Last Updated : 13 Apr, 2019 01:08 PM

 

Published : 13 Apr 2019 01:08 PM
Last Updated : 13 Apr 2019 01:08 PM

ஒற்றைத் தலைவலியை எதிர்கொள்வது எப்படி?

ஒற்றைத் தலைவலியை வெறும் தலைவலி என்று மட்டும் சொல்லி விட முடியாது. அது மிதமான தன்மையிலிருந்து கடுமையான தன்மையில் தொடர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. தலையில் ஒரு பக்கத்தில் மட்டும் துடிக்கும்படியான வலியை உருவாக்கும்.

குமட்டல், வாந்தி, ஒளி அல்லது ஒலியை உணர்வதில் சிக்கல், அவ்வப்போது பார்வைக் குறைபாடுகள் போன்றவை இந்த ஒற்றைத் தலைவலியின் முக்கியமான அறிகுறிகள்.

மரபு, சூழல் ஆகிய இரண்டும் அம்சங்களும் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும் முக்கியக் காரணங் களாக உள்ளன. ஐந்தில் ஒரு பெண்ணும், பதினைந்தில் ஓர் ஆணும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர்.

மாதவிடாய்ச் சுழற்சியின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்கள் அதிக அளவில் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த ஒற்றைத் தலைவலியை ‘கட்டமெனியல்’ (Catamenial) ஒற்றைத் தலைவலி என்று குறிப்பிடுகின்றனர்.

உணவு

பாலாடைக் கட்டி, தைரமீன் சேர்க்கப்பட்ட உணவு, கஃபைன் சேர்க்கப்பட்ட பானங்கள், சாக்லேட், மதுபானம் போன்றவற்றைச் சாப்பிட்ட பிறகு ஒற்றைத் தலைவலி வருவதாக ஒற்றைத் தலைவலியால் தொடர்ந்து பாதிக்கப் படுபவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒற்றைத் தலைவலியின் வகைகள்

ஒற்றைத் தலைவலியில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் சில குறிப்பிட்ட தன்மைகளுடன் இருக்கும், சில எந்தத் தன்மையும் இல்லாமல் இருக்கும். திடீர் வெளிச்சத்தை உருவாக்கும் காட்சித் தொந்தரவுகள், பார்வையில் குறைபாடு போன்றவை குறிப்பிட்ட தன்மைகளுடன் ஏற்படும் ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள்.

சில நேரத்தில் இந்தக் குறிப்பிட்ட தன்மைகளில் அறிகுறிகள் வெளிப்பட்டவுடன், அதைத் தொடர்ந்து ஒற்றைத் தலைவலி ஏற்படும். ஒற்றைத் தலைவலியின் தாக்கம் நபருக்கு நபர் மாறுபடும். ஒரு சிலருக்கு ஒற்றைத் தலைவலியின் தாக்கம் ஒரே வாரத்தில் பலமுறை ஏற்படும். ஒரு சிலருக்குச் சில மாதங்கள், ஆண்டுகள் இடைவெளியில் ஏற்படும்.

சிகிச்சை முறை

ஒற்றைத் தலைவலியை முழுமையாகக் குணப்படுத்துவதற்கான  சிகிச்சை முறை கிடையாது. ஆனால், வலி நிவாரணிகள் ஓரளவு ஒற்றைத் தலைவலியைக் கட்டுப்படுத்த உதவும்.

முழுமையாக ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்குமுன், அதாவது அறிகுறிகள் தென்பட்டவுடனே மருத்துவர்கள் பரிந்துரைத்த வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சில நேரம் மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொண்டாலும் மீண்டும் தலைவலி வருவதற்கான சாத்தியம் அதிகம். வாழ்க்கைமுறை மாற்றங்கள், தேவையான மருத்துவ ஆலோசனை போன்றவற்றால் ஒற்றைத் தலைவலியைக் கட்டுப்படுத்தலாம்.

எதனால் ஏற்படுகிறது?

ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான துல்லியமான காரணத்தை இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. மூளையின் ரத்த நாளங்களைப் பாதிக்கும் அசாதாரண மூளைச் செயல்பாடாக இது வரையறுக்கப்படுகிறது. ஆனால்,

இது எதனால், எப்படி ஏற்படுகிறது என்பது இன்னும் தெளிவாகப் புலப்படவில்லை.

மற்ற பிரச்சினைகள்

குறைந்த ரத்தச் சர்க்கரை, மாதவிடாய் தொடர்பான ஹார்மோன் மாற்றங்கள் ஆகியன ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான காரணங்களாக இருக்கின்றன. அத்துடன், மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற மனநிலை தொடர்பான பிரச்சினைகளும் ஒற்றைத் தலைவலியை உருவாக்குகின்றன.

சிலருக்குத் தூக்க மாத்திரைகள் எடுத்துகொள்வது ஒற்றைத் தலைவலியை உருவாக்குகிறது. சிலருக்குத் தூக்கமின்மையாலும் ஒழுங்கற்ற உணவு முறையாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.

நாட்குறிப்பு

இந்த ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள், இதற்காக ஒரு நாட்குறிப்பைக் கையாள்வது சிறந்தது. எந்த விஷயத்தைச் செய்தபிறகு, தலைவலி ஏற்படுகிறது என்பதை அவர்கள் இந்த நாட்குறிப்பில் தொடர்ந்து எழுதி வைக்கலாம். அது அவர்களின் வாழ்க்கைமுறை, நடைமுறையில் மாற்றங்களை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

என்ன செய்யலாம்?

ஒற்றைத் தலைவலி வருவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைத் தவிர்ப்பது ஒற்றைத் தலைவலியைக் கையாள்வதற்கான சிறந்த வழியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படும்போது இருண்ட, அமைதியான அறையில் ஓய்வெடுப்பது உதவிகரமாக இருந்ததாகச் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.

சில நேரம், கழுத்தின் பின்புறத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலியைக் குறைப்பதற்கு உதவும். சிலருக்குக் குளிர்ந்த நீரில் குளிப்பது உதவிகரமாக இருக்கும்.

இவை எல்லாவற்றையும்விட, எப்போது உடனடி மருத்துவ ஆலோசனை தேவைப்படு கிறது என்பதைத் தெரிந்துவைத்திருப்பது அவசியம். பக்கவாதம், உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் பலவீனத்தை உணர்வது, குழப்பமான பேச்சு போன்றவை ஆபத்தான அறிகுறிகள்.

 அத்துடன், திடீரென்று முற்றிலும் இருண்மையாக ஏற்படும் தலைவலி, மூளையின் ரத்தக்கசிவால் ஏற்படலாம். தலைவலியுடன் கழுத்துப் பிடிப்பு, தடிப்புகள் ஏற்படுவதற்கு மூளை அழற்சி காரணமாக இருக்கலாம். இந்த மாதிரி சூழல்களில், வழக்கமான தலைவலி என்று அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியம்.

மரணம் அஞ்சும் கருஞ்சீரகம்

தினசரிக் கால் கரண்டியளவு கருஞ்சீரகம் சாப்பிட்டு வந்தால் நான்கு வாரங்களில் ரத்த அழுத்தம் எட்டுப் புள்ளிகள் அளவு குறைவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

நமக்கு மூக்கே ஏ.சி

நம் மூக்குதான் உடலில் ஏர் கண்டிஷனரைப் போல் செயல்படுகிறது. குளிர் காற்றை வெப்பமாக்குகிறது. சூடான காற்றைக் குளிரவைக்கிறது. மாசுகளை வடிகட்டும் வேலையையும் மூக்கே செய்கிறது.

மலர் மருத்துவம்

மனித ஆன்மாவுடன் பந்தம் கொண்ட ஆன்ம ஆற்றலை இந்தக் காட்டுப் பூக்கள் வைத்திருப்பதாக பக் கோரினார். நோயாளிகளிடம் ஆறுதல் விளைவையே (placebo) இந்த மலர் மருந்துகள் ஏற்படுத்துவதாகவும் ஆய்வுரீதியாக இதன் பலன்கள் உறுதிசெய்யப்படாததாகவும் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x