Published : 09 Feb 2019 11:13 AM
Last Updated : 09 Feb 2019 11:13 AM
இதுவரை காற்றை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் உறுப்புகளாகிய நுரையீரல், பெருங்குடல், தோல் ஆகியன குறித்துப் பார்த்தோம். இனி, காற்றின் சேய் மூலகமான நீரை ஆதாரமாகக்கொண்டு இயங்கும் உறுப்புகளைக் குறித்துப் பார்ப்போம்.
நீர் மூலகத்தின் முதன்மை உறுப்பு சிறுநீரகம். துணை உறுப்பு சிறுநீர்ப்பை. உயிரினத்தின் முதன்மைக் கடமையான இனப் பெருக்கத்துக்கு ஆதாரமானதும் நீர் மூலகம்தான். எலும்பு, தலைமுடி, பல் போன்றவை நீர் மூலகத்தால்தான் பராமரிக்கப்படுகின்றன. இவற்றின் இயக்கம், பராமரிப்பு குறித்து அடுத்தடுத்துப் பார்க்கலாம்.
பற்களின் வளர்ச்சி
முதலில் பல்லைப் பற்றிப் பார்ப்போம். உடலின் ஆதாரக் கட்டுமானமான எலும்புகளின் வளர்ச்சியைப் பொறுத்துப் பல்லின் தோற்றமும் வளர்ச்சியும் இருக்கும். எடுத்துக்காட்டாகக் குழந்தை முட்டியைத் தரையில் ஊன்றி அழுத்தி, தவழத் தொடங்கும்போது, பால் பற்கள் முளைக்கத் தொடங்குகின்றன. காலை (பாதங்களை)த் தரையில் ஊன்றி நடக்கத் தொடங்கும்போது கிட்டத்தட்ட அனைத்துப் பற்களும் முளைத்துவிடும். பிறப்புக்குப் பின் உருவாகும் எலும்புகளின் தோற்றம் (எலும்புகள் குறித்துப் பேசும்போது விரிவாகப் பார்க்கலாம்) முழுமை பெறும் ஏழெட்டு வயதில், பால் பற்கள் உதிர்ந்து உறுதியான பற்கள் தோன்றி எண்ணிக்கை முழுமையடையும். இருபத்தெட்டு - முப்பத்தி ரண்டு வயதில் உயிர் உச்ச நிலையை அடைந்து எலும்பு, சதை அனைத்தின் வளர்ச்சியும் முடியும் கட்டத்தில் இறுதியாக ஞானப் பற்கள் தோன்றுகின்றன.
பல் துலக்குவது நல்லதா?
நமது சிறுநீரகம்தான் பற்களை உருவாக்கு கிறது, பராமரிக்கிறது. நாம் பற்களைப் பராமரிப்பதற்குச் சிறுநீரகத்தைப் பராமரிப்பதே போதுமானது. சிறுநீரகப் பராமரிப்பு குறித்துப் பார்க்கும்போது அதைத் தெரிந்துகொள்ளலாம்.
பற்களைப் பராமரிக்க ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை பிரஷ் – பேஸ்ட் கொண்டு பல் துலக்குவது பற்களுக்குக் கேட்டையே விளைவிக்கும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், பற்பசையில் உள்ள உடலின் இயல்புத் தன்மைக்கு மீறிய ரசாயனக் கூட்டு, பல்லின் ஒளிர்வைச் சிதைத்துவிடும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசையில் உடலுக்கு ஆபத்தான கூறுகள் என்னென்ன உள்ளன என்பதை அப்புறம் பார்க்கலாம். நம்முடைய உமிழ்நீரில் இருக்கும் காரத்தன்மை ஒவ்வொரு நொடியும் பற்களைச் சுத்தப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது என்ற அடிப்படை உண்மையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
உண்ணும் உணவின் வழியாகப் பல்லில் மாக் கூறுகள் படிந்து ஒருவேளை அது உமிழ் நீரால் கரைக்கப்படவில்லை என்றாலும் உண்ட ஓரிரு மணி நேரம் கழித்து வெறும் நீரில் வாய் கொப்புளித்தாலே அவை வெளியேறிவிடும். அதேபோல் பல்லில் சிக்கிக்கொண்ட நார், மீன் முள் போன்றவையும் உறுத்தலாக இருக்குமே தவிர, நாம் எதுவும் செய்யா விட்டாலும் தாமாகவே வெளியேறிவிடும்.
பற்களின் குறைகள்
பற்களை நன்கு பராமரிக்க, நமது உடலின் வெப்பச் சமநிலையைப் பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நம்முடைய மரபணுவும் பெற்றோரின் உடலமைப்பும் பல்லின் வடிவம், அடுக்கமைவு ஆகியவற்றைத் தீர்மானிக்கின்றன. ஆனால், பல் விழுந்து எட்டு வயதில் முளைப்பது முழுமை பெற்ற பின்னர் பல்முன்நோக்கி நீண்டு வருவதில் இருந்து அதன் உறுதி, அதன் இடைவெளி பல் சொத்தை, உடைதல், பற்குழிவு, ஈறு வீக்கம், ஈற்றில் ரத்தம் கசிதல், சீழ் வடிதல் போன்றவற்றுக்குக் காரணம் பல் துலக்குதலோ பராமரிப்பின்மையோ அல்ல. மாறாக வயிற்றில், மண்ணீரலில், சிறுநீரகத்தில், ஏன் பெருங்குடலில் தேங்கும் கழிவுகூட நமது பற்கள் விகாரமடைவதற்குக் காரணமாக இருக்கும். அதேபோல நீர்த் தன்மை, தட்ப வெப்பத்துக்கு ஏற்பவும் பல்லின் உறுதி, பலவீனம், உணவை ஏற்கும் திறன் போன்றவை வேறுபடும்.
பல், சிறுநீரகத்தின் புற உறுப்புதான். ஆனால் பல்லின் இயக்கத்தை, அதன் வடிவத்தை, உறுதியைத் தக்கவைப்பதில் அனைத்து உள்ளுறுப்புகளின் பராமரிப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நமது பற்களைப் பாதுகாக்கக் கற்றுக்கொண்டால் முழு உடலையும் நம்மால் சரியாகப் பராமரிக்க முடியும். பல்லின்வேர், வலி ஆகியன குறித்து அடுத்த இதழில் பார்க்கலாம்.
(தொடரும்...)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT