Last Updated : 09 Feb, 2019 11:11 AM

 

Published : 09 Feb 2019 11:11 AM
Last Updated : 09 Feb 2019 11:11 AM

குழந்தைகளுக்கு ஆகாத உணவுகள்

உணவக மெனுவிலிருந்து குழந்தை களுக்கு ஊட்டச் சத்தான உணவைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொடுப்பது மிகவும் கடினம். உணவகங்களில் குழந்தைகள் விரும்பிக் கேட்கும் சில உணவு வகைகள் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பேரளவுக்குப் பாதிக்கக் கூடியவை. அந்த வகையில், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாத சில உணவுகள் இவை:

பிரட் & ரோல்ஸ் (Bread & Rolls)

ஒரு வெள்ளை ரொட்டித் துண்டில் 80-230 மில்லிகிராம் உப்பு இருக்கிறது. அந்த ரொட்டித் துண்டின் மீது வெண்ணெய் தடவினால், அதன் சோடியம் அளவு மேலும் அதிகரிக்கும். ஒரு நாளில் குழந்தைகள் உட்கொள்ளும் சோடியம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது குழந்தைகளின் மூளை, சிறுநீரகங்கள், இதயம் போன்ற உடல் உறுப்புகளைப் பாதிக்கும்.

ஃபிளேக்ஸ் (Flakes)

காலை உணவாகப் பெரும்பாலான குழந்தைகள் உட்கொள்ளும் ‘ஃபிளேக்ஸ்’ வகைகள் சிலவற்றில் அதிகப்படியான சர்க்கரை இருக்கிறது. அதனால், குழந்தைகளுக்காக ‘ஃபிளேக்ஸ்’ உணவை வாங்கும்போது அவற்றில் 3 கிராம் அல்லது அதற்கும் அதிகமாகப் புரதமும் நார்ச்சத்தும் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்குவது நல்லது. கூடுமானவரை துரித, சக்கை உணவு வகைகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஐஸ்கிரீமும் கேக்கும்

ஐஸ்கிரீம், கேக் கலவையில் தயாரிக்கப்படும் சண்டே டிசர்ட்ஸ் (Sundae Desserts) போன்ற இனிப்பு வகைகளையும் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. இந்த வகையான ஐஸ்கிரீம், கேக் கலவையில் சர்க்கரையும் கலோரிகளும் சாப்பிட வேண்டிய அளவைவிட அதிகமான அளவில் இருக்கின்றன. இதற்குப் பதிலாக, வெறும் ஐஸ்கிரீமை மட்டும் வாங்கிக்கொடுக்கலாம்.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

குழந்தைகள் சர்வசாதாரணமாக ஒருநாளில் ஒன்று, இரண்டு என்று சாப்பிட்டுக் காலிசெய்யும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகள் முற்றிலும் ஆரோக்கியமற்றவை. ஒரு அவுன்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸில் 50-200 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது. பொதுவாகவே பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் சிப்ஸ் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

பீட்சா

ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய மொத்த உப்பின் அளவில் 25 சதவீதம் பீட்சாவில், இருக்கிறது. எந்த மேல் படுகையும் (toppings) இல்லாத சாதாரண சீஸ் பீட்சாவின் நான்கு துண்டுகளில் 370-730 மில்லிகிராம் வரை சோடியம் இருக்கிறது. அதுவே உணவகங்களில் வாங்கும் வழக்கமான சீஸ் பிட்ஸாவில் 510-760 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது.

பொரித்த நொறுக்குத்தீனிகள்

எண்ணெய்யில் நன்றாகப் பொரித்த கோழிக்கறி எப்படித் தவிர்க்கப்பட வேண்டியதோ, அதே அளவுக்குக் குழந்தைகள் அதிகமாக  விரும்பிச் சாப்பிடும் ‘பிரெஞ்சு ஃபிரைஸ்’, ‘சிக்கன் நக்கெட்ஸ்’, ‘மொஸெரெல்லா சீஸ் ஸ்டிக்ஸ்’ ‘ஸ்மைலிஸ்’  போன்றவையும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த வகையான பொரித்த உணவு வகைகளில் இருக்கும் கொழுப்பு, குழந்தைகளின் இதயத்துக்கு நல்லதல்ல.

சோடா, பானங்கள்

உணவகங்களில் வழங்கப்படும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் குழந்தைகளுக்கு ஏற்றவையல்ல. பாக்கெட்டுகளிலும் பாட்டில்களிலும் அடைக்கப்பட்டிருக்கும் பானங்களில் சர்க்கரை அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அவற்றில் எந்தச் சத்தும் இல்லை. அத்துடன், உணவகங்களில் பழச்சாறுகளை வாங்கித் தருவதையும் தவிர்க்கலாம். உணவகங்களில் கூடுதலான இனிப்புச் சுவைக்காக அதிகமான சர்க்கரையைச் சேர்க்கின்றனர். அதனால், உணவகங்களில் குழந்தைகளுக்குப் பானங்களாக ஏதாவது வாங்கித் தர வேண்டுமென்றால், தண்ணீர் அல்லது பால் மட்டும் வாங்கித் தரலாம்.

பாஸ்தாவும் சிக்கனும்

பாஸ்தாவைத் தற்போது குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். ஆனால், பாஸ்தா, சிக்கன், சீஸ் ஆகிய மூன்றும் சேர்ந்து தயாரிக்கப்படும் உணவைத் தவிர்ப்பது நல்லது. அதிலும், பாஸ்தாவில் சேர்க்கும் சிக்கனுடன் ரொட்டி சேர்க்கப்பட்டிருந்தால், அதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். ஏனென்றால், இந்த பாஸ்தா கலவையில் கலோரிகளும் சோடியமும் அதிகமாக இருக்கின்றன. அதனால், இவற்றுக்குப் பதிலாகச் சாதாரண மக்ரோனி, சீஸ் பாஸ்தாவை மேல்படுகை (Toppings) எதுவும் இல்லாமல் தேர்ந்தெடுக்கலாம். இந்த பாஸ்தாவில் ஊட்டச்சத்து பிரச்சினை இல்லை.

பொரித்த கோழிக்கறி

கோழிக்கறி ஆரோக்கியமான உணவுதான். ஆனால், அதை  ரொட்டியுடன் நீண்ட நேரம் பொரித்தெடுப்பது ஆரோக்கியமானதல்ல. இவற்றில் அதிகமான கலோரிகளும் சோடியமும் இருப்பதால் அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. ‘சிக்கன்’ சாப்பிட்டே ஆக வேண்டுமென்று உங்கள் குழந்தை அடம்பிடித்தால், ‘கிரில்’ சிக்கன் வாங்கிக் கொடுக்கலாம்.

பர்கர்ஸ் (Burgers)

குழந்தைகள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியலில் சீஸ் பர்கர் முதலிடத்தில் இருக்கிறது. குழந்தைகள் ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய சோடியம் அளவைவிடப் பன்மடங்கு அதிக சோடியம் பர்கரில் இருக்கிறது. குறிப்பாக அசைவ பர்கர்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x