Last Updated : 01 Jun, 2019 11:59 AM

 

Published : 01 Jun 2019 11:59 AM
Last Updated : 01 Jun 2019 11:59 AM

காயமே இது மெய்யடா 35: வா வா பெண்ணே!

பிரபஞ்சம் நெருப்பு, நிலம், காற்று, நீர், ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களால் ஆனது. அண்ட வெளியில் இருப்பதுதான் பிண்டம் எனும் மனித உடலிலும் அவை இருக்கின்றன. இந்த ஐம்பூதங்களின் ஆற்றல் வடிவமாகத்தான் ராஜ உறுப்புகள் எனும் உள் உறுப்புகள் செயல்பட்டு, உடலை இயக்கியும் கட்டுப்படுத்தியும் வருகின்றன.

கருவில் உருக்கொள்ளும் இந்த ஐம்பூத உறுப்புகள் வெவ்வேறு கட்டங்களாக வளர்ச்சி பெற்று ஆண்களுக்கு 32 வயதிலும், பெண்களுக்கு 28 வயதிலும் முழுமை பெற்று விடுகின்றன. பாரம்பரிய உடலியல் முறைகள் ஆணை நெருப்பின் வடிவம் என்றும் பெண்ணை நீரின் வடிவம் என்றும் வகைப்படுத்துகின்றன.

உடலின் மாற்றங்கள்

ஆணுக்குப் பருவ மாற்றங்கள் எட்டின் மடங்கு. பெண்ணின் பருவ மாற்றங்கள் ஏழின் மடங்குகளாக நிகழும். எனவே, ஆறேழு வயதில் விழத் தொடங்கும் பல், எலும்பு வளர்ச்சி முழுமையடையும் ஏழு வயதுக்குள் முழுமையடைந்து விடும்.

பல் விழுந்து முளைக்கும் ஏழுவயது வரை அதில் ஏற்படும் எந்த மாற்றத்தையும் நாம் பொருட்படுத்த வேண்டியதே இல்லை. பல் கட்டுதல் பல்லை நேராக்குதல் போன்ற பல் தொடர்பான எந்தக் குறுக்கீட்டையும், சிகிச்சையையும் மேற்கொள்ளத் தேவையில்லை.

பல் விழுந்து முளைத்ததும் பெண்களுக்கான சுரப்புகளில் மாற்றங்கள் நிகழத் தொடங்கி விடுகின்றன. அதாவது பெண்ணின் தனித்துவமான பிள்ளைப் பேற்றுக்கான ஆதார உறுப்புகள் வளரத் தொடங்குகின்றன.

மார்பகங்கள் சிறிய அளவில் குமிழத் தொடங்கும். முகத்திலும் உடலின் பல்வேறு பாகங்களிலும் இருக்கும் மென் முடிகள் மறைந்துவிடும். தலைமுடி வேகமாக வளர்ச்சியுறும். குழந்தைப் பருவத்துக்கு உரிய சதையின் தளர்வுத் தன்மை குறைந்து இறுகத் தொடங்கும்.

உயர வாக்கிலான வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். தோலில் பதத் தன்மை கூடும். அதே நேரத்தில் முன்பு இருந்துவந்த தோலின் மென்மை குறையும். பல் விழுந்து, முளைத்த அடுத்த ஏழாவது ஆண்டில் பெண் பூப்படைவாள். சினைப்பையும் உள்ளகமாக உருப்பெறத் தொடங்கும்.

கேடு விளைவிக்கும் மாற்றங்கள்

தற்கால வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், நள்ளிரவில் தூங்குவது ஆகிய மாற்றங்கள் அனைத்தும் உடலுக்குள் சுரப்பிகளையும் மாற்றத்துக்கு உள்ளாக்குகின்றன. எனவே, பருவ மாற்றங்களும் இயல்பாக இருப்பதில்லை.

 குழந்தைப் பருவம் முதலே குடிக்கும் பசும் பாலிலிருந்து பவுடர் பால் வரைக்கும் அத்தனையும் ரசாயனக் கலப்பாக இருக்கிறது. ரசாயனக் கலப்பின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அவற்றைச் செரிக்க அல்லது அவற்றை உடலில் தேங்கவிடாமல் வெளியேற்ற உள்ளுறுப்புகள் இயல்புக்கு மாறாக உழைக்க வேண்டியுள்ளன.

உள்ளுறுப்புகளின் இயல்புக்கு மாறான உழைப்பு, சுரப்புகளில் பெரிய  மாற்றங்களை விளைவிப்பதால் உடலிலும் அதன் வளர்ச்சிப் போக்கிலும் மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

அதன் தொடர் விளைவுதான் 12 அல்லது பதிமூன்று வயதிலேயே பெரும்பாலான பெண் குழந்தைகள் பூப்பெய்தி விடுகின்றனர். பூப்பெய்வதுடன் மட்டுமல்லாது மாதாந்திர உதிரப் போக்கும் ஒரே சீராக இருப்பதில்லை.

