Published : 27 Apr 2019 11:10 AM
Last Updated : 27 Apr 2019 11:10 AM
அமெரிக்காவில் இருக்கிற லிட்டில் ராக் தேசிய ஆய்வுக்கூடத்தில் உணவு முறையும் ஆயுட்காலமும் பற்றிய ஆராய்ச்சி ஒன்று நடைபெற்றது. அதாவது முதுமையை ஆரோக்கியமாகத் தள்ளிப்போட வழி காண முயலும் ஆராய்ச்சி.
வழக்கம்போல ஆராய்ச்சிக்குச் சிக்கியது சோதனைச்சாலை எலிகள்தாம். ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எலிகளை இரண்டு அணிகளாகப் பிரித்தார்கள்.
முதல் அணிக்குச் சத்தான, சரிவிகித உணவை வயிறு நிறையக் கொடுக்காமல் அரை வயிறு மட்டும் கொடுத்தார்கள். அடுத்த அணிக்கு வயிறுமுட்ட சத்தான சரிவிகித உணவைக் கொடுத்தார்கள். இப்படிக் கொடுக்கப்பட்ட எலிகள் 30 மாதங்களில் பரலோகம் போய்விட்டன.
ஆனால், அரைவயிறு உண்ட எலிகள் 60 மாதங்கள்வரை வலிமையாகவும், உணர்வுகளை அடக்கி ஆள்பவையாகவும், நல்ல நோய் எதிர்ப்பு ஆற்றலுடனும் வாழ்ந்து ஆய்வில் திகைப்பை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார் அந்தச் சோதனைக்கூடத்தின் இயக்குநர் ரொனால்ட் ஹர்ட்.
கவனமற்ற உணவு
ஆரோக்கியம் காப்பதைவிட, தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள மெனக்கெடுபவர்கள் பல கோடிப் பேர் இருப்பதால்தான், இன்றைக்கு உலக அளவில் அழகு சாதனச் சந்தையில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. அதாவது KMPG அறிக்கையின்படி, அழகு சாதனப் பொருட்களுக்காக ரூபாய் 80,370 கோடியை இந்தியர்கள் தொலைக்கிறார்கள்.
உட்கொள்ளும் உணவிலும் அதே கதைதான். செய்யும் தொழிலுக்கு ஏற்ப, சத்தான சரிவிகித உணவை, பசிக்கும் நேரத்தில் சாப்பிடும் புரிதலும் அறிதலும் அருகிப்போய், காட்சி ஊடகங்களில் வரும் விளம்பரங்களின் தாக்கத்தால் மனக் கிளர்ச்சிக்காக, ருசிக்காக, பெருமைக்காக என இன்றைய உணவு மாறிவிட்டது.
மன அழுத்தமும் மனச்சோர்வும் மண்டிப்போனதுடன், பற்றாக்குறைக்குச் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் சேர்ந்து தாக்குவதால், இன்று இளமையிலேயே உடலில் நோய்க்கு இடம் கொடுத்துவிடுகிறோம்.
அதன் தொடர்ச்சியாக முதுமைப் பருவத்தை ‘நோய்களின் மேய்ச்சல் காடாக்கி விட்டோம்'. முதுமையில் நம்மை வளைத்து அடிக்கும் நோய்களின் பெயரைப் பட்டியல் போட்டால், அது வங்கிகளின் வாராக்கடன் பட்டியல்போல நீண்டுகொண்டே போகிறது.
நோய்க் கட்டுப்பாடு
இதயம் சார்ந்த நோய்களான உயர் ரத்த அழுத்தம், அதைத் தொடர்ந்து வரும் பிரச்சினைகள்; உடலின் தலைமைச்செயலகமான மூளைப் பாதிப்புகளை தொடர்ந்துவரும் பக்கவாதம், டிமென்சியா, அல்சைமர் என்கிற மறதிநோய், நடுக்குவாதம் (பார்கின்சன் நோய்); நீரிழிவு நோய் மற்றும் அதனால் விளையும் எண்ணற்றப் பாதிப்புகள், சிறுநீரகச் செயலிழப்பு; இதையும் தாண்டிப் பெருகிவரும் புற்றுநோய், மனச்சிதைவு நோய்கள், மூட்டுவாதம், மூட்டு எலும்பு தேய்ந்து போதல் (Osteoarthritis), ஆஸ்துமா, நாட்பட்ட நுரையீரல் சார்ந்த நோய்கள், செரிமான மண்டலம் சார்ந்த நோய்கள் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படி முதுமையில் பெருகும் நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ள, வந்தபின் தகுந்த மருத்துவம் செய்துகொள்ள, வந்த நோயின் தீவிரத்தை எல்லையிலேயே மடக்குவதற்கு முழுமையான புரிதலை வளர்த்துக்கொள்வது, மூலையில் முடங்கிக் கிடக்காமல் இருப்பதற்கு உதவும்.
யாருக்கு என்ன வேண்டும்?
சில முதியவர்களைப் பார்க்கும்போது 75 வயதிலும் என்னமா சுறுசுறுப்பா இருக்காங்க என்று தோன்றும். ஆனால், சிலர் 65 வயதுக்கு முன்னரே மூப்பு தரும் தளர்வில் நோய்களின் கூடாரமாக மாறிப் போகிறார்களே எப்படி?
இளமைக்காலத்தில் தொடர்ச்சியாகவும் இடைவிடாமலும் உடலுக்குத் தீங்கு செய்யும் காரணிகளை ஏற்படுத்துவதும் அதன் தொடர்ச்சியாக உடல் செல்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் பாதிப்புகளுமே முதுமையில் நோய்கள் பற்றி படரக் காரணமாகிவிடுகின்றன என்கிறார் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைகழகத்தைச் சார்ந்த மூத்த மூப்பியல் பேராசிரியர் ரிச்சர்ட் மில்லர்.
அதனால் நீங்கள் முதுமைப் பருவத்தில் இருந்தால், உடனே செய்ய வேண்டியது என்னென்ன? உங்கள் குடும்ப மருத்துவரிடம் (அ) மூத்தோர் நல மருத்துவ நிபுணரிடம் உங்கள் உடல், மனம் சார்ந்த பிரச்சினைகளைச் சொல்ல வேண்டும்.
அவர் முதலில் உங்கள் உடலை முழுமையாகப் பரிசோதனை செய்வார். பிறகு தேவைப்படும் ஆய்வகப் பரிசோதனைகளை செய்யச் சொல்வார். பரிசோதனைகளின் முடிவுப்படி உங்களுக்குத் தகுந்த ஆலோசனைகளையும், சிறப்பு மருத்துவ நிபுணரைப் பார்க்க வேண்டுமா என்பதையும் வழங்குவார்.
மூத்தவர்கள் தங்கள் நலன் காக்க செய்ய வேண்டியது இதுதான். நீங்களாகவே சிறப்பு மருத்துவ நிபுணரிடம் செல்வதை நிறுத்துங்கள். அதேபோல நீங்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்காத மருத்துவர்களைத் தவிர்த்துவிடுங்கள். தகுந்த மருத்துவரைத் தேடுங்கள்.
(தொடர்ந்து பேசுவோம் )
-டாக்டர் சி. அசோக்
கட்டுரையாளர், குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்
தொடர்புக்கு: drashokshpl@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment