Published : 10 Mar 2018 12:27 PM
Last Updated : 10 Mar 2018 12:27 PM
த
னது கடைசி நிமிடங்களைச் சுவாசித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் காதில் விஞ்ஞானி ஜார்ஜ் கே, ‘உங்களுடைய செல்கள் உங்களை அமரராக வைத்திருக்கப் போகின்றன’ என்று முணுமுணுத்திருக்க வேண்டும்.
அந்தப் பெண்ணுக்கு உலகிலேயே சிறந்த வலிநிவாரணிகள் அளிக்கப்பட்டும் வலியைத் தாங்க முடியாத நிலையில், அவர் புன்னகைத்தார். ஆனால் அவர் இறந்து பல தசாப்தங்கள் ஆனபிறகும் அவருடன் சேர்ந்து ‘இறவாமை’ என்ற பெயர் தொடர்ந்து கூடவே வரும் என்பதை, அப்போது அவர் நிச்சயமாக அறிந்திருக்க மாட்டார்.
அவர் பெயர் ஹென்ரிட்டா லேக்ஸ். வர்ஜீனியாவில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 31 வயது புகையிலை விவசாயி அவர். கருப்பையின் மேல் பகுதியில் ஒரு முடிச்சிருப்பதாக உணர்ந்த அவர், ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகச் சென்றார். பல வகைகளிலும் இயல்பற்ற ஒரு புற்றுநோய் அவரது முழு உடலையும் ஆக்கிரமிக்க இருந்தது. அவர் இறந்து போகும்போது, அவரது உள் உறுப்புகள் அனைத்தையும் பெரிய பெரிய கட்டிகள் ஆக்கிரமித்துவிட்டன.
அமரத்துவம் வாய்ந்த செல்கள்
அவரது ‘பயாப்சி’ சோதனைக்காக எடுத்த திசுக்களில் ஒரு பகுதி, விஞ்ஞானி ஜார்ஜ் கேயின் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கண்ணுக்கே தெரியாத ஒரு கொத்து செல்கள் ஜார்ஜ் கேயின் வாழ்வையே மாற்றி, போலியோ தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கான வழியாக மாறியது.
கே தனது வாழ்வில் முப்பது ஆண்டுகளை, மனித செல்களை ஆய்வுக்கூட கண்ணாடிப் பேழையில் வைத்துப் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சியிலேயே செலவழித்திருந்தார். ஹென்ரிட்டாவின் செல்கள் ஆராய்ச்சிக்கு வரும்வரை, அவர் தனது ஆராய்ச்சியில் மிகச் சிறிய வெற்றியையே பெற்றிருந்தார். ஹென்ரிட்டாவின் செல்கள் (அந்த செல்களுக்குப் பெயர் ‘ஹெலா’ (HELA - ஹென்ரிட்டா லேக்ஸின் சுருக்கம்), வளரத் தொடங்கிய சில நாட்களில், 24 மணிநேரத்துக்கு ஒரு முறை இரட்டிப்பு வளர்ச்சியை அடைகின்றன என்பதைத் தெரிந்துகொண்டார். ஊட்டமும் இடமும் இருந்தால் அந்த செல்கள் பல்கிப் பெருகுமென்பதையும் தெரிந்துகொண்டார்.
மரணமே இல்லாத முதல் ‘அமர செல்கள்’-ஐ அவர் தனது நுண்ணோக்கியில் பார்த்துக்கொண்டிருந்தார். இரண்டு வாரங்களிலேயே லட்சக்கணக்கான அளவில் மற்ற ஆராய்ச்சியாளர்களும் பரிசோதிக்க எடுத்துச் செல்லும் அளவுக்கு அவை வளர்ந்தன. ஜார்ஜ் கே, தனது பல்லாண்டு கால ஆராய்ச்சியில் மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளதை அவர் உணர்ந்தார். நவீன மருத்துவத்தையே தனது கண்டுபிடிப்பு மாற்றப் போவதையும் அவரால் அவதானிக்க முடிந்தது.
