Last Updated : 18 May, 2019 12:11 PM

 

Published : 18 May 2019 12:11 PM
Last Updated : 18 May 2019 12:11 PM

காயமே இது மெய்யடா 33: உடலுக்குக் குளிர்ச்சி மனத்துக்கு மலர்ச்சி

கோடைக்காலத்தில் உண்ண வேண்டிய வற்றையும் உண்ண வேண்டிய முறைகள் குறித்தும் பார்க்கலாம். உள்ளிருந்து பிசுபிசுப் பான வியர்வை சுரக்கிறது என்றாலே உடலுக்குள் மாவுத்தன்மையும் கொழுப்புத் தன்மையும் (இரண்டுமே ஒன்றின் படிநிலைகள் தாம்) மிகுந்துவிட்டது என்று பொருள். எனவே முடிந்த அளவு இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, பிரட் போன்ற மாவுப் பலகாரங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதையும் சூடாக சாப்பிடுவதை முற்றாகத் தவிர்த்துவிட வேண்டும்.

முழுத்தானியமோ உடைத்த தானியமோ எதுவானாலும் நார்த் தன்மையுடன் நீர்க்கக் காய்ச்சி ஆற விட்டுக் குடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ரவா தோசை, ரவா உப்புமா செய்கிறீர்கள் என்றால் ரவையைக் கெட்டிக் கஞ்சியாகக் காய்ச்சி நன்றாக ஆறவிட்டுப் புளிக்காத மோர் கலந்து  சற்றுநேரம் ஊறவிட்டுப் பின்னர் குடிக்கலாம். மோரும் உணவுப் பண்டமும் இணைந்து ஊறும்பொழுது நொதித்துச் சிறு, பெருங்குடல்களுக்கு நன்மை செய்யும் கிருமிகள் அதில் தோன்றும்.

இதேபோல் சிறுதானியங் களைத் தனியாகவோ ஒன்றாகச் சேர்த்தோ ரவையாக இயந்திரத்தில் இட்டு உடைத்துக் கூழுக்குப் பதிலாகக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கலாம். அரிசிச் சோற்றிலும் கைக் குத்தல் அரிசியை உடைத்துக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடிப்பது ஒரு பக்குவம் என்றால் இன்னொரு விதமாகச் சோற்றைக் குக்கரில் வைப்பதற்குப் பதிலாக வடித்து, வடித்த நீரையும் சோறையும் ஆற விட்டு பின்னர் இரண்டையும் சேர்த்து ஊறவிட்டுக் கையால் பிசைந்து நீர்த்த ஆகாரமாக அருந்தலாம்.

அளவோடு குடிப்போம்

கோடை முடியும்வரை பொரித்த, வறுத்த எண்ணெய்ப் பலகாரங்களை முற்றாகத் தவிர்த்துவிட வேண்டும். நீர்த்தன்மையுள்ள பழங்கள், அவித்த பலகாரங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். பழச்சாறு அருந்துவதானால் ஒரே நேரத்தில் முந்நூறு, நானூறு மில்லி அருந்துவதைவிட அவ்வப்போது நூறு நூறு மில்லிகளாக அருந்துவதே சிறந்தது. உடலின் சூட்டைத் தணிக்கிறேன் என்று நிறைய ஐஸ் போட்டு அருந்துவதும் சிறுநீரகத்தின் வேலைப்பளுவை அதிகரிக்கவே செய்யும். ஆகவே, மிதமான குளிர்ச்சியை மட்டுமே ஏற்க வேண்டும்.

ஓலைகளைப் பரப்புவோம்

ஓலைக்கூரை, மண்தரை, மண்சுவர், கற்சுவர் உடைய வீடுகள் புறச் சூழலுக்கு எதிராக உள்ளே தம்மைக் குளிர்ச்சியாகவே வைத்திருக்கும். ஓடுகள் வெப்பத்தை ஈர்த்து வைத்து உள்ளே செலுத்துபவை. எனவே, ஓடுகள் மீது புல்லையோ, ஓலைகளையோ பரப்பிக் கவசமிடலாம். அதேபோல் கான்கிரீட், செங்கல்லால் ஆன சுவர்களும் பகலில் வெப்பத்தை ஈர்த்து வைத்து இரவில் வெளியிட்டுக் கொண்டே இருப்பன. எனவே, சுவர்களையும் தரைப்பகுதியையும் முடிந்த அளவு அவரவர்க்குச் சாத்தியமான வகையில் ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதீதக் குளிர்ச்சி, உடலுக்குக் கேடு

எடுத்துக்காட்டாகக் குளிர்பதன அறையில் வெப்ப காலம் என்பதால் மிகக் குறைந்த அளவு (16 டிகிரி அல்லது 18 டிகிரி) என்று வைத்துக்கொண்டு வேலைசெய்வது அல்லது தூங்குவதைக் காட்டிலும் மேற்படியளவை வைத்து அறைச் சுவர்களுக்குக் குளிர்ச்சி ஏற்றி பின்னர் குளிர்பதன இயந்திரத்தை அணைத்து விடுவதே உடலுக்கு நல்லது. உடலைப் புறத்திலிருந்து அதீதக் குளிர்ச்சிக்கு உள்ளாக்கினால் அது சிறுநீரகத்தின் வேலைப்பளுவை அதிகமாக்கிவிடும். புறக் குளிர்ச்சித் தாக்கத்தை எதிர்கொள்ள உடலின் வெப்பத்தை வெளிப்புறம் நோக்கி உந்தி வைப்பதால் சருமம், தொண்டை வறட்சிக்கு உள்ளாக நேரிடும். இதனால் குழந்தைகளும் வயதானவர்களும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

மரபை மாற்றுவோம்

வெளியில் அதிகமாகச் சுற்றுவதை முடிந்த அளவு குறைத்துக்கொள்வதே நல்லது. நீண்ட பகல் பொழுது உடைய நார்வே, ஸ்வீடன் நாடுகளில் காலை பத்து மணியிலிருந்து பகல் நான்கு மணிவரை எந்த அலுவலகமும் இயங்காது. கடைகள் அந்த நான்கு மாதமும் மூடியே கிடக்கும். பகலில் நான்கு மணிநேரம் தூங்கி எழுந்து மக்கள் மீண்டும் மாலையில்தான் வேலையைத் தொடங்குவார்கள். நாம் மொத்தச் சமூகமும் அப்படி மாறுகிறோமோ இல்லையோ உடலையோ பொது ஆதாரத்தையோ கசக்கிப் பிழியும்படியான வேலைச் சூழலை வைத்துக் கொள்ளக் கூடாது.

வீட்டிலிருந்தபடியே செய்யும் வேலைகள் பரவலாகிவரும் காலத்தில் உச்சிப் பொழுதில் அலைவதையும் வருத்தி வேலை செய்வதையும் குறைத்து வெப்பம் தணிவான காலை – மாலைப் பொழுதுகளில் வேலை செய்யும் பழக்கத்துக்கு மாற வேண்டும். மரபிலிருந்து விலகிச் சிந்திக்கும் பயிற்சியே நம்மிடம் இல்லை. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நமது பயில் முறையை மாற்றிக்கொள்ளும்போது மட்டுமே நமது வாழ்வை எளிதாக்கிக்கொள்ள முடியும்.

அடுத்த இதழில் நீரே வடிவான பெண்கள் குறித்துப் பார்ப்போம்.

(தொடரும்...)

கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x