Published : 24 Mar 2018 11:11 AM
Last Updated : 24 Mar 2018 11:11 AM
பெ
ற்றோர்களுக்கு இருக்கும் குறைந்த நேரத்தில் அவர்களால் டெக்னாலஜியின் வேகத்துக்கு ஏற்பத் தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியாது. அவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் பெரிதும் உதவும். பொதுவாக, இந்த மாதிரியான வகுப்புகளைப் பெற்றோர்கள் வேப்பங்காயாகப் பார்க்கிறார்கள். டிஜிட்டல் பற்றிய விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கும்போது பெற்றோர்கள் மத்தியில் ஒரு வித வெறுப்பு இருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு இதைப் பற்றி மெல்ல விளக்கும்போது சுவராசியம் உருவாகிவிடும். எல்லாம் டிஜிட்டல் ஆண்டவரின் கவர்ச்சி. வகுப்பை முடிக்கவிட மாட்டார்கள்.
விழிப்புணர்வு வகுப்புகளை எக்காரணம் கொண்டும் முன்முடிவுடன் அணுகாதீர்கள். அது உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் பல நன்மைகளை ஏற்படுத்துவதற்கான சாவி. மாறி வரும் இத்தகைய தொழில்நுட்பங்களை ஓரளவுக்காவது அறிவது, அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு வகுப்புகளில் கலந்துகொள்வது, கட்டுரைகள், புத்தகங்கள் போன்றவற்றைப் படிப்பது போன்ற செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுங்கள்.
தொழில்நுட்பத்தின் அசுர வேகத்துக்கு இணையாக இல்லாவிட்டாலும், அதைப் பின்பற்றிச் செல்லும் அளவுக்காவது மேம்படுத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால், உங்கள் குழந்தைகள் தங்களை ‘அப்-டு-டேட்’ ஆக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏதேனும் பிரச்சினையில் சிக்கும்போது, அவர்களுக்கு ஆதரவாக இருக்கவும் அவர்களை அதிலிருந்து மீட்கவும் உங்களால் நிச்சயம் முடியும்.
உதவிக் குழுக்கள்
பெற்றோர்கள், குழுவாகத் தமக்குள் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது நன்மை தரும். வீடியோ கேம்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த அமெரிக்காவில் உள்ள பெற்றோர்கள், குழுவாக இணைந்து செயல்படுகின்றனர். அதுபோன்ற குழுக்களை உருவாக்குவது அவசியம். பள்ளியிலோ நீங்கள் வசிக்கும் இடத்திலோ இந்த மாதிரியான குழுக்களை உருவாக்கி, அதன் மூலம் பல தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.
நிபுணர்களை நாடுங்கள்
வீடியோ கேம் பிரச்சினை என்று வந்தால் குழந்தைகள் மனநல மருத்துவர் அல்லது குழந்தைகள் மனநல ஆலோசகர் ஆகியோரை நாட வேண்டும். அவர்கள்தாம் உங்களுக்குச் சிறப்பாக உதவக்கூடும். மன நலம் பற்றி இன்று சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதை முழுமையாகப் பெற அத்துறைசார் நிபுணர்களை நாடுவதுதான் சிறந்தது. தயங்காமல் அவர்களை நாடுங்கள். பிரச்சினையை நீங்களே தீர்க்க முனைந்து பெரியதாக்கி விடாதீர்கள்.
சிறப்புச் சிறுவர்கள்
கற்றல் குறைபாடு, கவனக் குறைவு, நினைவாற்றல் குறைவு, ஆட்டிஸம், அட்டென்ஷன் டெஃபிஸிட் ஹைப்பர் டிஸ்ஆர்டர் (ஏ.டி.எச்.டி), மாற்றுத் திறன் சிறுவர்கள் என இவர்கள் அனைவருக்கும் வீடியோ கேம்கள் பல நன்மைகளை வழங்குகின்றன. எனினும், அதீதமாக விளையாடினால் பல பிரச்சினைகள் வர சாத்தியமுள்ளது. மருத்துவர்கள், சிறப்புக் கல்வியாளர்கள் பரிந்துரைக்கும் வீடியோ கேம்கள் இவர்களின் வாழ்க்கையில் பல நன்மைகளை ஏற்படுத்துவது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
கட்டுரையாளர்,டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: digitaldiet2017@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment