Published : 31 Mar 2018 11:36 AM
Last Updated : 31 Mar 2018 11:36 AM
‘பிரச்சினைகள் பிரச்சினைகளில் இல்லை. பிரச்சினைகளை நாம் பார்க்கும் விதத்தில்தான் அவை பிரச்சினைகளாகின்றன ’
– ஸ்டீஃபன் கோவே
ராமசாமி, கிருஷ்ணசாமி இருவருக்குமே பதவி உயர்வு கிடைத்தது. ஒரே பதவிதான். ராமசாமிக்கோ ஒரே பதற்றம். புதுப் பதவி; பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமே; பொறுப்பு அதிகரிக்குமே; அடிக்கடி பயணம் செய்ய வேண்டுமே என்றெல்லாம் கவலைப்பட்டார். கிருஷ்ணசாமிக்கோ ரொம்ப மகிழ்ச்சி; பழைய போரடிக்கும் வேலைக்கு குட்பை; நமக்கு மரியாதை கூடும்; வருமானம் கூடும்; பல இடங்களை அலுவலகச் செலவில் சுற்றிப் பார்க்கலாம் என்றெல்லாம் ஒரே குஷி!
ஒரே விஷயத்தை இருவரும் பார்க்கும் விதம்தாம் அதைப் பிரச்சினையா இல்லையா என முடிவு செய்கிறது. ‘கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்’ என்னும் பழமொழியையே ‘நாய்ச்சிலை ஒன்றை நாயெனப் பார்த்தால் அது நாய்; அதுவே வெறும் கல்லென்று பார்த்தால் கல்தான்’ என்பதைத்தான் சொல்கிறது என்பார்கள்.
முற்றுப்புள்ளி இல்லா பந்தயம்
ஆங்கிலத்தில் மட்டுமல்ல; உலக மொழிகள் எல்லாவற்றிலுமே இன்று யாருக்கும் பிடிக்காத வார்த்தை ‘ஸ்டிரெஸ்’ எனப்படும் மன அழுத்தம். அதிலும் பொருள்மயமாக ஆகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தைகூட எனக்கு மிகவும் டென்ஷனாக இருக்கிறது எனக் கூறும் நிலையில்தான் இருக்கிறது.
‘ஃபாரெஸ்ட் கம்ப்’ என்ற படத்தில் கதாநாயகன் காரணமே இல்லாமல் சும்மா ஓடுவான். பலரும் அவன் ஏதோ நோக்கத்துக்காக ஓடுகிறான் எனத் தவறாக நினைத்துக்கொண்டு அவனுடனேயே ஓடுவார்கள். அதுபோல் பலரும் எதற்காக ஓடுகிறோம் என்பதே தெரியாமல் வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆகவே, எல்லாமே ஒரு பெரும் பந்தயமாகிவிட்டது. எனவே, வென்றாக வேண்டிய அழுத்தம் அதிகரிக்கிறது.
பார்வையை மாற்றுவோம்
மன அழுத்தம் ஏன் வருகிறது? இதுதான் இலக்கு என நினைத்திருப்பதை அடைய நம்மால் இயலாதபோது அல்லது இயலாது என நாம் நினைக்கும்போது வருகிறது. ஒரு ஓவரில் இருபது ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையோ மறுநாள் தேர்வுக்குள் ஐம்பது பக்கங்கள் படிக்க வேண்டும் என்ற நிலையோ நமக்கு அழுத்தத்தைத் தருகின்றன.
மனரீதியாக மட்டுமின்றி உடல்ரீதியான பல கோளாறுகளுக்கும் மன அழுத்தமே காரணமாக அமைகிறது. ஆகவேதான் மேலை நாடுகளில் மன அழுத்தத்தை நீக்கும் பயிற்சிகள், சிகிச்சைகள் போன்றவை கோடிக்கணக்கான டாலர்கள் சந்தை மதிப்புடையவையாக இருக்கின்றன.
மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான முதல் வழி நாம் பார்க்கும் முறையை மாற்றிக்கொள்வதே. அதீதமான எதிர்பார்ப்புகளையும் யதார்த்தத்துக்குக் கொஞ்சமும் பொருந்தாத குறிக்கோள்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஸ்டிரெஸ்ஸே வேண்டாமா?
மாறாக, எல்லோரும் நினைப்பதுபோல் மன அழுத்தம் என்பது ‘பீப்’ ஒலிகொண்டு மறைக்க வேண்டிய கெட்ட வார்த்தை அல்ல. மன அழுத்தம் என்பது தேவையான ஒன்றே. பிரச்சினைகள் வரும்போதுதான் புதுப்புது வாய்ப்புக்கள் வருகின்றன. தேர்வுகளே இல்லாவிட்டால் பலரும் பாடப் புத்தகங்களையே தொட மாட்டார்கள்.
நாம் பல துறைகளில் வெற்றி பெற்ற முதல் தலைமுறையினர் அளவுக்கு அடுத்த தலைமுறையினர் சிறந்து விளங்காமல் போவதைப் பல இடங்களில் பார்க்கிறோம். அதற்குக் காரணம் வென்றே ஆக வேண்டிய கட்டாயமும் அழுத்தமும் இல்லாமல் போவதே.
மன அழுத்தம் ஒரு அளவுவரை நமக்குத் தேவையான ஒன்றே. ஆங்கிலத்திலே இதை யூஸ்டிரெஸ் (நல்ல அழுத்தம்) என்கிறார்கள். அந்த அழுத்தம் கொடுக்கும் வேகம், நமது கவனத்தை மேம்படுத்தித் திறமையை வளர்க்க உதவுகிறது. ‘அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது’ என்பார்கள்.
அதுவே ஒரு அளவுக்கு மேல் போனால் டிஸ்டிரெஸ் எனப்படும் கெட்ட மன அழுத்தமாகிறது. அது நமது உற்சாகத்தைக் குறைத்து, செயல்திறனை வெகுவாகப் பாதிக்கிறது.
அலுவலகங்களில் ‘டார்கெட்' எனப்படும் இலக்குகளை வைத்து ஆராய்ந்ததில், இலக்குகளே வைக்காமல் ஜாலியாக வேலை பார்ப்பதைவிட மிதமான இலக்குகளை வைத்துக்கொண்டு கொஞ்சம் அழுத்தத்துடன் வேலை பார்க்கும்போது உற்பத்தித் திறன் கூடுகிறது எனக் கண்டறிந்துள்ளனர். அதேநேரம் மிகையான அதீத இலக்கும் உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது எனவும் அதே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தினேஷ் கார்த்திக் எத்தனையோ ரன்கள் எடுத்திருந்தாலும், கடைசி பந்தில் அடித்த சிக்ஸர் அவருக்குப் பெரும் புகழைக் கொண்டுவந்தது அல்லவா? இதுவே ஐந்து ஓவர்களில் ஒரு ரன் அடிக்க வேண்டும் என்ற இலக்கு இருந்திருந்தால், அதை அடைவதில் என்ன பெருமை இருக்கிறது? கானமுயலைக் கொன்ற அம்பைவிட, யானை பிழைத்த வேல் ஏந்துவதுதானே இனிது எனக் குறள் கூறுகிறது. பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கையை வேண்டுவதைவிடப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறனை வேண்டுவதே புத்திசாலித்தனம். யதார்த்தமும்கூட.
பிரச்சினைகளும் மன அழுத்தமும் ஓர் அளவுக்கு நமக்குத் தேவையானவையே. அவை அதீதமாகப் போகாத சமநிலையே நலம் தரும் நான்கெழுத்து.
கட்டுரையாளர்,
மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT