலுக்குப் பதிலாகத் தீர்வை முன்வைத்தார்!

சில மாதங்கள் கழித்து மருத்துவரைச் சென்று பார்த்தேன். என்னைப் பரிசோதனை செய்த அவர், “கட்டி பெரிதாக உள்ளது. உடனே ஸ்கேன் எடுத்துப் பாருங்கள்” என்றார். நானும் ஸ்கேன் எடுத்துவிட்டு மருத்துவரை மீண்டும் பார்த்தேன்.

ஸ்கேன் அறிக்கையைப் பார்த்த அவர் “வயிற்றில் உள்ள கட்டி நான்கு செ.மீ. அளவுக்கு உள்ளது, இது கொழுப்புக்கட்டிதான் பயப்படத் தேவையில்லை. இந்தக் கட்டியை மாத்திரையால் கரைக்க முடியாது. எதிர்காலத்தில் உங்களுக்கு ஏதாவது வலி இருந்தால் அறுவை சிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டும்” எனச் சொல்லி அனுப்பிவைத்தார்.

சந்தேகம் சரியானது

மருத்துவர் சொன்ன எதிர்காலம், ஏதோ வயதான பிறகுதான் வரும் என நினைத்தேன். ஆனால், நான்கு மாதத்துக்குள் கட்டியின் அளவு முன்பிருந்ததைவிடப் பெரிதாகவும் கொஞ்சம் வலிக்கவும் தொடங்கியது. வண்டி ஓட்டிக்கொண்டிருந்த போதுகூட வயிற்றில் உண்டாகும் வலியை என்னால் உணர முடிந்தது. மறுபடியும் அதே மருத்துவமனைக்குச் சென்றேன். ஆனால், இந்த முறை மற்றொரு மருத்துவர் என்னைப் பரிசோதனை செய்தார்.

“இது கொழுப்புக் கட்டியாக இருக்காது, உங்கள் முந்தைய ரிப்போர்ட்டில் உள்ளதைவிட, இப்போது கட்டியின் அளவு பெரிதாக உள்ளதாகத் தோன்றுகிறது. பொதுவாகக் கொழுப்புக் கட்டிகள் கை வைத்து அழுத்தினால் மிருதுவாக இருக்கும். ஆனால், உங்களுடைய கட்டி கடினமாக உள்ளது. மீண்டும் ஒரு முறை ஸ்கேன் எடுங்கள்” என அறிவுறுத்தினார்.

ஆனால், அடுத்த ஸ்கேனிலும் கொழுப்புக்கட்டி என்றுதான் முடிவு வந்தது. ஆனால், கட்டியின் அளவு தற்போது பத்து செ.மீ. வளர்ந்திருந்தது. கொழுப்புக் கட்டி என ஸ்கேனில் வந்தாலும் அறிக்கையைப் பார்த்த மருத்துவர் “ஸ்கேனில் கொழுப்புக்கட்டி என்றுதான் வந்துள்ளது.

ஆனால், எனக்குச் சந்தேகமாக உள்ளது.” என்று கூறி, குடல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரின் முகவரியைக் கொடுத்து, உடனடியாகச் சென்று பார்க்கும்படி அறிவுறுத்தினார்.

பெண்களைத் தாக்கும் டெஸ்மாய்டு

உடனடியாக, குடல் அறுவை சிகிச்சை நிபுணரைப் பார்த்தேன். அவர் சி.டி. ஸ்கேன் எடுத்து வரச் சொன்னார். சி.டி. ஸ்கேன் அறிக்கைப்படி டெஸ்மாய்டு கட்டி (Desmoid tumor) என்ற கட்டி வயிற்றின் சதைப் பகுதியில் உருவாகியிருப்பதாகவும் அந்தக் கட்டியை அறுவை சிகிச்சை செய்துதான் அகற்ற முடியும் என்றும் மருத்துவர் தெரிவித்தார். அறுவை சிகிச்சை செய்து அகற்றும் அளவுக்கு அப்படி என்ன மாதிரியான கட்டி என்னைப் பாதித்துள்ளது என இணையத்தில் தேடி வாசிக்கத் தொடங்கினேன்.

டெஸ்மாய்டு கட்டி புற்றுநோய் கட்டியல்ல என்பது ஆறுதல் தரும் செய்தியாக இருந்தது. இதுபோன்ற கட்டி ஆண், பெண் இருவருக்கும் வரக்கூடுமாம். பொதுவாகப் பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகு அல்லது முறைப்படுத்தாத முறையில் கருக்கலைப்பு செய்வதால் டெஸ்மாய்டு கட்டி வரலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்தக் கட்டி ஏன் வருகிறது என்பதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ச்சி தொடர்கிறது. ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் டெஸ்மாய்டு கட்டியின் பாதிப்பு அதிகம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அறுவைசிகிச்சை அறையில்…

மேலும், காலம் தாழ்த்தாமல் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றிவிட முடிவெடுத்தோம். சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற நான் அறுவை சிகிச்சை அறையைப் பார்த்தது அதுவே முதல்முறை.

