Last Updated : 20 Apr, 2019 12:45 PM

 

Published : 20 Apr 2019 12:45 PM
Last Updated : 20 Apr 2019 12:45 PM

சிகிச்சை டைரி 01: நம்பிக்கையே மருந்து

நள்ளிரவு 12 மணி இருக்கும். என் மாமாவிடம் இருந்து போன் வந்தது. அத்தைக்கு ரத்தப் புற்றுநோயாக இருக்கலாம் என்று டாக்டர் சந்தேகிப்பதாகச் சொன்னார். உடனே மருத்துவமனைக்கு விரைந்தேன்.

அத்தைக்கு வந்திருப்பது ரத்தப் புற்றுநோய்தான் என்று டாக்டர் உறுதிப்படுத்தினார். இது ஆரம்ப கட்டம்தான் என்பதால் முழுவதும் குணப்படுத்திவிடலாம் என்றும் சொன்னார்.

நண்பர்களின் ஆலோசனைப்படி மறுநாள் காலையில் சிறப்புச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அந்த வார்டு முழுவதும் இருந்தனர்.

ஒன்பது வயதுக் குழந்தை முதல் 70 வயது மூதாட்டிவரை பலர் அங்கு இருந்தனர். கீமோதெரபியால் உடல் உருக்குலைந்து மிகவும் பலவீனமாக இருந்தாலும், வாழ வேண்டும் என்ற உறுதி அவர்களுடைய கண்களில் தென்பட்டது.

வீட்டுக்கு வந்த புது விருந்தாளியை வரவேற்பதுபோல், அத்தையை இன்முகத்துடன் அவர்கள் வரவேற்றனர். நாலு நாள் கீமோதெரபி இருக்கும், அதை மட்டும் எப்படியாவது சமாளித்துவிடு என்று அத்தையிடம் ஒரு மூதாட்டி சொன்னார். அத்தையின் பக்கத்துப் படுக்கையில் சுமார் 20 வயது நிரம்பிய பெண் படுத்திருந்தாள்.

 ட்ரிப்ஸ் மூலம் உள் செலுத்தப்படும் மருந்து உள்ளே செல்லாததால் கால்கள் வீங்கியிருந்தன. அவளுடைய அம்மா கால்களைத் தடவிக் கொடுத்தபடி, கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தார். “நான் தூங்கும்போது நீ கடவுளிடம் வேண்டிக்கொள். நான் விழித்திருக்கும்போது என்னிடம் பேசிக்கொண்டிரு அம்மா” என்று அந்தப் பெண் தன் அம்மாவிடம் சொன்னாள்.

முதல் ஊசியை உடம்பு ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அத்தை கொஞ்சம் சிரமப்பட்டார். மறுநாள் காலை அத்தையைப் பார்க்கச் செல்லும்போது, அத்தையின் அருகிலிருந்த அந்த இளம் பெண்ணின் படுக்கை காலியாக இருந்தது. அந்த மூதாட்டி சொன்னபடி மற்ற இரண்டு ஊசிகளை அத்தையின் உடம்பு சற்றுச் சிரமமின்றி ஏற்றுக்கொண்டது.

ஆனால், அந்த மூன்று நாட்களில் பல படுக்கைகள் காலியாயின. மூன்றாம் நாள் மாலையில் அந்த மூதாட்டியின் படுக்கையும் காலியானது. என் அத்தை வாசிக்கப் புத்தகம் கேட்டார். வாங்கிக் கொடுத்தேன். சிறிது நேரம் வாசித்தார். திடீரென்று, “இன்னும் ஒரு ஊசிதான் மிச்சம் இருக்கு” என்று சொன்னார். “நேரமாச்சு நீ கிளம்பு, காலையில் பார்ப்போம்” என்றார். ஆனால், அவரைப் பார்க்கும் அந்தக் காலை, வராமலே போனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x