ஹென்ரிட்டாவின் இறப்புக்குப் பின்னர், போலியோ தடுப்பு மருந்து உருவாக்கத்தில் HELA செல்கள் முக்கியப் பங்கை வகித்தன. ஜோனஸ் சல்க் என்ற விஞ்ஞானி ‘ஒயிட் டிசீஸ்’ (அப்போது போலியோ வெள்ளையினத்தவருக்கு மட்டுமே வரும் என்று கருதப்பட்டு வந்தது) என்று அழைக்கப்பட்ட போலியோவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்த போது, தனது பல்வேறு தடுப்பு மருந்துகளை அவர் பரிசோதித்துப் பார்ப்பதற்கு ஆட்கள் தேவைப்பட்டனர். ஒரு கறுப்புப் பெண்மணியிடமிருந்து எடுக்கப்பட்ட ஹெலா செல்கள் போலியோ வைரஸை எதிர்த்து நிற்குமென்பது இப்பரிசோதனையில் நிரூபணமானது. பரிசோதனை செய்யப்பட்ட நபர்களிடமிருந்து எடுக்கப்பட்ட நிணநீரால் ஹெலா செல்கள் பாதிக்கப்படாததால், அத்தடுப்பு மருந்து வலுவானதென்று முடிவுசெய்யப்பட்டது.
செல்லும் ஒரு நபரும்
‘தி இம்மார்ட்டல் லைப் ஆப் ஹென்ரிட்டா லேக்ஸ்’ நூலில் அதன் ஆசிரியர் ரெபேக்கா ஸ்க்லூட், ஹெலா செல்கள்களுக்குப் பின்னாலுள்ள மனிதகுல வரலாற்றைப் புரிந்துகொள்ள முயல்கிறார். ஹென்ரிட்டாவின் குடும்பத்தினருடன் பத்து ஆண்டுகளுக்கு மேலான உரையாடலிலிருந்தும் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனை ஆவணங்களிலிருந்தும் இந்தப் புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.
ஹென்ரிட்டாவுக்கு தீர்க்கவே முடியாத நாட்பட்ட நோய் நிலைமைகள் இருந்ததை மருத்துவர்கள் இந்த நூலாசிரியரிடம் தெரிவித்துள்ளனர். நியூரோசிபிலிஸ், கொனேரியா, தொடர்ந்த தொண்டைப் புண் தொற்று, பல் சிதைவு, கர்ப்பத்தின்போது ரத்தப்போக்கு ஆகியவை இருந்துள்ளன. வலியால் அதீதமாக அவஸ்தைப்பட்டாலொழிய மருந்துகளையோ சிகிச்சைகளையோ அவர் எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளார். அத்துடன் ஓரளவு தேறிவிட்டதாக நினைத்துவிட்டால், மருத்துவத்தை உடனடியாக நிறுத்திவிடுவதையும் அவர் வழக்கமாகக்கொண்டவர்.
வெள்ளையின மருத்துவ நிலையங்களின் மீதான நம்பிக்கையின்மை பொதுவாகவே ஆப்பிரிக்க அமெரிக்க மக்களிடம் தீவிரமாக நிலவி வந்த காலம் அது. இந்நிலையில்தான், தனது 30-வது பிறந்த நாளுக்குப் பின்னர் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அவர் சென்றார். அன்றைக்கு அமெரிக்காவில் அந்த ஒரு மருத்துவமனை மட்டுமே கறுப்பின நோயாளிகளை அனுமதிக்கும் இடமாக இருந்தது. அங்குதான் ஜார்ஜ் கே, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகளை முணுமுணுத்தார்.
அந்த மருத்துவமனை, கறுப்பர்களுக்கென பிரத்யேக ‘கலர்டு ஒன்லி’ வார்டுகளையும், பிரத்யேக கறுப்பின மனிதர்களுக்கான ரத்த வங்கிகளிலிருந்து ரத்தத்தை வாங்குவதாகவும், கறுப்பர்களுக்கென தனிக்குழாய்களையும் பராமரித்து வந்தது. அங்கு ஹென்றிட்டா லேக்ஸுக்குச் சிகிச்சையளிக்க எந்தக் கறுப்பின மகப்பேறு மருத்துவர்களும் இல்லை. இந்நிலையில், அவர் இறந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான், தன் தாய்க்கு ஹெலா செல்கள் எப்படி வந்தன என்பதைப் பற்றி விளக்குவதற்கு அன்றைக்கு எந்த மருத்துவருக்கும் தெரியவில்லை என்பதை அவரது மகள் புரிந்துகொண்டார்.
செல் பாதுகாப்பில் புரட்சி
ஹெலா செல்கள், உயிரியல் பொருட்கள் எப்படிப் பார்க்கப்பட வேண்டுமென்பதையும் கையாளப்பட வேண்டுமென்பதற்கும் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஹெலா செல்களை வளர்ப்பதற்கெனவே மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், கன்வேயர் பெல்ட் டெக்னாலஜியைப் பயன்படுத்த தொடங்கின, ஆய்வுத் தொழில்நுட்பத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
பலவிதமான தொற்றுகள், பாதிக்கப்பட்ட எதிர்ப்பு ஆற்றல் மண்டலத்தைக் கொண்ட பெண்ணிடமிருந்து எடுக்கப்பட்ட இந்த செல்களைக் கையாள்வதற்குக் கடுமையான நடைமுறைகள் தேவையாக இருந்தன. அவை ரப்பர் மூடிகள் கொண்ட ஆய்வுக் குழாய்களில் மற்ற ஆய்வகங்களுக்கு எடுத்துச் செல்லப்படவும் தபாலிலும் அனுப்பப்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
ஒரு கட்டத்தில் மனிதர்கள் செல்வதற்கு முன்பாகவே ஹெலா செல்கள் வான்வெளிக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. தனது சொந்த ஊரான வர்ஜீனியாவுக்கு வெளியே தொலைதூரம் எங்கும் சென்றிராத ஒரு பெண்ணின் செல்கள், பனிப்போர் காலகட்டத்தில் இரும்புத்திரை என்று கருதப்பட்ட ரஷ்யாவுக்குள்ளேயே ஊடுருவிச் சென்றன.
ஹென்ரிட்டாவின் உடலைப் பாதித்து, அவரது உயிரையே பறித்த அபாயகரமான புற்றுநோய் செல்கள், ஆரோக்கியமான மனித செல்களின் இயக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருந்தன. ஒரு திசுவில் இருக்கும் மற்ற செல்களுடன் ஒரு செல் எப்படித் தொடர்புகொள்கிறது, புரதங்களை எப்படி உற்பத்திசெய்கிறது என்ற உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு உதவிகரமாக இருந்தன. மனித குரோமோசோம்களை அதன் அத்தனை வண்ணங்களோடும் டெக்னிகலரில் பார்ப்பதற்கும் ஹெலா செல்கள் ஒருகட்டத்தில் உதவின. இதன் அடிப்படையில் படிப்படியாக மனித மரபணு ஆய்வுத்திட்டத்தில் பல வளர்ச்சிகள் ஏற்படவும் காரணமாக இருந்தது.
குடும்பம் அனுபவித்த துன்பங்கள்
ஹென்ரிட்டா பங்களித்த ஹெலா செல்கள் மூலம் மருத்துவத் துறையில் நடந்த சாதனைகளை அறியாதவர்களாகவே அவருடைய குடும்பத்தினர் இருந்தனர். அவர் இறந்து 20 ஆண்டுகளான பின்னரும், ஹெலா செல்களின் மரபியலை ஆராய்வதற்காக ஒரு விஞ்ஞானி அவரது குடும்பத்தினரை அழைத்து ரத்த மாதிரிகளை எடுத்தார். ஹென்ரிட்டாவின் கணவரோ தனது மனைவி இன்னும் எங்கேயோ உயிரோடு இருப்பதாக நம்புகிறார்.
தான் சடலமாகப் புதைத்த ஒரு பெண்ணின் உடலிலுள்ள செல்கள் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் இன்னமும் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் தகவலே அவருக்குப் பீதியை அளித்ததாக ஸ்க்லூட் இடம் பகிர்ந்திருக்கிறார். போலியோ பாதிக்கப்பட்ட ஹென்ரிட்டாவின் உறவினர் ஒருவர், கல்லறைக்குப் போன பிறகும் தனது உறவுக்காரப் பெண் தனக்கு உதவுவதாக நன்றி தெரிவிக்கிறார். அவர்களைப் பொறுத்தவரை அறிவியலும் புனைவும் பிரியும் எல்லைகள் எப்போதும் மங்கலாகவே உள்ளன.
ஹென்ரிட்டாவின் மகள், தனது தாயின் எண்ணற்ற குளோன்கள் லண்டனில் உயிர்களாக நடமாடுவதாக நம்புகிறார். கதிரியக்கத்தால் அவர்கள் பாதிக்கப்படும்போது, வைரஸ்களால் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும்போது தனது தாய்க்கு இன்னும் வலிக்குமா என்று ஸ்க்லூட்டிடம் கேட்டுள்ளார். தனது அம்மாவின் செல்கள் இறவாமையை அடைந்திருக்கும் நிலையில் தனது அம்மாவையும் உயிருடன் கொண்டுவர முடியுமா என்று விஞ்ஞானிகளிடம் கேட்கிறார் அவரது மகள்.
லேக்ஸின் குடும்பத்தினரிடம் செய்த நிறைய நேர்காணல்களில் அவர்கள் ஹெலா செல்கள் குறித்துக் குறிப்பிடும்போதெல்லாம், அவள் என்றே குறிப்பிடுகின்றனர். அவர்கள் அறிவியலை எப்படிப் பார்க்கின்றனர் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. தனது தாயார் மருத்துவத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்கு இழப்பீடோ அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்று அவருடைய குழந்தைகளுக்கு வருத்தம் உள்ளது.
ஹெலா செல்லின் கதையை அவர்கள் கூடுதலாகப் புரிந்துகொள்ளும் போதெல்லாம் அவர்கள் நவீன மருத்துவத்தின் மீது கூடுதல் சந்தேகம் அடைகின்றனர். ஹென்ரிட்டாவின் கணவர் தனக்கு வந்த கேங்கரின் நோய்க்கு மருத்துவம் செய்துகொள்ளவே மறுத்துவிட்டார். அவரது மகனும் ஆன்ஜியோப்ளாஸ்டி சிகிச்சையை ஏற்க மறுத்துவிட்டார்.
விஞ்ஞானிகள் பலரும் ஹென்ரிட்டாவை ஒரு மனுஷியாக அணுகாமல் ஒரு கட்டியாகவே பார்க்கும் நிலை உள்ளது. ஹென்ரிட்டாவின் திசுக்களை எடுத்த முதல் ஆய்வக பரிசோதனையாளர்கூட, அவரது கால் நகங்களில் நக பாலீஷ் இருந்ததைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். செல்களுக்கும் மனித உயிருக்கும் இடையிலான தொடர்பை அவர் நினைத்தே பார்க்கவில்லை.
அமெரிக்க தேசத்தைக் கட்டியெழுப்பியதில் கறுப்பினத்தவர்களின் பங்களிப்புகாக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் ‘கறுப்பர் மாதம்’ கொண்டாடப்படும். அப்படி கடந்த மாதம், ஹென்ரிட்டாவின் பங்களிப்பைப் பலரும் நினைவுகூர்ந்தனர். போலியோ தடுப்பு மருந்துகளுக்கான பிரச்சாரத்தை இந்தியா அமைதியாக முடித்திருக்கும் நிலையில், ஏழாவது ஆண்டாக போலியோ நோய் இல்லாத இந்தியாவாக இருக்கும் நிலையில் நாமும் ஹென்றிட்டா லேக்ஸையும் ஹெலா செல்லையும் அவர்களது குடும்பத்தினரையும் நினைவுகூர்வது மிகவும் அவசியம். ஏனென்றால் அவர்களது வாழ்க்கை, கோடிக்கணக்கான குழந்தைகள், பெற்றோர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது!
தமிழில்: ஷங்கர்
© பிளிங்க் (பிஸினஸ் லைன் இணைப்பிதழ்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment