Published : 27 Apr 2019 11:24 AM
Last Updated : 27 Apr 2019 11:24 AM
சமீபத்தில் நாகர்கோவிலுக்குச் சென்றபோது, அங்கே நண்பரின் தாயாருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கும் இங்கும் அலைபாய்ந்த உரையாடல், இறுதியில் ஒக்கி புயலில் மையம்கொண்டது.
“ஒக்கிபுயல் தமிழகத்தைச் சூறையாடிச் சென்ற பின்னான நாட்கள் அவை. ஊரே இருளில் மூழ்கியது. நிறைய உயிர்ச் சேதம், பொருள் சேதம். இண்டர்நெட் இணைப்பு சுத்தமாக இல்லை.
வீட்டினுள் பொழுதுபோக்க வழியில்லாததால், தெருவில் இறங்கிச் சிறுவர்கள் விளையாடத் தொடங்கினர் சீரியல்களைப் பார்க்க முடியாததால், வாசலில் அமர்ந்து பெண்கள் கதையாடினர்.
வாட்ஸ் அப்பும் பேஸ்புக்கும் இல்லாததால், தெருமுனையில் கூடி இளைஞர்கள் அரட்டை அடித்தனர். இதையெல்லாம் பார்க்கும் எனக்கு என்னவோ மீண்டும் 80-களுக்குத் திரும்பிச் சென்றுவிட்டது போல் தோன்றியது” எனத் தனது ஒக்கி அனுபவங்களை அவர் விவரித்தார்.
சிந்தித்துப் பார்த்தால், அவர் சொற்களின் பின்னுள்ள ஏக்கமும் வேதனையும் புரியும். நம்மைச் சுற்றி இறுகப் பிணைந்துள்ள இணையச் சங்கிலிக்குள் நமது வாழ்வு இன்று முடிந்துவிடுகிறது.
வினோத் குமார் ஆறுமுகம் எழுதியுள்ள ‘டிஜிட்டல் மாஃபியா’ எனும் புத்தகம் இந்த அடிமைச் சங்கிலியின் கூறுகளை அலசி ஆராய்ந்து, தொலைந்துபோன நம்மையும் நமது வாழ்க்கையையும் நமக்கே அடையாளம் காட்ட முனைகிறது. சமூக வலைத்தளங்கள் நம்மை எப்படி ஆக்கிரமிக்கின்றன என்பது குறித்து அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் :
உணர்வுத் தொற்று
நீங்கள் தொற்று நோயைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிருமிகள் மாத்திரமல்ல; நமது உணர்வு நிலைகளும் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகத் தொற்றிவிடும் என்பது தெரியுமா? உங்களுக்கு இதைப் பற்றித் தெரியவில்லை என்றால் பரவாயில்லை.
பிரச்சினை என்னவென்றால் உணர்வு தொற்றிக்கொள்ளும் என்பது பேஸ்புக்குக்குத் தெரிந்துவிட்டது. அதன்பின் அது தனது வேலையைத் தொடங்கிவிட்டது.
இந்த உணர்வுத் தொற்றைச் சமூக வலைத்தளங்கள் உதவியுடன் அது செயற்கையாக உருவாக்கியது. பெரு நிறுவனங்களும் அரசும் மக்களை எப்படி வேண்டுமானாலும் பகடைக்காயாக உருட்டும் நிலையை அது ஏற்படுத்தியது.
உங்கள் ஓட்டு யாருக்கு?
நீங்கள் இணையத்தைப் பயன்படுத்துபவரா? தேர்தலில் ஓட்டுப் போடுவீர்களா? இது போதும் அதற்கு. உங்களை வலுக்கட்டாயமாக ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வைக்க முடியும். அது நடந்தும் இருக்கிறது. மூன்றே வார்த்தைகளில் எளிமையாகச் சொன்னால் ‘கேம்பிரிட்ஜ்அனாலிடிகா ஊழல்’.
தேர்தலில் ரகளை செய்வது, வாக்குப் பெட்டியைத் திருடிச் செல்வது, கள்ள ஓட்டுப் போடுவது, ஓட்டுக்குப் பணம் கொடுப்பதெல்லாம் கற்காலம். வெள்ளை வேட்டி, கதர்ச் சட்டை போடுபவன் அதற்கு மேல் யோசிக்க முடியாது.
இது டிஜிட்டல் யுகம். உங்கள் தகவல்களைத் திரட்டி…. இல்லை திருடி, உங்களுக்கே தெரியாமல் மூளைச் சலவை செய்திருக்கிறார்கள். உங்களுக்கே தெரியாமல் அவர்களின் வாடிக்கையாளருக்கு உங்களை வாடிக்கையாளராக மாற்றியிருக்கிறார்கள்.
உங்களுக்கே தெரியாமல் டிஜிட்டல் போதைக்கு ஆளாகியிருக்கிறீர்கள். உங்களுக்கே தெரியாமல் நீங்கள் அவர்களின் வாடிக்கையாளருக்கு ஓட்டுப் போட்டிருக்கிறீர்கள்.
கணினி, உளவியல், மார்கெட்டிங், பிராண்டிங் நிபுணர்களின் உதவியுடன் தேர்தல்களில் உங்களை வசியப்படுத்தி, நீங்கள் பரம்பரையாக எதிர்க்கும் கட்சிக்குக்கூட உங்கள் வாக்கைச் செலுத்தத் தூண்டமுடியும்.
தேர்தல் 2.0 காலம் இது. அமெரிக்காவில் ட்ரம்ப் வென்றது இப்படித்தான். இது அமெரிக்கத் தேர்தலில் மட்டும் நடக்கவில்லை. கென்யா, மால்டா, மெக்ஸிகோ… இவ்வளவு ஏன் இந்தியத் தேர்தலிலும் சமூக வலைத்தளங்களின் பங்கு அதிகமாக இருக்கிறது.
உரிமையை மீட்போம், வாழ்வை மீட்போம்
இன்றைய நவீனத் தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைத்தளங்கள் நம்மை அடிமையாக்கிவிட்டன. நமது வாழ்வின் ஜீவனை அது நீர்த்துப் போகச் செய்துவிட்டது. ஊர்களை உயிர்ப்புத் தன்மை அற்றதாக மாற்றிவிட்டது. நமது உடையை, உணவை மட்டுமல்லாமல், நமது சிந்தனையையும் சமூக வலைத்தளங்களே இன்று தீர்மானிக்கின்றன.
நம்மை ஒரு சோதனை எலியாகவே பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் கருதுகின்றன. தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு என்பதையும் இன்று சில கார்பரேட் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இந்தப் புத்தகம் உங்கள் ஓட்டுரி மையை மட்டுமல்ல; உங்கள் வாழ்க்கையின் ஜீவனையும் மீட்டெடுக்க உதவும்.
டிஜிட்டல் மாஃபியா,
வினோத்குமார் ஆறுமுகம்,
வி கேன் புக்ஸ்,
பக்கம்: 132
விலை: ரூ. 120
தொடர்புக்கு: 9003267399
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment