Published : 23 Feb 2019 11:09 AM
Last Updated : 23 Feb 2019 11:09 AM
வாடகை கார் செயலிகள் சக்கைப் போடு போடுகின்றன. ஸ்மார்ட்போனில் இருக்கும் வாடகை வண்டி செயலியை நீங்கள் திறந்தால்போதும், உங்கள் இருப்பிடத்தை ஜிபிஆர்எஸ் உதவியுடன் செயலி கண்டுபிடித்துவிடும். அடுத்து நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என்று சொல்ல வேண்டும். அவ்வளவுதான் நீங்கள் நிற்குமிடத்துக்கு கார் வந்து விடும், நீங்கள் ஏறிப் பயணிக்கலாம்.
இந்தச் செயலிகள் ‘அல்காரிதங்களின்’ அடிப்படையில் இயங்குகின்றன. அல்காரிதம் என்றால் ஒரு பிரச்சினைக்குத் தீர்வைத் தரும் படிமுறை. உதாரணத்துக்கு நீங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல வேண்டும் என வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல சரியான பாதை அதாவது மிகக் குறைவான நேரத்தில் மிகக் குறைவான தூரத்தில் செல்ல வேண்டும். இது ஒரு பிரச்சினை என வைத்துக்கொள்ளுங்கள்.
வல்லுநர்களின் உதவியுடன் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் ஒரு பொதுவான அல்காரிதத்தை உருவாக்கி இருப்பார்கள். அவை கூகுள் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். கூகுள் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் ட்ராபிக் நிலவரம், கூகுள் மேப்ஸ் போன்றவற்றின் உதவியுடன் பல ஆய்வுகளை மேற்கொண்டு குறைவான தூரத்தில், குறைவான நேரத்தில் செல்லும் வழியை உங்களுக்குக் காட்டும்.
ஒருவருக்கு வண்டியை ஒதுக்குவதில்கூட இந்த அல்காரிதங்கள் பல கூட்டல் கழித்தல் வேலையைச் செய்கின்றன. இந்த அல்காரிதங்களைச் சிறப்புக் கணக்குகள், செயற்கை அறிவுத்திறன் ஆகியவற்றின் உதவியுடன் மேம்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
எமோஷனல் லேபர்
பொதுவாக, இந்த மாதிரியான வாடகை வண்டியின் ஓட்டுநர்கள் சோர்வுடனும் சற்றே அழுத்தத்துடனும் இருப்பார்கள். இருந்தும், பயணிகளிடம் எளிதில் கோபப்பட மாட்டார்கள். காரணம் நீங்கள் கொடுக்கப் போகும் ‘ஸ்டார்’ ரேட்டிங்.
ஸ்டார் ரேட்டிங் குறைந்தால் அவர்களுக்கு வரும் சிறப்புக் கட்டணம், சலுகைகள், சவாரிகள் என அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகும். மிகவும் குறைவான ரேட்டிங் பெறும்போது அவர்கள் அபராதம் வேறு கட்ட வேண்டும். மறைமுகமாக ஸ்டார் ரேட்டிங் அவர்கள் தலைமீது தொங்கும் கத்தி. இதைத்தான் ‘எமோஷனல் லேபர்’ என்கிறார்கள்.
பலியாடாகும் ஓட்டுநர்கள்
தொழில்நுட்பமும் சமூக அமைப்பும் சேரும் கோரமான புள்ளியின் முதல் பலியாடுகள் இந்த ஓட்டுநர்கள்தாம். இந்தச் செயலிகள் தொடர்ந்து சவாரிகளைக் கொடுத்தபடியே இருக்கும். குறைவான கட்டணத்தில் ஓடுவதால், குறைந்தபட்ச ஒரு நாள் வருமானத்துக்கு அவர்கள் பல மணி நேரம் வண்டி ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டும். ஒருவேளை ட்ராபிக்கில் நேரம் கடந்தால், அன்றைய நாள் குறைந்தபட்ச சவாரிகளுக்கு மேலும் ஓட வேண்டும்.
உடலாலும் மனத்தாலும் பல சிரமங்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். வாகன ஓட்டிகளுக்குச் சவாரிகளை ஒதுக்கி, ஸ்டார் ரேட்டி அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிக்கும் அல்காரிதங்களுக்குள், வாகன ஓட்டிகளின் பிரச்சினையைத் தீர்க்க கொஞ்சம் இரக்க உணர்வையும் புகுத்தினால், அவர்களின் வாழ்க்கைப் பயணம் மேம்படும்.
(தொடரும்..)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT