Published : 03 Mar 2018 01:09 PM
Last Updated : 03 Mar 2018 01:09 PM

டிஜிட்டல் போதை 24: பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

 

வீ

டியோ கேம்களின் வகை, அவை எப்படி நம்முள் நுழைகின்றன, அதன் தாக்கம் என்ன என்று மிகவும் விரிவாகப் பார்த்தோம். இப்போது அதை எப்படி அணுகுவது என்பதைப் பற்றிப் பார்ப்போம். பெற்றோர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய கேள்வியே, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்பதுதான். அதற்கான விடையைத் தேடுவோம்.

கண்ணை மூடி கொள்ளாதீர்கள்

முதலில் பெற்றோர்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம் தயவுசெய்து கண்களை மூடிக்கொண்டு, இந்தப் பிரச்சினையை அணுகாதீர்கள். வீடியோ கேம்கள் பல வகையில் நம் பிள்ளைகளிடம் நுழைந்துவிட்டன, இனிமேலும் நுழையும். இதுதான் உண்மை. இன்றில்லை என்றாலும், நாளை நுழையும். அது பல கோடி டாலர் சந்தை. பெருநிறுவனங்கள் தங்கள் லாபத்துக்காகச் சிறுவர்களிடம் வீடியோ கேம்களைப் பல விதங்களில் வெறித்தனமாக உள்நுழைக்க முயல்கின்றன.

சில நேரம் கல்விக்கான வீடியோ கேம் என்று நுழையலாம். நல்ல விஷயங்களைக் கற்றுத் தருவதற்காக என்று கூறிக்கூட நுழையலாம். இதெல்லாம் நடக்கவில்லை என மறுப்பது -

“என் குழந்தையை நான் அப்படி வளர்க்கவில்லை”

“எங்கள் குழந்தைகள் எல்லாம் சமத்து”

“எங்கள் வளர்ப்பு ரொம்ப நல்ல வளர்ப்பு”

“சீ சீ, என் பிள்ளை எல்லாம் வீடியோ கேம் விளையாடாது”

“நாங்க ரொம்ப ஸ்டிரிக்ட், என் பிள்ளைக்கு வீடியோ கேமே கொடுக்க மாட்டோம்”

இந்த மாதிரியாகப் பல விதமான வாக்கியங்களைக்கொண்டு உங்கள் கண்ணை மூடிவிட்டு, உலகம் இருட்டாகிவிட்டது எனக் கற்பனை செய்துகொள்ளாதீர்கள். இந்த மாதிரியான கற்பனைகள் கேட்க நன்றாக இருக்கும். உண்மையில் பலன் தராது. முதலில் இந்த மாதிரியான கற்பனைகளில் இருந்து வெளியே வருவோம்.

தொழில்நுட்ப உரையாடல்

ன்று பல குடும்பங்களில் தொலைந்து போய்விட்ட ஒன்று குடும்ப உரையாடல். தனிமையில் இருப்பதால்தான் இணையம், வீடியோ கேம்களை ப்பிள்ளைகள் நாடிச் செல்கிறார்கள். பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்குமான உறவு மிகவும் முக்கியமானது. அதில் உள்ள இடைவெளியைத்தான் வீடியோ கேம்கள் நிரப்புகின்றன. குறிப்பாக, உங்கள் பிள்ளைகளுடன் அவர்கள் விளையாடும் வீடியோ கேம்களைப் பற்றி உரையாடுங்கள். அவர்களிடமிருந்து நீங்கள் கற்கலாம், அவர்களுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கலாம். உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்குமான இந்த உரையாடல் எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ, அவ்வளவு பாதுகாப்பாக உங்கள் பிள்ளைகள் வளருவார்கள்.

பெற்றோர்களே காரணம்

அதிர்ச்சியளிக்கும் வகையில், பிள்ளைகள் அதீத வீடியோ கேம் விளையாடுவதற்குக் காரணம் பெற்றோர்கள்தான் என்கின்றன பல ஆய்வு முடிவுகள். பெற்றோர்களே பல நேரம் பிள்ளைகளை வீடியோ கேம் விளையாட ஊக்கப்படுத்துகிறார்கள் என்பது மிகவும் சோகமான உண்மை.

இப்போது பல பெற்றோர்களின் பிரச்சினையே பிள்ளை வெளியில் போய் விளையாடினால் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதுதான், அதற்காகத்தான் பிள்ளைகள் வீட்டினுள் வீடியோ கேம் ஆடினாலும் பரவாயில்லை, பத்திரமாக இருந்தால் போதும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

(அடுத்த வாரம்: அறிவு வளர்ச்சிக்கு எது அவசியம்?)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: digitaldiet2017@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x