பெரிய பெரிய விளக்குகள், ஏராளமான கத்தரிக் கோல், தையல் போடும் கம்பிகள், உறைய வைக்கும் குளிருடன் அந்த அறை நிசப்தமாக இருந்தது. எனக்கு அறுவை சிகிச்சை செய்ய நான்கு மருத்துவர்கள் இருந்தனர்.

மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் என்னுடைய முதுகுத் தண்டில் மூன்று பெரிய ஊசி மருந்துகளைச் செலுத்தினார். அதிலும் இடுப்பு எலும்பில் போடப்பட்ட மூன்றாவது ஊசியின் வலியை, இப்போது நினைத்தால்கூட உடல் சிலிர்க்கிறது.

ஊசி போடப்பட்ட பிறகு மயக்கமருந்து கொடுக்க முகத்தில் ஆக்ஸிஜன் முகமூடி மாட்டப்பட்டது. அருகிலிருந்த மருத்துவர் “மூச்சை நன்றாக உள்ளே இழுங்கள்” என்றார். அவ்வளவுதான், மூன்று மணி நேர அறுவை சிகிச்சையில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

கண் விழித்துப் பார்த்தபோது குடும்பத்தினர் எதிரில் இருந்தனர். ஆனால், என்னால் மயக்கத்திலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை.பிறகுதான் கணவர் சொன்னார் ‘கட்டி 12 செ.மீ அளவு இருந்தது, பார்க்க ஒரு நுங்கு அளவு உருண்டையாக இருந்தது’ என்று. அறுவை சிகிச்சை செய்ததால் வயிறு முழுக்க தையல்கள் போடப்பட்டிருந்தன.

ஏன் சந்தேகம் வரவில்லை?

அறுவை சிகிச்சையால் ஐந்து நாட்கள் உணவு எடுத்துக்கொள்ள அனுமதியில்லை. உணவுக்குப் பதில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.  இறுதி நாளில்தான் திரவ உணவு எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி யிருந்தார்கள். உடனே சூடாக ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

டீயை வாயில் வைத்து உறிஞ்சியதுதான் தாமதம் உடனே வாந்தி வந்தது. அத்தோடு டீ மீதிருந்த ஆசை போய்விட்டது. வீட்டுக்கு வந்ததும் தாகம் தீரத் தண்ணீர் குடிக்க வேண்டும் என நினைத்து மடமடவென ஒரு சொம்பு தண்ணீரைக் குடித்துவிட்டேன்.

ஐந்து நாட்கள் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்த கொஞ்ச நேரத்தில் குடித்த தண்ணீர் முழுக்க மடமடவென வாந்தியாக வெளியே வந்தது. அடுத்த சில நாட்களுக்கு உடல் முன்புபோல் இல்லை.

நான்தானா இது என எனக்கே கேள்வி எழுந்தது. என்ன சாப்பிட்டாலும் வாந்தி, உடல் வலி என உருவமே மாறிப்போயிருந்தது. இந்த எண்ணத்திலிருந்து விடுபட எனக்கு உதவியாக இருந்தவை புத்தகங்கள்தாம்.

‘ரூமில் இருக்காதே ரோமுக்குப் போன’ என ஹோவர்ட் ஃபாஸ்ட் எழுதி ஏ.ஜி. எத்திராஜுலு மொழிபெயர்த்த ‘ஸ்பார்ட்டகஸ்’ புத்தகம், இரா.முருகவேள் எழுதிய ‘முகிலினி’, ரேச்சல் கார்சனின் ‘மௌன வசந்தம்’ உள்ளிட்ட புத்தகங்கள் அடுத்து வந்த நாட்களை நம்பிக்கை அளிக்கும் விதமாக மாற்றின. மருந்துகளும் புத்தகங்களும் தந்த சிகிச்சையில் தற்போது நலமாக உள்ளேன்.

ஆனால், ஒரு கேள்வி மட்டும் என்னையும் என் குடும்பத்தினரையும் குடைந்துகொண்டே இருக்கிறது. முதல் பரிசோதனையிலேயே அது கொழுப்புக்கட்டிதான் என்று அடித்துச் சொன்னார் முதலில் பரிசோதித்த மருத்துவர். அது கொழுப்புக் கட்டியா, வேறு வகைக் கட்டியா என்ற சந்தேகம் நமக்கு வராமல் போகலாம்.

நாம் மருத்துவம் படிக்கவில்லை. ஆனால், மருத்துவரான அவருக்கு அந்தச் சந்தேகம் வந்திருக்க வேண்டுமல்லவா? அறிக்கைகள் வேறு மாதிரிச் சொன்னாலும், இரண்டாவது மருத்துவருக்கு அந்தச் சந்தேகம் வந்தது. அதனால்தான் அறுவை சிகிச்சையும் நடந்து இன்று நான் நலமாக உள்ளேன். ஆனால், முதல் மருத்துவர் அது கொழுப்புக்கட்டிதான் என்று அடித்துச் சொன்னாரே. அவருக்கு ஏன் அந்தச் சந்தேகம் வரவில்லை?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x