சீராக இருப்பதில்லை என்பதால் உதிரப் போக்கின்போது தொல்லைகள் ஏற்படுகின்றன. உடல் தொல்லைகளுக்கு ஈடுகொடுக்க இயலாமல் அடுக்கடுக்கான கோபங்களை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

புரிதல் அவசியம்

மாதாந்திர உதிரப் போக்கு காலங்களில் பெண், வெளிப்படுத்தும் கோப, பய உணர்வைக் குடும்ப உறுப்பினர்களும்  குணக்கேடாகவே புரிந்துகொள்கின்றனர். முன்னெப்போதையும்விடப் பெண், பொதுவெளிக்கு வந்துவிட்ட காலமிது.

கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றில் பெண்களுக்கு உதிரப் போக்குக் காலத்தில் கூடுதல் அனுசரணை தேவைப்படுகிறது. இது ஏதோ பெண்ணின் தனிப்பட்ட பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் போக்குதான் இன்றுவரை நிலவுகிறது.

பால் புகட்டப் பொது இடத்தில் ஒரு மறைவிடம் ஒதுக்கும் பெருமனதை அடைந்த அரசு, உதிரப்போக்குக் காலத்தில் பெண்களை எப்படி அணுகுவது என்ற புரிதலை அடைய வேண்டும்.

வலியைக் குறைக்கும் வழிகள்

பூப்பெய்திய பெண், தனது மாதாந்திர வலியை முடிந்த மட்டிலும் குறைத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.தலைமுடியைப் பராமரிக்கச் சிரமமாக இருப்பதாலும், போதிய கால அவகாசம் இல்லாமல் இருப்பதாலும் பள்ளிக்கு, வேலைக்குச் செல்லும் பெண்கள் தலையில் நீர் விட்டுக் குளிப்பதில்லை.

பெண்ணுடலின் வெப்பம் அன்றாடம் சமநிலைப்படுத்தப்பட வேண்டும். உடலின் புற இயக்கம், (உள்ளுறுப்புகளின்) அக இயக்கம், செரிமானச் செயல்பாடு எனப் பல்வேறு வகைகளில் உடலில் வெப்பம் உயர்வது தவிர்க்க முடியாதது. உடலைக் குளிரூட்டுகிறேன் என்று நுகரும் ஏசியும் உடலுக்கு வெப்பத்தையே ஏற்றும்.

தொடர்ந்து உடலுக்கு வெப்பமேற்றுவதற்கான வாய்ப்புதான் அதிகரித்துச் செல்கிறதே தவிர உடலின் வெப்பத்தைத் தணிப்பதற்கான சாத்தியங்கள் ஆண்டுக்காண்டு குறைந்து வருகின்றன. பெண்ணுடலில் வெப்பம் அதிகரித்துச் செல்வதால் அதற்குரிய தனித்துவ ஆற்றலான இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக, மாதந்தோறும் சினை முட்டை களைந்து உதிரத்துடன் கலந்து வெளியேறும் நாட்களில் பெரும் உயிர் வாதையாக இருக்கும். உதிரப்போக்குக் காலத்தில் ஏற்படும் கடும் அடிவயிற்று வலி, இடுப்பு வலி போன்றவை உடலின் வெப்ப மிகுதியாலேயே ஏற்படுகின்றன. குளிர்ச்சிப்படுத்தவென்று வெந்தயத்தை ஊறவைத்து விழுங்குவது, தற்காலிக நிவாரணம் கொடுப்பதுபோலத் தோன்றினாலும் காலப் போக்கில் வேறு சில எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

உதிரப் போக்கு காலத்தில் எதிர்கொள்ளும் உடல் தொல்லைகளிலிருந்து விடுதலை பெற எளிய வழி அன்றாடம் மேற்கொள்ளும் மிக நிதானமான குளியல்தான். எப்படிக் குளிப்பது என்பதை முன்னர் பார்த்துள்ளோம். ஆனால், குளிப்பதால், சினைப்பையிலும், கருப்பையிலும் ஏற்படும் நல் விளைவுகள் குறித்தும் உடல் சூடேறாமல் தடுப்பதற்கான எளிய வழிமுறைகள் குறித்தும் வரும் வாரங்களில் விரிவாகப் பார்க்கலாம்.        

(தொடரும்...)

கட்டுரையாளர்,

உடல்நல எழுத்தாளர்

தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x