Last Updated : 22 Jun, 2019 11:38 AM

 

Published : 22 Jun 2019 11:38 AM
Last Updated : 22 Jun 2019 11:38 AM

காயமே இது மெய்யடா 38: பெண் உடலினை உறுதி செய்

நீரின் இயல்பைப் போலவே பெண்ணுடலும் வளைந்து நெளிந்து இயங்கும் தன்மை உடையது. பெண், அகம், புறம் இரண்டாலும் தன்னை வயப் படுத்திக்கொள்ளும் தன்மை பெற்றவள். ஆனால், உடலின் புறத்தோற்றம் குறித்தான அக்கறை கொள்வதற்குப் போதிய மன அவகாசத்தைக்கூட அளிப்பதில்லை இன்றைய வாழ்க்கை நெருக்கடி.

தற்கால வாழ்க்கை குறித்த எண்ணவோட்டம், பெண்ணுக்குத் தன்னுடல் குறித்த கவனத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறது. தன்னைப் புறவயமாக ஆடை, அணிகலன்களால் அலங்கரித்துக்கொள்வதாக மட்டுமே உடல் குறித்த பெண்ணின் அக்கறை சுருங்கிவிட்டது.

ஆதி வேட்டைச் சமூகம் தொடங்கி நேற்றைய வேளாண் உற்பத்திச் சமூகம் வரை பெண்ணுடலுக்குப் புறக் கவர்ச்சியும் அக ஆற்றலும் தரத்தக்க  உழைப்பு முறை இருந்தது. பெண்ணின் பதின்மம் அவளுக்கே உரிய தனித்த  விளையாட்டுகளால் நிறைந்திருந்தது. கில்லி தாண்டுதல், குதித்து ஓடி ஒளிதல், பாடிக் கும்மியடித்தல், பாண்டி, அஞ்சாங்கல் போன்ற மனமும் உடலும் ஒன்றிச் செய்த விளையாட்டுகள் அனைத்தும் பருவத்துக்கே உரிய  புற அழகை அளித்தன.

உள்ளுறுப்புகளைச் சீர்மை செய்தன. அவளது ஆளுமைப் பண்பையும் வளர்த்தன. உடலை, கை கால்களை நீட்டி வளைத்து, மனம் ஒன்றிச் செய்வதற்குரிய வேலைகளோ விளையாட்டுக்களோ இன்றைய தலைமுறைப் பெண்ணுக்கு இல்லை. வயிற்றை உள்ளே உந்தி, கால், இடுப்புப் பகுதிகளை வலுப்படுத்தி மனதை ஒன்றச் செய்யும் கோலம் போடும் பயிற்சி கூட அரிதாகிவருகிறது. அந்தப் பருவத்துக்கே உரிய உடலியக்கம் இன்மையால் பெண்ணின் புற அழகு மிக வேகமாகச் சிதைந்து வருகிறது.

இடுப்பில் மிகும் கொழுப்பு

தற்காலத்தில் பெண்களுக்கு உடலசைவின்மையும், நுண் சத்துக்கள் அற்ற மிகைச் சத்து உணவுகளும் பெண்களின் இடுப்புப் பகுதியில் மிகைக் கொழுப்பு படியக் காரணமாக இருக்கின்றன. இடுப்புப் பகுதியில் படியத் தொடங்கும் கொழுப்பு திரித்திரியாக மேல் நோக்கி மார்பு வரையிலும் கீழ்நோக்கி முழங்கால் வரையிலும் திரட்சி அடைந்து வருவது பரவலாகிவிட்டது.

முப்பது வயதில் முதுமைக்குரிய சலிப்பும் அயர்ச்சியும் பெண்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. நாற்பது வயதுக்குள் முழங்காலுக்குக் கீழ் நரம்பு சுருண்டு பச்சைக் கழிவுகள் தேங்கி நடப்பது பெரும் பிரயத்தனமாகி விடுகிறது.

வயிற்றுப் பகுதியில், குறிப்பாகத் தொப்புள் பாகத்தைச் சுற்றி வளைய மாகத் திரளும் கொழுப்பு கருப்பை விரிவு கொள்வதற்கான சுதந்திர வெளிக்குத் தடையாக இருக்கிறது. அதேபோல் பிறப்புக்கு முந்தைய இறுதி மாதங்களில் கருப்பையில் குழந்தை சுழன்று வெளியேற ஒத்திகை பார்க்கவும், தாயின் இடுப்பு எலும்பில் (pelvic bone) கால் வைத்து உந்தவும் இடுப்புப் பகுதியில் சேரும் கொழுப்பு வசதிக் குறைவை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற பல காரணங்களை உத்தேசித்துத்தான் உடல், கருக்கொள்ள மறுக்கிறது. எனவேதான் பூப்பெய்தியது தொடங்கி குழந்தையை ஈன்றெடுக்கும்வரை எப்போதும் பெண்ணுக்கு உடல் குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது.

ரத்த ஓட்டச் சீரின்மை

இளம் வயதில் ஏற்படும் ரத்த ஓட்டச் சீரின்மையே தைராய்டு சுரப்பின் ஏற்ற இறக்கங்களுக்குக் காரணமாகும். பதின்ம வயதிலிருந்து 21 வயதுவரை பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு ரத்த ஓட்டச் சீரின்மையே வேர்க் காரணமாக இருக்கலாம். ரத்த ஓட்டம் சீராக இல்லாதபோது தைராய்டு சுரப்பும் முறையாக இருக்க முடியாதுதானே.

