Last Updated : 13 Apr, 2019 01:17 PM

 

Published : 13 Apr 2019 01:17 PM
Last Updated : 13 Apr 2019 01:17 PM

படிப்போம் பகிர்வோம்: மன வளர்ச்சிக் குறைபாடுகள்

எழுத்தின் எளிமையும் தெளிவும் எழுத்தாளருக்குச் சொல்ல வரும் கருத் திலிருக்கும் புரிதலைப் பொறுத்தே அமையும். அதற்கு இந்தப் புத்தகமே சான்று. இந்தப் புத்தகத்தில், ஒரு சிக்கலான மருத்துவ நிலையை, புனைகதைக்கே உரிய சுவாரசியமான மொழியில் ஆசிரியர் அடக்கி உள்ளார்.

ஆட்டிசம், அறிவுத்திறன் குறைபாடு, டிஸ்லெக்சியா (கற்றல் குறைபாடு) போன்றவற்றைப் பாமரனுக்கும் புரியும் மொழியிலும், அதேநேரம் கருத்துச் செறிவுடனும் எழுதியிருக்கிறார். மேலும், சொல்ல வருவதை, வாசிப்பவர் எளிதில் உள்வாங்கிக்கொள்ளும்படி எழுத்து நடையைக் கட்டமைத்து உள்ளார்.  அந்தக் குறைபாடுகள் குறித்து இந்தப் புத்தகத்திலிருந்து கொடுக்கப்பட்ட விளக்கங்கள் கீழே:

ஆட்டிசம்

ஆட்டிசத்தை முதன்முதலில் அறிவியல்பூர்வமாக விவரித்தவர் லியோ கென்னர் என்ற வட அமெரிக்க மனநல மருத்துவர். ஆட்டிசம் என்பது குழந்தைப் பருவத்தில் ஆரம்பமாகும் ஒரு மனவளர்ச்சிக் குறைபாடு. அது ஒரு மனநோய் அல்ல.

ஆட்டிசத்தைப் புரிந்துகொள்வது ஓரளவு கடினமானது. ஏனென்றால், அதன் வெளிப்பாடுகளும் அறிகுறிகளும் பல வகைப்பட்டவை. மேலோட்டமாகப் பார்க்கும்போது குழப்பம் தருபவை. உண்மையில் ஆட்டிசம் என்று ஒருமையில் பேசுவது தவறு.

ஆட்டிசம் என்ற பெயர் குழந்தைகளில் மனவளர்ச்சியின் பாதிப்பால் ஏற்படும் பற்பல அறிகுறிகளின் கூட்டுத்தொகுப்பு. ஆட்டிசம் என்ற சொல் auto என்ற கிரேக்க  வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.

அதாவது இது தானாக இயங்கும் தன்மையைக் குறிக்கும். இவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் தனித்து இருப்பதையே இது வலியுறுத்துகிறது.

அறிவுத்திறன் குறைபாடு (மனவளர்ச்சிக் குறைபாடு)

அறிவுத்திறன் குறைபாடு (மனவளர்சிக் குறைபாடு) என்றவுடன் நம் மனத்தில் எழும் சித்திரம் என்ன? பேந்தப் பேந்த விழிக்கும் அசட்டுத்தனமான தோற்றம், கோணல் மாணல் நடை, பொருளற்ற சிரிப்பு, மாறுபட்ட பேச்சுத் தொனி, உமிழ்நீர் ஒழுகும் முகம், இன்ன பிற.

ஆனால், இதுவல்ல உண்மை. தப்புத் தப்பான தகவல்களை வழங்கும் தமிழ்ப் புத்தகங்களும் திரைப்படங்களும் நமது சமுதாயப் பொதுப் புத்தியும் நமக்கு ஊட்டி வளர்த்துள்ள கருத்துகள் இவை, கற்றுத் தேர்ந்தவர்கள் என்று அறியப்படுபவர்கள்கூட, இதற்கு விதிவிலக்கல்ல.

 அறிவுத்திறன் குறைபாடு என்பது வயதுக்கு ஏற்ற அறிவு வளர்ச்சி இல்லாததையும் அன்றாடம் செய்ய வேண்டிய செயல்களில் பின்தங்கி இருப்பதையுமே குறிக்கும். பேச்சு/மொழி, கற்றல், சமூகத் திறன் ஆகிய எல்லாத் திறன்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன.

கற்றல் குறைபாடு

கற்பதற்கு அவசியமான வாசிப்பு, எண் எழுத்துத் திறன் ஆகியவற்றில், எந்த ஒரு வெளிப்படையான காரணமுமின்றிக் கணிசமான அளவு பின்தங்கி இருப்பதே கற்றல் குறைபாடுகளின் மையப் பண்பு. நல்ல அறிவாற்றல் இருந்தும் வாசிக்கச் சிரமப்படுவது, தப்புத் தப்பாகச் சொற்களை வாசிப்பது, வேகமாக வாசிக்க முடியாமை, மிகையான எழுத்துப் பிழைகள் ஆகியவையே கற்றல் குறைபாட்டின் முக்கிய அடையாளங்கள்.

பேச்சு, அறிவுத்திறன் போன்ற பிற திறன்களில் இவர்களுக்கு எந்தக் குறைபாடும் இருப்பது இல்லை. கற்றல் திறன்களில் மட்டுமே பின்தங்கி இருப்பது, இதை மற்ற வளர்ச்சிக் குறைபாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும். கற்றல் குறைபாடுகளிடையே டிஸ்லெக்சியா என்று அழைக்கப்படும் வாசிப்புத் திறன் குறைபாடே மிகக் கூடுதலாக (80%) காணப்படுகிறது.

 இந்த வாசிப்புக் குறைபாட்டின் மைய குணாம்சம், எழுத்து வடிவில் உள்ள சொற்களை ஒலி பிரித்தும் அசை பிரித்தும் வாசிப்பதில் இடர்பாடுகளைக் கொண்டுள்ளதே. மூளை வளர்ச்சியின்போது வாசிப்புக்குத் தேவையான வலைப்பின்னல்கள் சரிவரச் செயல்படாததால் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் மருத்துவர்

மேலைநாடுகளில் மனத்தின் சின்னச் சுணக்கங்களுக்கும், மனநல மருத்துவரை ஆலோசிப்பது வாடிக்கையாக உள்ளது. நமது சமூகத்திலோ அது இன்றும் ஓர் அவலமாகவே கருதப்படுவதால், மனத்தின் குறைபாடுகள் பெரும்பாலும் மறைத்து வைக்கப்படுகின்றன.

90-களின் இறுதியில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் காரணமாக, நிலைமை சற்று மேம்பட்டு உள்ளது. இன்று அத்தகைய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் என டாக்டர் எம்.எஸ். தம்பி ராஜாவைச் சொல்லலாம். 2005-ல்

இருந்து மனநலப் பாதிப்புகள் குறித்துத் தொடர்ந்து அவர் எழுதி வருகிறார். ‘மன வளர்ச்சிக் குறைபாடுகள்’ எனும் அவரது சமீபத்திய புத்தகம், குழந்தைகள் மனநலம் தொடர்பான புத்தகங்களில் முக்கியமானது.

வல்லமை பதிப்பகம்,

தொடர்புக்கு: 04652 278525

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x