Last Updated : 15 Jun, 2019 11:23 AM

 

Published : 15 Jun 2019 11:23 AM
Last Updated : 15 Jun 2019 11:23 AM

பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் வழிகள்

கடந்த ஆண்டு இதே நேரம் கேரள மாநிலத்தையே உலுக்கிய நிபா வைரஸ் காய்ச்சல், இப்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது.

பொதுச் சுகாதாரத்தில் மிகச் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பு, மருத்துவத் துறையின் அர்ப்பணிப்பு, மக்களிடையே ஏற்பட்டி ருக்கும் விழிப்புணர்வு ஆகியவை காரணமாக இந்த வைரஸ் காய்ச்சல் ஆரம்பத்திலேயே அங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கேரளத்தில் நிபா வைரஸைப் போல, தமிழ்நாட்டில் சில ஆண்டுகளாக இன்ஃப்ளுயன்சா (பன்றிக் காய்ச்சல்) எனப்படும் A(H1N1) வைரஸ் அவ்வப்போது பரவி வருகிறது, இந்த ஆண்டு அது இன்னும் தமிழகத்தில் தலைதூக்கவில்லை. இருப்பினும், வரும் முன் காப்பது நல்லது என்பதால், அதைத் தடுக்கும் வழிமுறைகள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.

இன்ஃப்ளுயன்சா A(H1N1) காய்ச்சல்

A(H1N1)  எனப்படும் இன்ஃளுயன்சா வைரஸ் கிருமிகளால் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி, தொண்டை வலி போன்றவை இன்ஃப்ளுயன்சா தொற்றின் அறிகுறிகள். சிலருக்கு மேற்கண்ட அறிகுறிகளுடன் வாந்தியோ வயிற்றுப்போக்கோ ஏற்படலாம்.

பன்றிக்காய்ச்சல் தொற்று

A(H1N1) கிருமித் தொற்று ஏற்பட்டவர் இருமும்போது அல்லது தும்மும்போது வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் நோய்க் கிருமிகள் காற்றில் பரவுகின்றன.

இந்த நீர்த்திவலைகள் படிந்த பொருட்களைத் தொடும்போது கைகளில் இந்த கிருமி ஒட்டிக் கொள்கிறது. கைகளைக் கழுவாமல் கண்களையோ மூக்கையோ வாயையோ தொடும்போது கிருமித் தொற்று ஏற்படுகிறது.

பன்றிகளிடமிருருந்து மனிதர்களுக்கு இந்நோய்த் தொற்று ஏற்படுகிறதா?

இல்லை. இந்த இன்ஃப்ளுயன்சா  A(H1N1) காய்ச்சல் பன்றிகளிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்றுவது இல்லை. ஆரம்பக் காலத்தில், அதாவது 1920-30களில் இந்த நோய் பன்றிகளிடையே காணப்பட்டதால் பன்றிக் காய்ச்சல் என அழைக்கப்பட்டது. தற்பொழுது இந்நோய் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து மட்டுமே மற்றவர்களுக்குப் பரவுகிறது.

சுற்றுப்புறச்சூழலில் வைரஸ் எவ்வளவு காலம் வாழும்?

இன்ஃபுளுயன்சா வைரஸ் கிருமிகள், தரைப்பரப்பு, கதவு, மேசைகள் போன்ற பரப்புகளில் பல மணி நேரம் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. குளிர்ந்த இடங்களில் இரண்டு நாட்கள் வரைகூட கிருமிகள் இருக்கலாம்.

கதவுக் கைப்பிடிகள், மேசைப் பரப்பு, நாற்காலிகள், மின் ஸ்விட்சுகள், தொலைபேசி போன்றவற்றைத் தினமும் ஒரு முறையாவது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதன் மூலமும் கைகளைக் கழுவுவதன் மூலமும் நோய்த் தொற்றைப் பேரளவு தடுக்கலாம்.

இன்ஃப்ளுயன்சா A(H1N1) தொற்று ஏற்படாமல் எவ்வாறு தடுப்பது?

# உங்கள் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். வீட்டிலிருந்து பள்ளிக்கோ அலுவலகத்திற்கோ பணியிடத்திற்கோ சென்றவுடன் கை கழுவ வேண்டும். அதே போல வீடு திரும்பியவுடன் சோப்பு போட்டு கை கால்களை நன்கு கழுவ வேண்டும்.

# கைகளைக் கழுவாமல் மூக்கு, வாய் மற்றும் கண்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

# காய்ச்சல் அறிகுறி உள்ளவரிடமிருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும்.

இன்ஃப்ளுயன்சா A(H1N1) காய்ச்சலுக்கு மருந்து இருக்கிறதா?

இன்ஃப்ளுயன்சா நோய் குணமாகவும் மேலும் நோய் எதிர்ப்பு சிகிச்சைக்காகவும் oseltamivir என்கிற சக்தி வாய்ந்த மருந்து உள்ளது. எந்தவிதமான காய்ச்சல் ஏற்பட்டாலும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

A(H1N1) காய்ச்சலாக இருந்தால், அறிகுறிகள் ஏற்பட்டவுடன் இந்த மருந்தை உட்கொண்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை உடனிருந்து கவனிப்பவர்களுக்கு மருத்துவ ஆலோசனையின் பேரில் தற்காப்பாக இந்த மருந்து வழங்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

# காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவ ஆலோசனை பெற்று முறையான சிகிச்சை பெற வேண்டும்.

# மருத்துவ ஆலோசனை இல்லாமல் தாமாகவே மருந்துகளை உட்கொள்ளுதல் கூடாது.

# நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் வீட்டிலேயே ஓய்வில் இருக்க வேண்டும்.

# பள்ளி, அலுவலகம், பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

# இருமும்போதும் தும்மும்போதும் வாய், மூக்கைக் கைக்குட்டை அல்லது துணியால் மூடிக்கொள்ள வேண்டும்.

# பயன்படுத்திய கைக்குட்டை, இதர துணிகளை நன்கு துவைத்து வெயிலில் காய வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

# பேருந்துகள், ரயில்கள், மாடிப்படி/எஸ்கலேட்டர் கைப்பிடிகள், கதவுக் கைப்பிடிகள், டிக்கெட் கவுண்டர்கள், லிப்ட் போன்றவற்றில் உள்ள ஸ்விட்சுகள், திரையரங்குகள் / பொது இடங்களில் உள்ள இருக்கைகள் போன்ற அடிக்கடி கைகள் படக்கூடிய இடங்களை அவ்வப்போது கிருமிநாசினிகள் கொண்டு சுத்தமாகத் துடைக்க வேண்டும்.

ஒரு சமூகம் தன்னை வளத்துடன் வைத்துக் கொள்வதற்குக் கல்வி, செல்வம் போல் பிரதானமாகக் கவனிக்கப்பட வேண்டியது சுகாதாரம். இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள நாட்டில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு என்பது இன்றியமையாதது. விழிப்புணர்வை வளர்ப்போம். நோயை வெல்வோம். உடல்நலத்தைக் காப்போம்.

 

கூடுதல் தகவல்களுக்கு: 104

உங்கள் பகுதியில் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாகப் பொதுச் சுகாதாரத் துறையின் 24x7 மணி நேரக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொள்க. குறுஞ்செய்தியாகவும் நீங்கள் தெரியப்படுத்தலாம்.

தொலைபேசி: 044 24350496 / 044 24334811

கைபேசி: 94443 40496 / 93614 82899

நன்றி:

தமிழ்நாடு பொதுச் சுகாதாரம் மற்றும், நோய்த் தடுப்பு மருந்துத் துறை

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x