Last Updated : 27 Apr, 2019 10:58 AM

 

Published : 27 Apr 2019 10:58 AM
Last Updated : 27 Apr 2019 10:58 AM

காயமே இது மெய்யடா 30: ஏன் இந்த தாகம் ?

புறச்சூழலில் வெப்பம் அதிகரித்திருக்கும்போது அதை எதிர்கொள்ள உடல் வியர்வையை உருவாக்கும். சிறுநீரகத்திலிருக்கும் நல்ல நீர் வியர்வையாக வெளியேறு வதில்லை. தோலுக்கு அடுத்த அடுக்கில் செல்லும் தூய்மைக் குறைவான ரத்தத்திலுள்ள நீரே வியர்வையாக வெளியேறுகிறது.

மற்ற காலத்தில் வெளியேறும் வியர்வையைவிட வெயில் காலத்தில் தோல் வழியாக வெளியேறும் வியர்வை உப்புகள் நிறைந்ததாக இருக்கும். ரத்தத்தில் தேங்கியிருக்கும் அடர்த்தியான கழிவு தோலின் வழியாக வெளியேறுகிறது. ஆக, வெயில் நமக்கு வெப்பத் தாக்கத்தை அளித்தாலும் மறுபுறம் உடலைத் தூய்மைப்படுத்தும் நன்மையும் செய்துவிடுகிறது.

தாகம் வேறு... சோர்வு வேறு...

உடலின் வெப்பத் தன்மையைச் சீராக்கும் சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பொறுத்தே நமக்குத் தாக உணர்வு ஏற்படும். தாகத்துக்கு ஏற்பவே நீர் அருந்த வேண்டும். வெயில் நேரத்தில் நிறைய நீர் அல்லது பானம் அருந்திச் சோர்வைப் போக்கிட முடியாது.

உடல் சோர்வுற்றிருந்தால் அதற்குத் தீர்வு ஓய்வு மட்டுமே. ஓய்வு எடுப்பதற்கு மாறாக எதையாவது உள்ளே செலுத்திவிட்டு உடலைத் தொடர்ந்து வருத்தினால் மயக்க உணர்வே ஏற்படும். தாகமும் சோர்வும் வேறுவேறு என்பதைப் புரிந்துகொண்டால் கோடையை எளிதில் கடந்து விடலாம்.

உடலின் வெப்பச் சமநிலையைப் பராமரிக்கச் சிறுநீரகம் கூடுதல் உழைப்பில் ஈடுபட்டிருக்கும்போது தேவைக்கு அதிகமாகக் குடித்த நீர், அதாவது தாகம் ஏற்படுவதைத் தடுக்கக் குடித்த நீர் அதற்குக் கூடுதல் சுமையாக ஆகிவிடும். எனவே, கூடுதலாக உள்ளுக்குள் செலுத்தப்பட்ட நீரை உடனடியாகச் சிறுநீரகப் பைக்கு அனுப்பி வெளியேற்றச் செய்யும்.

அப்போது ஏற்படும் சிறுநீர் வழக்கத்துக்கு மாறாக மிகவும் சீறிச் செல்வதாக இருக்கும். இந்தச் சீற்றம் சிறுநீர்ப் பைத் திசுக்களைச் சிதைப்பதோடு சிறுநீர்ப்பை யுரேட்டர், யுரேத்ரா குழாய்களையும் தளர்ச்சி அடையச் செய்துவிடும். இக்குழாய்கள் தொடர்ந்து தளர்ச்சி அடைந்தால் இயல்பான நேரத்தில் சிறுநீர் வழியாக வெளியேற வேண்டிய உப்புகள் படிந்து, சிறுநீர்ப் பையில் அடைப்பு ஏற்பட சாத்தியம் உண்டு.

இரண்டு முறை குளியுங்கள்

அதேபோல உடலில் நீர்க் கழிவோ உப்புப் படிவங்களோ பேரளவு சிறுநீர்த் தாரையில் தேக்கமடைந்திருந்தாலும், கோடைக்காலத்தில் சிறுநீர் குறைவாக வெளியாகி குறிமுனையில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படும்.

சிலருக்கு முனையில் கீறல் வடிவிலான வெடிப்பு தோன்றக் கூடும். சிலருக்குச் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும். சிலருக்குச் சிறுநீர் கழிக்க உந்துதல் ஏற்படும். ஆனால், வெளியாகாது.

சிலருக்குக் கழித்து முடித்த பின்னும் நிறைவு இருக்காது. இதற்கு எளிய தீர்வு கோடைக்காலத்தில் ஒருநாளைக்கு இரண்டுமுறை குளித்து விடுவதுதான். “இருக்கிற தண்ணிப் பஞ்சத்துல இரண்டு முறையா…?” என்கிற மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது. சோப்புப் போடாமல் குளித்தால் குறைவான நீரே செலவாகும்.

மற்றொன்று நீங்கள் குளியலறையில் உடலுக்கு நீரைக் காட்டிக் கொண்டிருக்கும் நேரத்தை மட்டும் அதிகப்படுத்துங்கள். நீரை ஊற்றிக்கொண்டே இருக்க வேண்டியதில்லை. குளித்து முடித்த பின்னும் தலையைத் துவட்டுவதற்குப் பதிலாக ஈரத்தை உலற விட்டால் உடலில் குளிர்ச்சி தங்கும்.

பழைய கஞ்சியும் மோர்ச் சோறும்

கோடைக்கு இதமாகக் கெட்டித் தயிர் போட்டுப் பிசைந்து உண்டால் நல்லது என்ற கற்பிதங்கள் நம்மிடம் உண்டு. தயிர் என்றால் நாம் தயிரோடு நிறுத்திக் கொள்வதில்லை. தயிருக்குச் சுவைகூட்ட உப்பு, தயிரின் இயல்பான துணைவனான ஊறுகாய் போன்றவற்றைச் சேர்த்துக் கட்டும் பழக்கம் தன்னியல்பாகவே நம்மிடம் உண்டு.

இதைக் கோடைக்கால நியாயம் என்றே புரிந்து வைத்துள்ளோம். குறி முனையில் எரிச்சல் உடையவர்களுக்கு இது உடல் தொல்லையை மேலும் அதிகரிக்கவே செய்யும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் இறைச்சி, கீரை போன்றவற்றைத் தவிர்த்து நீர்த் தன்மையுள்ள உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். கெட்டித் தன்மையுள்ள பரோட்டா, சப்பாத்தி, வறுத்த-பொறித்த உணவு வகைகளை முற்றாகத் தவிர்த்துவிட வேண்டும்.

புதிதாகக் காய்ச்சிய கஞ்சி அல்லது பழைய கஞ்சி, கூழ், அதிகம் புளிக்காத மோர்ச் சோறு, கடித்துக்கொள்ள வெங்காயம் போன்றவற்றை எடுத்துக்கொள்வதும் நல்லதே. காபி, டீ, பிஸ்கட், பக்கோடா போன்றவற்றைத் தவிர்த்துவிட்டுப் பழச்சாறு, பழங்கள், மோர், இளநீர் போன்றவற்றையே எடுத்துக்கொள்ள வேண்டும்.

பழச்சாற்றுடன் சர்பத் எனப்படும் சர்க்கரைப்பாகு சேர்ப்பதைத் தவிர்த்து நாட்டுச் சர்க்கரையோ, வெல்லமோ, தேனோ மிதமாகச் சேர்த்துக்கொள்ளலாம். உணவில் உப்பைக் குறைத்துப் பழச்சாற்றுடன் சிட்டிகையளவு இந்துப்பு சேர்ப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

சீரற்ற சிறு நீர் போக்கு

சிறுநீர்ப் பையுடன் இணைந்த மற்றொரு பாகம் (ஆண்களுக்கு) testis எனப்படும் விரை. இனப்பெருக்கத்துக்கு ஆதாரமான விந்துச் சுரப்பி விரைப்பையினுள் அமைந்துள்ளது. இதன் முக்கியமான பணி, சிறுநீரகத்திலிருந்து ஆற்றலைப் பெற்று விந்தைச் சுரந்தளிப்பது என்றாலும், சிறுநீர் வெளியேற்றம் மற்றும் உடலின் வெப்பச் சமநிலையைப் பொறுத்தே இதன் செயல்திறன் அமைகிறது.

சிறுநீர்ப் போக்கு எப்போதும் ஒரே சீராக இருப்பதற்கும் விரைப் பை விந்தைச் சுரந்தளிப்பதற்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. விரையில் நீர் கோத்தல், விரைப்பை வீக்கம், விரைப்பை புற்றுநோய் போன்ற சிறுநீரகப் பை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இன்று உலகம் முழுதும் ஐம்பது வயதைக் கடப்பவர்களுக்கு அதிகரித்து வருகிறது. சிறுநீர்ப் போக்கின் சீரற்ற தன்மையும் மலச்சிக்கலும் ஆண்களுக்கு மட்டுமல்ல; பெண்களையும் கடுமையாகப் பாதிக்கிறது. அது குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.

(தொடரும்...)

கட்டுரையாளர்,உடல்நல எழுத்தாளர்

தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x