Published : 18 May 2019 11:54 AM
Last Updated : 18 May 2019 11:54 AM
பல நூற்றாண்டுகளாக மக்களுக்குப் பிடித்தமான உணவுப்பொருட்களில் ஒன்றாக வெண்ணெய் இருந்து வருகிறது. வெண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை அளவுடன் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று சில அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வெண்ணெய் போன்ற பால் பொருட்களில் இருக்கும் இயற்கையான நிறை கொழுப்புகள் ஆரோக்கியம் தருவதாக அறிவியல் சமூகம் தெரிவிக்கிறது. வெண்ணெய்யில் இருக்கும் சில கொழுப்புகள், வைட்டமின்கள், கனிமங்களை உடல் ஏற்றுக்கொள்ளவைக்கும் குறிப்பிட்ட சுரப்பிகளை உற்பத்திசெய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இயற்கையான நிறை கொழுப்புகளை எடுத்துக்கொள்வது இதய நோயை உருவாக்குவதாகக் கூறப்படுவதற்குப் போதுமான ஆதாரமில்லை என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. வெண்ணெய்யில் இருக்கும் வைட்ட மின்கள், நிறை கொழுப்புகள் மூளை, நரம்பு மண்டல வளர்ச்சிக்கும் நல்லது. மனித உடலில் இருக்கும் நுரையீரல், இதயம், கல்லீரல், எலும்புகள், சுரப்பிகள் போன்றவைச் சீராகச் செயல்படுவதற்கு நிறை கொழுப்புகள் அவசியம் தேவைப்படுகின்றன.
வெண்ணெய் தேவைக்கான ஐந்து காரணங்கள்
இணைந்த லினோலெயிக் அமிலம்
இயற்கையாகத் தயாரிக்கப்படும் வெண்ணெய்யில், புற்றுகளைத் தடுக்கும் இந்த லினோலெயிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. இது தோல், நுரையீரல், பெருங்குடல், மார்பகங்களில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. அத்துடன், தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது.
பியூடிரிக் அமிலம்
வெண்ணெய்யில் 4 சதவீத பியூடிரிக் அமிலம் இருக்கிறது. இந்தச் சிறிய கொழுப்பு அமிலம் புற்றுகளின் வளர்ச்சியைத் தடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அத்துடன், உடலில் ஏதாவது நோய்த் தொற்று ஏற்பட்டாலும், இந்த அமிலம் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதற்கு எதிராகத் தூண்டி செயல்படவைக்கிறது.
வைட்டமின் கே2
# வெண்ணெய்யில் இருக்கும் வைட்டமின் கே2, எலும்பு அடர்த்தியை உறுதிசெய்கிறது.
# வெண்ணெய்யில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, இ, கே போன்றவை அதிக அளவில் இருக்கின்றன. இந்தச் சத்துகளை உட்கிரகிக்கும் தன்மை வெண்ணெய்யில் அதிகமாக இருக்கிறது.
இறுக்கத்தைக் குறைக்கும் தன்மை
வெண்ணெய்யில் இறுக்கத்தைக் குறைக்கும் தன்மை அதிகமாக இருக்கிறது. அதனால், ‘ஆஸ்டியோஆர்த்ரிட்டிஸ்’ போன்ற பிரச்சினைகள் உருவாவதைத் தடுக்கிறது.
வெண்ணெய்யில் 400-க்கும் மேற்பட்ட வித்தியாசமான கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. அளவுடன் எடுத்துக்கொண்டால், உடலின் ஆரோக்கியத்துக்குச் சிறந்த உணவுப்பொருளாக வெண்ணெய் செயல்படும் என்று அறிவியல் ஆராய்ச்சிகள் உறுதிசெய்திருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT