Published : 26 Jan 2019 11:46 AM
Last Updated : 26 Jan 2019 11:46 AM
உடலில் தேங்கும் கழிவுகள் சளியாக வெளியேறிவிட்டால் தொல்லை சளியோடு முடிந்துவிடும். மாறாக, ஏதாவது மருந்து உண்டு அதை உள்ளுக்குள்ளே தேக்கி வைத்தால் (supress) கழிவு அடுத்த கட்டத்துக்குச் சென்று வேறு நோயாகி தொல்லையின் தீவிரத்தை அதிகரிக்கும். சளியைக் கட்டுக்குள் வைக்க உடலின் வெப்ப ஆற்றலை அதிகரிக்கும்படியாக நம்முடைய அன்றாட நடவடிக்கைகள் இருத்தல் வேண்டும்.
வெப்பமே உடலின் உயிர் ஆற்றல். பாரம்பரிய உடலியல் கோட்பாட்டின்படி காற்றுப் பூதத்தின் தந்தை வெப்பம். காற்றுப் பூதத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உடலின் வெப்பம் சமநிலையில் இருக்க வேண்டும். உடலின் வெப்பம் மிகைப்படும்போது சுவாசத்தில் தொல்லை ஏற்படும். அதனால், தோல் வறட்சியடையும். பொலிவு குறையும். அடிக்கடி ஏப்பமோ அபான வாயு பிரிதலோ நிகழும். மலச்சிக்கலும் ஏற்படும்.
தூக்கமற்ற நீண்ட பயணங்களின்போதும் புறச்சூழலில் குளிர்ச்சி அதிகரிக்கும்போதும் இத்தகைய தொல்லைகள் ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் உண்டு. அப்போது நாம் எடுக்க வேண்டிய உணவுமுறை குறித்து செரிமான உறுப்புகள் பற்றிப் பார்க்கும்போது விரிவாகப் பார்ப்போம். எளிதான முறையில் வெப்ப ஆற்றல் தரக்கூடிய உணவைப் பற்றி மட்டும் இப்போதைக்குத் தெரிந்துகொள்வோம்.
கொள்ளுச் சட்னி, கொள்ளு ரசம், கஞ்சி போன்றவை உடலுக்கு எளிதில் வெப்ப ஆற்றலை அளிக்கும். இறைச்சி அல்லது கீரையைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப்பும் உடலுக்கு வெப்ப ஆற்றலை அளிக்கும்.
அடிக்கடி சளித் தொல்லைக்கு உள்ளாவோர் பிரிட்ஜில் வைத்த உணவுப் பண்டங்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாகச் சொல்வதானால் பிரிட்ஜில் வைத்த மாவை இட்லி தோசையாகச் சமைக்கிற பொழுது சூடேறும் என்றாலும் மாவின் ஆதாரக் கூறில், மாவின் ஒவ்வொரு அணுவிலும் குளிர்ச்சி உறைந்திருக்கும். மாவின் இறுதி வடிவத்தைச் சிதைத்து இயங்கும் வெப்ப ஆற்றலாக உடல் மாற்றும் பொழுது அதனுள் உறைந்திருக்கும் குளிர்ச்சியை நீக்குவதற்காக உடல் அதிக வெப்ப ஆற்றலை செலவிட நேரும். இதனால், அந்த உணவின் மூலமாகக் கிடைக்கப் பெறும் ஆற்றலைவிட அதன் மூலமாக இழக்கும் ஆற்றல் அதிகம்.
உடற்பயிற்சி அவசியம்
உடலின் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் 20 களின் நடுப்பகுதிவரை நமது உடலின் வெப்ப ஆற்றல் உச்சத்தில் இருக்கும். அப்போது எந்த உணவை உண்டாலும் உடல், எந்த இழப்பும் இல்லாமல் செரித்துவிடும். ஆனால், நடுத்தர வயதைத் தாண்டுவோருக்கும், ஏழு வயதுக்கு உட்பட்டோருக்கும் ஆற்றல் குறைவாகத் தரும் உணவை உண்ட சிறிது நேரத்தில் மப்பும் மந்தாரமும் உடலில் படரும்.
உடலின் இயற்கையான உயிராற்றல் குறையத் தொடங்கும் வயதான முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்தே அக வெப்பத்தைக் கூட்டவல்ல உடற்பயிற்சிகளைத் தொடங்கி விட வேண்டும். உள்ளாற்றலை அதிகரிக்க மேற்கொள்ளும் எந்த எளிய பயிற்சியும் உடலில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கும்.
எலும்பை உறுதி செய்வது தொடங்கி கண்ணுக்கு ஒளி தரும் கல்லீரலின் ஆற்றலை அதிகரிப்பதுவரை பல்வேறு வகையான பலன்களை அளிக்கும் உடற்பயிற்சி முறைகள் உண்டு. இங்கு நாம் பார்க்க இருப்பது உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் உடலின் வெப்ப ஆற்றலைப் பெருக்கி காற்றுக் கழிவால் உருவான சளியை நீக்கும் உடற்பயிற்சிகள் குறித்து.
தலைவலியா, மலையேறுங்கள்
வேக நடை, மித ஓட்டம் குறித்து முன்பே பார்த்தோம். அவற்றின் மூலம் சுவாசிக்கும் காற்றின் அளவு அதிகரித்து நுரையீரல் விரிவடையும். காற்றுப் பைகள் தூய்மையடையும். அதேபோல மெல்லோட்டத்தின் அடுத்த கட்டமான மலையேற்றத்தால் ரத்த ஓட்டம் விரைவு பெற்று உடல் வெப்பமடையும். ரத்த நாளங்களில் உள்ள தடைகள் அகற்றப்படும். மலையேற்றத்தின்போது உடல் மேல்நோக்கி ஏற்றப்படும். இதனால், ரத்தம் தலையை நோக்கி உந்தப்படும்.
சூடான ரத்தம் தலைக்குள் மூளையின் நுண் நரம்புகளுக்குள் செலுத்தப்படும்போது எந்த நவீன கருவிக்கும் புலப்படாத நுண்ணடைப்புகள் நீக்கப்படும். தலையை நோக்கி உயிர் வளி எனும் ஆக்ஸிஜன் அதிக அளவுக்குச் சென்று தூய்மைப்படுத்தப்படுவதால் மூளைப் பாகத்தின் ஆக்ஸிஜன் ஏற்புத் திறன் அதிகரிக்கும். மூளைப் பாகத்தின் உயிர்வளி ஈர்ப்பு அதிகரிக்கும்போது சிந்தனை ஆற்றல் இயல்பாகவே கூடும். நமக்கு அடிக்கடி தலை வலிக்கிறது என்றாலோ கொஞ்சம் யோசித்தாலும் தலை சூடாகிவிடுகிறது என்றாலோ மலை ஏற்றப் பயிற்சி தேவை என்று பொருள்.
உலக வரலாற்றில் இன்றளவும் போர்த்திறம் மிக்கவன் என்று கருதப்படும் செங்கிஸ்கான், போருக்கு முன்பாக, ஏதாவது மலைமீது ஏறித் தளர்வாக அமர்ந்து கொள்வானாம். மூன்று நாட்களுக்கு அன்னந் தண்ணி இல்லாமல் உடலின் அழுத்தங்கள் அத்தனையும் நீக்கி காற்றை ஆழமாக இழுத்துத் தலைக்கு ஏற்றி இருத்துவானாம்.
சிந்தனையில் தெளிவு
தலைக்குள் காற்றுப் புழக்கம் சரளமாக இருந்தால்தான் நமது சிந்தனையில் தெளிவு ஏற்படும். எந்தச் சிக்கலும் இல்லாமல் யோசிக்க முடியும். மலையேற்றப் பயிற்சி அடிக்கடி மேற்கொண்டால் உடலின் வெப்ப ஆற்றல் அதிகரித்து சளித் தொல்லை தோன்றுவதற்கான வாய்ப்பே இல்லை. இருக்கும் சளியும் சட்டென்று நீங்கிவிடும். நுரையீரலிலும் தலையிலும் நீர் கோத்திருந்தால் மலையேறும்போது தோன்றும் உடல் வெப்பத்தால் அது இளகி வடிந்துவிடும்.
மலையேற்றம் அத்தனை சாதாரணமானதல்ல என்றும், மாரடைப்பு போன்ற உயிரச்ச நெருக்கடிகள் தோன்றும் என்றும் சிலருக்குப் பீதி இருக்கலாம். ஆனால் நடை, ஓட்டம் போன்ற பயிற்சிகளுக்குப் பின்னரே மலையேறப் போகிறோம் என்பதால், அப்படி ஏதும் ஆபத்து நேர்ந்துவிடாது. மலையேற்றம், கடற்காற்று சுவாசம் ஆகியவற்றின் பலன்கள் குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்.
(தொடரும்...)
தொடர்புக்கு: கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment