Published : 09 Feb 2019 11:16 AM
Last Updated : 09 Feb 2019 11:16 AM
செக்கச் சிவப்பது வானம் மட்டுமல்ல; செம்பரத்தை மலர்களும்தாம்! மனதை வசியப்படுத்தும் அழகுக்கு மட்டுமல்ல; மருத்துவக் குணத்துக்கும் செம்பருத்தி சொந்தக்காரி! இலக்கியங்களில் உருவகப்படுத்தப்படும் நீண்ட, கருமையான கூந்தலுக்கான அடிப்படைக் காரணங்களுள் செம்பருத்தியும் ஒன்று.
பெயர்க்காரணம்: சப்பாத்துச் செடி, ஜபம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. செம்மை நிறத்தில் மலர்கள் காணப்படுவதால், ‘செம்’பரத்தை என்று பெயர். ‘செம்பருத்தி’ என்பதற்குப் பருத்திச் செடியின் வகை என்பதை நினைவில் கொள்க.
அடையாளம்: பசுமை குன்றாத புதர்ச்செடி அல்லது சிறுமர வகையைச் சேர்ந்தது. இதய வடிவத்தில் நீண்டிருக்கும் இலைகளின் விளிம்பில் காணப்படும் வெட்டுப்பற்கள் இலைகளுக்கு அழகு. செம்பரத்தையின் தாவரவியல் பெயர் ‘ஹைபிஸ்கஸ் ரோஸா சைனென்ஸிஸ்’ (Hibiscus rosa-sinensis). ‘மால்வேசியே’ (Malvaceae) குடும்பத்திற்குள் அடங்கும். குவர்செடின் (Quercetin), ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids), கேம்பெரால் -3- சைலோசைல் குளுக்கோசைட் (Kaemperol – 3 – xylosyl glucoside), ஸ்டெர்கூலிக் அமிலம் (Sterculic acid) ஆகிய தாவர வேதிப் பொருட்கள் செம்பரத்தையில் இருக்கின்றன.
உணவாக: பூக்களையும் இலைகளையும் உலரவைத்துப் பொடித்து, மிதமான வெந்நீரில் கலந்து குடிக்க மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் அதிகப்படியான உதிரப்போக்கு குறையும். இதே பிரச்சினைக்கு, மாதுளம் பட்டை, செம்பரத்தைப் பட்டையைப் பொடி செய்து வைத்துக்கொண்டு மோரில் கலந்து பருகலாம். செம்பரத்தைப் பொடியோடு சிறிது மிளகு சேர்த்துத் தண்ணீரிலிட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்க, நெடுநாட்களாகத் தொடரும் இருமல் சட்டென நிற்கும். செம்பரத்தை இதழ்களோடு அத்திப் பழம், பால் சேர்த்து அடித்துச் சாறு போலப் பருக, உடற்சோர்வு உடனடியாக விலகும். தோசை மாவில் செம்பரத்தைப் பூ இதழ்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘மலர்-தோசை’, உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவு.
உயர் ரத்தஅழுத்த நோயாளிகள் முறையான உடற்பயிற்சி, உணவு முறைகளோடு சேர்த்து செம்பரத்தை இதழ்களை மருந்தாகப் பயன்படுத்தலாம். இதன் பூவின் இதழ்களைப் பாலுடன் கலந்து தினமும் அருந்திவர, இதய நோய்கள் வருவதற்கு சாத்தியம் மிகவும் குறைவு. செம்பரத்தைப் பூ இதழ், லவங்கப் பட்டை, மருதம் பட்டைப் பொடி சேர்த்து, மிதமான வெந்நீரில் கலந்து பருகிவர, பதற்றம் காரணமாக உண்டாகும் இதயப் படபடப்பு நன்கு குறையும்.
மருந்தாக: இதன் மலர்ச் சாரங்கள் ரத்த சர்க்கரை, ரத்தத்தில் அதிகரித்திருக்கும் கொழுப்புச் சத்தின் அளவைக் குறைப்பதாக எலிகளை வைத்து செய்யப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பூஞ்சைத் தொற்றுகளைத் தடுக்கும் ஆற்றல் இதன் இலைகளுக்கு உண்டு. வலிநிவாரணி செய்கையோடு இதயத் தசைகளுக்கு வலிமை கொடுக்கும் தன்மையும் உண்டு. மன அழுத்த நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்குச் செம்பருத்தி நல்ல தேர்வு என்கிறது ஆய்வு. சில வகையான ‘பற்ப’ மருந்துகளைத் தயாரிப்பதற்குச் செம்பரத்தைப் பூச்சாறு பயன்படுகிறது.
வீட்டு மருந்தாக: கூந்தலைப் பராமரிக்கத் தயாரிக்கப்படும் எண்ணெய்களில், செம்பரத்தை இலை, பூவின் சாற்றைச் சேர்க்கப் பலன்கள் இரட்டிப்பாகும். தேங்காய் எண்ணெய்யில் செம்பரத்தைப் பூச்சாறு சம அளவு சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி, தலைக்கு எண்ணெய்யாகப் பயன்படுத்தலாம். வெண்டைக்காயோடு, செம்பரத்தை மலர்களைச் சேர்த்து எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்துவர, பொடுகுத் தொல்லை மறையும்.
இதன் இலைகளை உலர வைத்து, தண்ணீரிலிட்டுக் காய்ச்சிய குடிநீருடன், பனைவெல்லம் சேர்த்துப் பருக, சிறுநீர் நன்றாகப் பிரியும். மலர்களின் உதவியுடன் செய்யப்படும் ‘செம்பரத்தை மணப்பாகு’ உடல் வெப்பத்தைக் குறைத்து, உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும் மருந்து. கோடைக் காலத்தில் உண்டாகும் சிறுநீர் எரிச்சலுக்கான எளிமையான வீட்டு மருந்தும்கூட. மகரந்தக் காம்பு பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்துவர, தாது விருத்தியாகும் என்கிறது சித்த மருத்துவக் குறிப்பு. செம்பரத்தை மலர்களை வாயிலிட்டு மென்று சுவைக்க, நாப்புண் மறையும்.
நாயுருவிச் சாம்பலைத் தண்ணீரில் சேர்த்து, அதன் தெளிவுடன் செம்பரத்தைப் பூவைக் கலந்து வெயிலில் வைக்க, மருத்துவக் குணமிக்கச் சத்து கிடைக்கும். சிறுநீரகக் கோளாறுகள், வெள்ளைப்படுதல் போன்றவற்றுக்குச் சிறப்பான மருந்து இது. செம்பரத்தை மலர்களோடு அதிமதுரம், ஆடாதோடை, சுக்கு, ஏலம் சேர்ந்த செம்பரத்தை – தேநீர், சுவையைக் கொடுப்பதோடு, சளி, இருமலுக்குமான மருந்தாகவும் அமையும். மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப் போக்குக்கு, செம்பரத்தை இதழ்களை வெண் ணெய்யில் வதக்கிக் கொடுக்கலாம்.
செம்பரத்தைப் பொடியைத் தண்ணீரிலிட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்க, தினமும் முறையாக மலம் வெளியேறும். தோலுக்குப் பளபளப்பைக் கொடுத்து, வியர்வை நாற்றத்தைத் தடுக்கும். உடலுக்குப் புத்துணர்ச்சி தரக்கூடிய இந்தச் செம்பரத்தைக் குடிநீர், குளிர்ச்சியையும் தருவதால் வேனிற் கால பானமாக அதிக அளவில் பயன்படுத்தலாம்.
செம்பரத்தை… ஆரோக்கியத்துக்கான சிவப்புச் சூரியன்.
- கட்டுரையாளர்,
அரசு சித்த மருத்துவர் தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT