Published : 26 Jan 2019 11:56 AM
Last Updated : 26 Jan 2019 11:56 AM
‘வேர் பாரு தழை பாரு, மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரு…’ எனும் சித்த மருத்துவ மூலிகைத் தத்துவத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மூலிகை இம்பூறல்! இதன் வேரில் இருக்கும் மருத்துவக் கூறுகள், விடை காண இயலாத பல நோய்களுக்கும் நிரந்தரமாக விடை தரும் வல்லமை பெற்றவை.
“இம்பூறலைக் காணாது ரத்தங் கக்கிச் செத்தானே…” எனும் சித்தர் சட்டமுனியின் மொழி, இம்பூறலின் குருதிப்பெருக்கை அடக்கும் மகத்தான சக்தி குறித்து தெரிவிக்கிறது. வண்ணமயமான கலைநயமிக்க அக்காலப் பட்டுப் புடவைகளுக்கு இயற்கை சாயம் கொடுக்க, இம்பூறல் வேர் பயன்பட்டிருக்கிறது. இயற்கை சாயம் கொடுக்கும் மஞ்சிட்டி, அவுரி, மருதாணி போன்ற தாவரங்களின் வரிசையில் இம்பூறல் செடியும் தவிர்க்க முடியாதது.
பெயர்க்காரணம்: இன்புராவேர், சாயவேர், சிறுவேர் போன்ற வேறுபெயர்கள் இதற்கு இருக்கின்றன. இம்பூறல் தாவரத்திலிருந்து இயற்கை சாயம் கிடைப்பதால் ‘சாயவேர்’ என்று பெயர். முற்காலத்தில் ‘ராமேசுவர வேர்’ என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.
அடையாளம்: மொட்டு அளவில் சிறு மலர்களைச் சூடிய அழகிய சின்னஞ் சிறு தாவரம் இம்பூறல்! ஈட்டி வடிவச் சிறு இலைகளையும் வெள்ளை நிற மலர்களையும் கொண்டிருக்கும். ‘ரூபியேசியே’ (Rubiaceae) குடும்பத்தின் உறுப்பினரான இதன் தாவரவியல் பெயர் ‘ஓல்டன்லேண்டியா அம்பலேட்டா’ (Oldenlandia umbellata). நலம் பயக்கும் குயினோன்கள் (Quinones), அலிசாரின் (Alizarin) போன்ற தாவரவேதிப் பொருட்கள் நிலைக்கொண்டுள்ளன.
உணவாக: பனிக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், இரைப்பு போன்ற குறிகுணங்களுக்கு, அரிசி மாவோடு இம்பூறல் இலைப் பொடி மற்றும் வல்லாரை இலை சேர்த்து, தனித்துவமான தோசை/அடை செய்து கொடுக்கலாம். இதன் வேரோடு அதிமதுரம் சேர்த்துத் தயாரிக்கப்படும் இனிப்புச் சுவைமிக்க மருந்துநீர், சுவாசிக்கும்போது ஏற்படும் இடர்பாடுகளைத் தடுக்கும். இம்பூறல் வேரை அரைத்துப் பாலில் கலந்து கொடுக்க வயிற்றெரிச்சல் சாந்தமாகும். விடாத விக்கலுக்கான தீர்வையும் இது அளிக்கும்.
இம்பூறல் வடகம்: இம்பூறல் செடி ஒரு பங்கு, மிளகு ஒரு பங்கு, பனங்கற்கண்டு இரண்டு பங்கு ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்றாக இடித்து சுண்டைக்காய் அளவு வடகங்களாகச் செய்துகொள்ளுங்கள். ஒன்று அல்லது இரண்டு வடகங்களை உணவோடு கலந்து சாப்பிட, இருமல் சளி போன்ற கப நோய்கள் உடனடியாகக் குறையும். குளிர்கால உணவியலுக்கு, சுவைமிக்க இம்பூறல் வடகங்கள், உங்கள் சமையலறை அஞ்சறைப் பெட்டியில் இடம்பிடிக்கட்டும்.
மருந்தாக: கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் தன்மை இம்பூறலுக்கு இருப்பதாக ஆய்வு ஒன்று பதிவுசெய்கிறது. கோழை அகற்றிச் செய்கையுடைய இம்பூறல், நுரையீரல் பாதையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதன் வேருக்கு பாக்டீரியாக்களின் தாக்கத்தை அழிக்கும் ஆற்றல் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இம்பூறல் சார்ந்த மருந்துகள், பித்த நீரைச் சீராகச் சுரக்கச் செய்யும். வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தி, செரிமானக் கருவிகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
வீட்டு மருந்தாக: மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக குருதிப்போக்கை நிறுத்த, ‘இம்பூறல் லேகியம்’ எனும் சித்த மருந்து சிறப்பான பலனைக் கொடுக்கக்கூடியது. இம்பூறல் வேரைக் குடிநீரிட்டு வழங்க, நீரிழிவு நோயில் ஏற்படும் கால் மதமதப்பு குறையும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் கட்டுப்படுத்த, மூல நோயில் வடியும் ரத்தக் கசிவை நிறுத்த இம்பூறலை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள் சிறப்பான பலன் தரக்கூடியவை.
ரத்த வாந்தியை நிறுத்தும் மருந்தாகவும் இம்பூறல் பயன்படுகிறது. ரத்தம் வடியும்போது, உடனடியாக நிறுத்தக்கூடிய ‘அவசர கால’ மூலிகையாக இம்பூறல் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. உணவு எதிர்க்களித்தலால் உண்டாகும் நெஞ்செரிச்சலைக் குறைக்க, இலையை அரைத்துப் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து பருகலாம். இம்பூறல், முசுமுசுக்கை இலை, தூதுவளை ஆகியவற்றைத் தண்ணீரிலிட்டுக் கொதிக்கவைத்துக் குடிநீராகக் காய்ச்சிப் பருக, ஆதிக்கம் செலுத்தும் கப நோய்கள் அமைதி அடையும்.
இம்பூறல் வேர், அதிமதுர வேர் சேர்த்துத் தயாரிக்கப்படும் குடிநீரைக்கொண்டு கொப்பளிக்க, வாய்ப் பகுதி, ஈறுகளில் உண்டாகும் புண்கள், ரத்தக் கசிவு குறையும். இம்பூறல் வேரோடு பெருங்காயம் சிறிதளவு சேர்த்துக் குடிநீராகக் காய்ச்சி வழங்க, மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் அடிவயிற்று வலி குணமாகும்.
சீதம் கலந்து பேதியாகும்போது, இம்பூறலை அரைத்து மோரில் கலந்து குடிக்கலாம். இதன் வேர்ப் பொடியைத் தேனோடு குழைத்துச் சாப்பிடுவது தொண்டைப் புண்ணுக்கான சுவைமிக்க மருந்து. இம்பூறல் செடியை உலரச் செய்து எரித்த சாம்பலை, தேங்காய் எண்ணெய்யில் குழப்பி சொறி, சிரங்குகளுக்குத் தடவலாம். உள்ளங்கை, உள்ளங்காலில் உண்டாகும் எரிச்சலுக்கு இம்பூறல் முழுச் செடியையும் அரைத்துப் பூசலாம். உள்ளங்கையில் அரிப்போடு தோல் உரியும்போது, இம்பூறல் செடியை அரைத்துத் தண்ணீரில் கலந்து கழுவ பலன் கிடைக்கும்.
‘இன்புறா வேரை இதமாய் அருந்தினர்க்கு… இருமல் சுவாசம் வயிற்றுப்புசம்…’ எனும் அகத்தியரின் பாடல், இம்பூறலின் பலன்கள் குறித்து விவரிக்கிறது. பாம்புக் கடிபட்ட இடத்தைக் கழுவும் முதலுதவி மருந்தாக இம்பூறல் வேர்க் குடிநீர் பயன்பட்டிருக்கிறது. இனிப்புச் சுவையுடன் கோழையை அகற்றும் தனித்துவம் பெற்ற இம்பூறலின் பலனை, ‘இருமலுக்கு இம்பூறல்’ எனும் பதத்தின் மூலம் அறியலாம்.
இம்பூறல்… நோய்களை விடுவித்து, நம்மை இன்புற வைக்கும் வேர்!...
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT