Published : 11 May 2019 10:55 AM
Last Updated : 11 May 2019 10:55 AM

சிகிச்சை டைரி 04: கேன்சரைக் கண்டுபிடித்த மருத்துவர்?!

‘தொண்டை வலி ரொம்ப ஓவரா இருக்குப்பா… ஒண்ணுமே சாப்பிட முடியல’ என்று அம்மா தொலைபேசியில் சொல்ல, ‘சென்னை வாங்களேன். நல்ல மருத்துவரிடம் கூட்டிட்டுப் போறேன்’ என்று சொன்னேன். அவரும் வந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

‘வாயை நல்லா திறங்க...’ என்று உள்ளே லைட் எல்லாம் அடித்துப் பார்த்தார் அந்த மருத்துவர். நான், அம்மா, மனைவி மூவரும் சென்றிருந்தோம். அடுத்த சில நொடிகளில் ‘கேன்சர் மாதிரி இருக்கு. இந்த டெஸ்ட் எல்லாம் எடுக்கணும்’ என்று எழுதிக் கொடுத்தார்.

கேன்சர் என்று எப்படிப் பார்த்தவுடன் சொன்னார் என்று எனக்குச் சந்தேகம் வந்தது. ஆனால் மனைவியும் அம்மாவும் உடனே அழத் தொடங்கிவிட்டார்கள். ஒரு மருத்துவர் நோயாளியிடம் எப்படி இப்படிச் சொல்லலாம் என்று கோபம் வந்தது. அம்மாவுக்கு கேன்சராக இருக்குமோ என்ற பயம் உள்ளூர நடுக்கத்தை ஏற்படுத்தியது.

கதறி அழுத குடும்பத்தினர்

அம்மாவுக்கு எப்போதுமே கடவுள் நம்பிக்கை அதிகம். ஊரில் உள்ள கோயில் பூசாரிக்கு எல்லாம் போன் போட்டு ‘பூஜை பண்ணுங்க. எனக்கு ஒன்றுமில்லை என்றால் முடி இறக்குகிறேன்’ என்று அழத் தொடங்கினார்.

என் அண்ணன், அக்கா என அனைவருக்கும் தகவல் செல்ல, குடும்பத்தில் ஒருவித பீதி தொற்றிக் கொண்டது. அம்மாவுடன் பிறந்தவர்களோ தகவல் அறிந்து  அழத் தொடங்கினார்கள்.

சைதாப்பேட்டையில் உள்ள புற்றுநோய் சோதனை மையத்துக்கு அம்மாவையும் மனைவியையும் அனுப்பிவைத்தேன். ஒரு வேளை கேன்சர் என்றால், உடனடியாகச் சரிசெய்துவிடலாம் என்ற எண்ணத்தில் பணம் தயார் செய்யும் வேலையைத் தொடங்கினேன்.

அம்மாவுக்கு டெஸ்ட் எல்லாம் முடிந்துவிட்டது என்று மனைவி கூற,  சைதாப்பேட்டைக்குச் சென்றேன். அம்மாவின் முகத்தில் ஒருவித உற்சாகம் தெரிந்தது.

அம்மா கொடுத்த ஊக்கம்

‘கேன்சர் எல்லாம் இருக்காதுப்பா… எனக்கு இங்க மாவு மாதிரி ஒண்ணு கொடுத்தாங்க. அதைக் குடிச்சேன். அப்போதிலிருந்து தொண்டையில் வலி இல்லப்பா’ என்று ஊக்கம் அளிக்கும் விதமாகப் பேசினார்.

எனக்கோ பையன் மனம் வருத்தப்படக் கூடாது என்று சொல்லுகிறாரோ என்ற பயம் வந்தது. அடுத்த நாள் மதியம்தான் ரிசல்ட் என்றார்கள். குடும்பத்தினர் அனைவருமே பயத்தில் இருக்க, அம்மாவோ ‘எனக்கு கேன்சர் எல்லாம் இல்ல’ என்று பேசிக் கொண்டிருந்தார்.

மருத்துவருக்கு விழுந்த திட்டு

ரிசல்ட் வந்தவுடன் பெசன்ட் நகரில் உள்ள எனது கிளினிக்கில் வந்து பாருங்கள் என்று மருத்துவர் ஏற்கெனவே சொல்லியிருந்தார். மதியம் போய் ரிசல்ட் வாங்கிவிட்டு, அதைக் கைபேசியில் போட்டோ எடுத்து நண்பனுக்கு அனுப்பினேன்.

‘ஒண்ணுமே இல்ல மச்சி. யார் சொன்னது கேன்சர் என்று…’ எனத் திட்டத் தொடங்கினான். எனக்கோ மருத்துவர் மீது கடுமையான கோபம் வந்தது. என்னவானாலும் பரவாயில்லை என்று மாலையில் மருத்துவரைப் பயங்கரமாகத் திட்டிவிட்டேன். அவருடைய கிளினிக்கில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் ஏதோ பிரச்சினை என்ற ரீதியில் என்னைப் பார்த்தார்கள்.

‘கேன்சர் மாதிரிதான் தெரிந்தது’ என்று அவர் ஆவேசமாகப் பேச, நானோ ‘கேன்சர் என்று தெரிந்தாலுமே, ஒரு வயதான பெண்ணிடம் கேன்சர் என்று எப்படிக் கூறலாம். என்னைத் தனியாகக் கூப்பிட்டு உங்கம்மாவுக்கு கேன்சர் மாதிரி இருக்குப்பா என்று தானே சொல்லியிருக்க வேண்டும்’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். 3 நாட்களாக வீட்டினர் அடைந்திருந்த பீதியை மருத்துவர் எப்படி அறிவார்?

அம்மாவுக்கு என்னதான் பிரச்சினை?

இறுதியில், அம்மாவுக்கு கேன்சர் இல்லை என்றால், என்ன பிரச்சினையாக இருக்கும் என்று யோசித்தேன். “கே.கே.நகரில் எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் இருக்கார். அவரிடம் அழைத்துச் செல்” என்று என்னுடைய உயரதிகாரி சொன்னார். அந்த மருத்துவர், கேன்சர் தொடர்பாக எடுக்கப்பட்ட அனைத்துப் பரிசோதனை அறிக்கைகளையும்.

‘யார் உங்களை இந்த டெஸ்ட் எல்லாம் எடுக்கச் சொன்னது?’ என்று பயங்கரமாகத் திட்டினார். இறுதியில் அம்மாவுக்கு என்ன பிரச்சினை தெரியுமா? ஓவராக மசாலா சேர்க்கப்பட்ட உணவைச் சாப்பிட்டிருக்கிறார். அதனால் அவருக்குத் தொண்டை முழுக்க புண்ணாகி இருக்கிறது. 2 மாத்திரையும் ஒரு டானிக்கும் கொடுத்துச் சரி செய்துவிட்டார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x