ஆக, ரத்தவோட்டத்தைச் சீராக்குவதற்குப் பதிலாக, தைராய்டு சுரப்பைக் கட்டுப்படுத்தும் சிகிச்சையே இங்கு மேற்கொள்ளப்படுகிறது. தைராய்டு சுரப்பைக் கூட்டவோ குறைக்கவோ மேற்கொள்ளும் சிகிச்சை, உட்கொள்ளும் மருந்துகளின் உப விளைவாக வேறுபல சுரப்புகள் குளறுபடிக்கு உள்ளாகித்  தொடர் பிரச்சினைகள் உருவாகின்றன. 

சுரப்புகள் அனைத்துக்கும் சமச்சீர் உணவு, மனச் சமநிலை அளவுக்கு உடலியக்கத்துக்கும் முக்கியமான பங்குண்டு. உடலின் அனைத்துப் பாகங்களும் சீராக இயங்குவதை உறுதிப்படுத்திக்கொள்வது முக்கியம். வெறித்த பார்வைகள் எதையும் பொருட்படுத்தாமல் கூச்சமின்றி இளம் பெண்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

கை கால்களை நீட்டி அசைத்தல் தொடங்கி உடல் முழுக்க அதிரும்படியான ஸ்கிப்பிங் வரை அனைத்து வகையான பயிற்சிகளையும் பயில ஆழ்மன விருப்பத்துடன் இருக்க வேண்டும். எந்தக் கோணத்திலும் பெண் உடலியக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அழுத்தமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இயற்கை அலங்காரமே நல்லது

அதிகாலையில் வாங்கிங் போவது பாதுகாப்புப் பிரச்சினையாக இருக்கும், இந்த வயதிலேயே சர்க்கரையா என்ற விசித்திரமான கேள்விகள் போன்ற பல்வேறு தடைகளையும் புறந்தள்ளி  பெண், தன்னுடலைப் பராமரிக்கப் போதிய நேரத்தை ஒதுக்கியாக வேண்டும்.

நேர்த்தியான,  கச்சிதமான உடல்வாகை உருவாக்கிக் கொண்டால் அதைக் குறித்த பெருமித உணர்வே புற அலங்காரங்கள் மீதான நாட்டத்தைக் குறைத்துவிடும்.

நகப்பூச்சு தொடங்கி தலைக்குப் போடும் மைவரை அத்தனை நவீன அலங்காரப் பொருட்களும் அதீத வாசனை மிக்கதாகவும் செயற்கை ரசாயனங்களை மூலப் பொருளாகக் கொண்டதாகவும் இருப்பதால், அவை கல்லீரலையும் சிறுநீரகத்தையும் கடுமையாகப் பாதிக்கின்றன.  அழகு சாதனங்களிலும் முடிந்தவரை இயற்கையானவற்றைத் தேர்ந்து கொள்ள வேண்டும். அது சாத்தியமே.

பெண்களுக்கு ஏற்ற உடை

அதுபோலவே உடை விஷயத்திலும் நமது புறச் சூழலுக்கு ஒவ்வாதவற்றையே இளம் பெண்கள் தேர்வு செய்கின்றனர். உணவும் மன இறுக்கமும் உடல் சதையைத் தளர்த்தித் தொங்கச் செய்வதாக இருக்க உடைகள் மட்டும் உடலை இறுக்கிக்கட்டும்படியாக இருக்கின்றன. இறுக்கமான உடை, ரத்த ஓட்டத்தைத் தடுக்கக்கூடியது.

வெப்ப மண்டலத்தைச் சேர்ந்த நம் பெண்களுக்குப் பாரம்பரியமான பாவாடை தாவணி மற்றும் சேலை போன்றவை வயிற்றுப் பகுதியில் அதிகரிக்கும்  வெப்பத்தைச் சதா ஆற்றிக்கொண்டே இருக்கும்.  பாவாடை – தாவணி தற்கால வாழ்க்கைமுறைக்கு இடையூறு என்று கருதினால் தளர்ந்த எளிதில் காற்றோட்டம் இருக்கும்படியான உடைகளையே வடிவமைப்புச் செய்ய வேண்டும்.

வடிவமைப்பில் ஆடம்பர அலங்காரத்துக்குத் தரும் முக்கியத்துவத்தில் பெண்ணுடல் நலனுக்கும் தர வேண்டும். ஆண்களைப் போல முழு பேண்டும் முக்கால் கைச் சட்டையும் நமது சூழலுக்கு ஏற்ற காற்றோட்டத்துக்கும் இயக்கத்துக்கும் பொருத்தமாகவே இருக்கும்.

பதின்ம வயதில் தனது உடல் நலனுக்கு உரிய உணவு, உடற் பயிற்சி, மனப் பயிற்சி, உடைத் தேர்வு, வாழ்க்கை முறை அனைத்தும் உதிரப் போக்கைச் சீராக வைத்திருக்க உதவுவதுடன் வாழ்நாள் முழுமைக்குமான ஆரோக்கியத்துக்கும் காப்பரணாக இருக்கும். அடுத்து நீர் மூலகத்தின் மற்றொரு உறுப்பாகிய கர்ப்பப் பை குறித்துப் பார்ப்போம்.

(தொடரும்...)

கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்

தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x