Last Updated : 06 Apr, 2019 04:10 PM

 

Published : 06 Apr 2019 04:10 PM
Last Updated : 06 Apr 2019 04:10 PM

கோடை வெயிலின் தாக்கத்தைத் தடுக்க...

நாடு முழுவதும் இந்த ஆண்டு கோடைக் காலத்தில் இயல்பைவிட 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 9 நகரங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது.

தமிழகத்தில் இனிவரும் நாட்களில் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை கூட 82.4 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பைவிட வெப்பம் அதிகரிப்பதால், இந்தக் கோடையில் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும். வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு களையும் அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் பார்ப்போம்.


மனித உடலின் சராசரி வெப்பநிலை என்ன?


மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் (36.1 – 37.ஆகும். சுற்றுப்புற வெப்பநிலை சராசரி வெப்பநிலையைவிட அதிகமாகும்போது வியர்வை, தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான வெப்பம் வெளியேறி உடல் சராசரி வெப்பநிலையை அடைகிறது.


கோடை வெப்பத்தால் ஏன் பாதிப்பு அடைகிறோம்?


கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும்போது உப்புச் சத்துப் பற்றாக்குறையும் நீர்ச்சத்துப் பற்றாக்குறையும் ஏற்படுகின்றன. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்படலாம்.


வெயிலின் தாக்கத்தால் வேர்க்குரு, அரிப்பு, தேமல், மணல்வாரி அம்மை, வயிற்றுப் பிரச்சினை போன்றவை ஏற்படும். தண்ணீரை அதிகம் குடிக்காதவர்களுக்குச் சிறுநீரகக் கல் வரக் கூடும். உச்சி வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்கு வலிப்பு வருவதற்கு சாத்தியம் உள்ளது.


கோடை வெப்பத்தால் அதிகம் பாதிப்பு அடைவது யார்?


பச்சிளம் குழந்தை கள், சிறு வயதுக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் ஆகியோர் அதிக அளவு பாதிப்படையச் சாத்தியமுள்ளது.
கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களை எவ்வாறு தடுக்கலாம்?
அதிக அளவு நீர் பருக வேண்டும்: தாகம் இல்லை என்றாலும், தினமும் குறைந்தது 5 முதல் 7 லிட்டர்வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும் அளவில் தேவையான அளவு நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக அளவில் மோர், உப்பும் மோரும் கலந்த அரிசிக் கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சைப் பழச்சாறு, ORS உப்புக் கரைசல் ஆகியவற்றைப் பருக வேண்டும்.


வெளியே செல்லும்போது: பயணத்தின்போது குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.


ஆடை உடுத்தும் முறை: வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடையை அணிய வேண்டும். திறந்தவெளியில் வேலை செய்யும்போது தலையில் பருத்தித் துண்டு / துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும்.


வீடுகளில் குளிர்ந்த காற்றோட்டம்: சூரிய ஒளி நேரடியாகப் படும் ஜன்னல், கதவுகள் ஆகியவற்றைத் திரைச்சீலைகளால் மூட வேண்டும். இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வருமாறு ஜன்னல்களைத் திறந்து வைத்துக்கொள்ளலாம். தினமும் காலை, மாலை அல்லது இரவில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.


வெளியில் வேலை செய்யும்போது: அடிக்கடி மறக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டும். தலையில் அவசியம் துண்டு கட்டிக் கொள்ள வேண்டும். தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்துகொள்வது நல்லது. களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.


கோடை வெயிலால் பாதிப்படைந்தால் என்ன செய்ய வேண்டும்?


சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்தவெளியில் வேலை செய்யும்போது களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் அதிகமுள்ள இடத்திலிருந்து வெப்பம் குறைவான குளிர்ந்த இடத்துக்குச் செல்ல வேண்டும். மேலும், தண்ணீர் / எலுமிச்சைப் பழச்சாறு / ORS கரைசல் பருக வேண்டும்.


மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்க வேண்டும்.
மிகவும் சோர்வாகவோ மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியைத் தாமதிக்காமல் நாட வேண்டும்.


குழந்தைகள் பாதுகாப்பு


பச்சிளம் குழந்தைகள் உட்பட 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக் காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை வெளியே அழைத்துச் செல்லக் கூடாது. வெளியே அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் குழந்தைகளைத் துணியால் மூடித்தான் அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளை வெளியில் விளையாட விடக் கூடாது.


கோடை வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்?


# வீட்டிலோ பொது இடத்திலோ எவராவது மயக்கம் அடைந்தால், உடனடியாக மருத்துவரையோ ஆம்புலன்சையோ அழைக்க வேண்டும்.


# மயக்கமுற்ற நபரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வைக்க வேண்டும்.


# நாடித் துடிப்பு, இதயத் துடிப்பு, சுவாசம், ஆகியவற்றைப் பரிசோதிக்க வேண்டும்.


# உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்க வேண்டும்.


# மருத்துவருக்கோ ஆம்புலன்சுக்கோ காத்திருக்கும்போது, பாதிக்கப்பட்ட நபரைச் சமதரையில் படுக்க வைத்து, கால், இடுப்பு ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்க வேண்டும். உடைகளைத் தளர்த்தி ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். குளிர்ந்த நீரை உடல் முழுவதும் தொடர்ந்து தெளிக்க வேண்டும். காற்றோட்ட வசதி தொடர்ந்து கிடைக்க செய்ய வேண்டும்.


#வெயில் தாகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின், பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது.


கோடைக் காலத்துக்கு ஏற்ற உணவுவகைகள் எவை?


நுங்கு, தர்பூசணி, இளநீர், மோர், வெள்ளரிக்காய் போன்றவற்றைத் தவறாமல் உட்கொள்வது நல்லது. உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆட்டு இறைச்சி, மீன் ஆகியவற்றை அளவோடு சாப்பிடலாம். பதப்படுத்தப்பட்ட உணவு, கோழி இறைச்சி, கருவாடு போன்றவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.


ORS கரைசல் தயாரிக்கும் முறை


1 பாக்கெட் ORS பொடியை 1 லிட்டர் சுத்தமான குடிநீரில் நன்றாகக் கலக்க வேண்டும். புதிதாகக் கலந்த கலவையை 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.


நன்றி:
தமிழ்நாடு பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon