Published : 05 Jan 2019 11:55 AM
Last Updated : 05 Jan 2019 11:55 AM
நகரங்களில் கிடைக்கும் வாழ்க்கைக்கான ஆதாரத்தை எல்லோரும் பங்கு போடும் போட்டியில் மக்கள், மீண்டும் மீண்டும் நகரத்தினுள் குவிய நகரம் பெருத்துக்கொண்டே போகிறது. நகரின் பெருக்கத்தை அடுத்து ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற பிற விளைவுகள் குறித்த அக்கறையற்ற பலரும் அதை நகரத்தின் வளர்ச்சி என்று நாகரிகமாகச் சொல்லிக்கொள்கிறார்கள். உண்மையில் அதை வீக்கம் என்றே புரிந்துகொள்ள வேண்டும்.
அன்றொரு நாள் சென்னை போரூர் சாலையில் மணப்பாக்கத்தை ஒட்டிய கிராமத்தில் என் நண்பனின் அக்கா வீட்டில் ஓரிரவு தங்கி மறுநாள் ராமாவரம் எம்.ஜி.ஆர் வீட்டெதிரே அரை மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்தபோது காற்றில் தவழ்ந்து வந்து நாசியில் ஏறிய நெற்பயிரின் வாசம் இன்னமும் அப்படியே என்னுள் தங்கி இருக்கிறது.
அந்தக் காலைப் பொழுதின் பசுங்குளுமை நினைக்கும்தோறும் அலையடிக்கிறது. இன்று அதே பகுதியில் ஆண் – பெண் இளைஞர்கள் தூசிக்குத் தடுப்பாகக் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு பதற்றத்தோடு விரையும் காட்சியைக் காணும்போது வெறுமே ‘லேண்ட் புரமோட்டர்கள்’ மீது மட்டுமே கோபப்பட முடியவில்லை.
வளர்ச்சியும் கேடும்
உலகம் முழுவதுமே உற்பத்தி, வளர்ச்சி என்ற பெயரில் புறச் சூழலுக்கும் காற்று மாசடைதலுக் கும் மிகப் பெரும் கேட்டை மனித குலம் ஏற்படுத்தி இருக்கிறது. அதை நேர்செய்வது பெரும் முயற்சி. அதில் நீங்களும் நானும் உடனடியாகச் செய்வதற்கு ஒன்றும் இல்லை. காற்றைத் தூய்மைப்படுத்தும் பெரும் முயற்சிக்கு நாம் கைகொடுக்கும் கடமை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.
மணமும் கேடே
காற்று மேலும் மாசுபடாமல் இருப்பதற்கு அவரவருக்கு உரிய உடனடிப் பங்கை எப்போதும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். சொந்த உடலில் மணம் பரப்பிக்கொள்கிறேன் என்று வாசனாதி திரவியக் குழலைப் பிதுக்கிக் காற்றின் இயல்பைக் குறைப்பது தொடங்கி, நாம் ஓட்டிக்கொண்டு போகும் வாகனத்தில் ஆக்ஸிலேட்டரை முறுக்கிப் புகையைக் கிளப்புவது வரை எத்தனையோ வகைகளில் காற்றில் மாசு ஏற்படுவதைக் குறைக்கும் பொறுப்பு தனிப்பட்ட நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
மூக்கு முடியைக் கறுக்கவைத்து உள் நுழைந்து நுரையீரலில் புற்று நோயை உருவாக்கும் உயிர்க் கொல்லி சல்பியூரிக் – மெதில் ஐசோசயனைட் புகை குறித்து நாம் இங்குப் பேசாமலே அறிந்திருக்கிறோம்.
புறச்சூழல் காற்றின் மாசளவு அதிகரிக்கும்போது மூளையின் உத்தரவு இல்லாமலே நுரையீரல் உள்ளிழுக்கும் அளவைக் குறைத்துக் கொண்டுவிடும். உடலுக்கு ஒவ்வாத காற்றை மறுக்கும் அறிவைத் தன்னியல்பாகவே வளர்த்துக் கொண்டுள்ளது நுரையீரல். இனிய வாசம் என்று கருதப்படும் பூவின் வாசத்தைக்கூட அடர்த்தியான அளவுக்கு நுரையீரல் ஏற்பதில்லை.
அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ள காற்றுதான் உடலின், நுரையீரலின் தேவையே தவிர, ஆக்ஸிஜன் இடத்தை எடுத்துக்கொள்ளும் வேறு நல்ல அல்லது கெட்ட வாசம் அல்ல. இயல்புக்கு மாறான ஒரு வாசத்தை உணர்ந்ததும் நுரையீரல் உள்ளிழுக்கும் காற்றின் அளவைக் குறைத்துக் கொள்கிறது.
உடலைத் தளர்த்துதல்
துக்கம், சோகம், வருத்தம், மன அழுத்தம் போன்ற விரும்பத் தகாத உணர்வுகளின் போது சதையும் தசை நார்களும் இறுக்கமடைவதால் நுரையீரலின் ஏற்கும் திறன் குறைந்து விடுகிறது. அதனால் தான் மேற்படி உணர்வுகளுக்கு ஆட்படும்போது அடிக்கடி பெருமூச்சுவிட்டுக் கொள்கிறோம். மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற எழுச்சியான உணர்வு களுக்கு ஆட்படும்போதும், உடலைத் தளர்த்தியும் விரித்தும் உடற்பயிற்சிகள் செய்யும்போதும் அதிகமான காற்றை உள்ளிழுக்க இயலும்.
நுரையீரல் அமைந்துள்ள மார்புக் கூட்டுப் பகுதியும் தோள் பட்டை, கழுத்துப்பட்டைத் தசைப் பகுதிகளும் இளக்கமாகும் போது நுரையீரலின் முழுக் கொள்ள வுக்குப் போதிய இடம் கிடைப்பதால் முழுமையாகச் சுவாசிக்க ஏதுவாக இருக்கும். இரைப்பையின் கொள்ளளவில் முழு அளவுக்கும் உணவு எடுத்துக்கொள்வோமானால் செரிமான மண்டலத்தின் சுருங்கி விரியும் செயல்பாட்டுக்கு அதிக இடம் தேவைப்படுவதால் நுரையீரலின் செயல்திறன் குறையும்.
பாதுகாக்கும் தும்மல்
காற்றில் ஈரப்பதம் கூடுகிற குளிர் – பனிக் காலத்தில் உடலுக்கு ஒவ்வாத கிருமிகள் அடர்ந்திருக்கும் என்பதால் நுரையீரல் தன்னியல் பாகவே உள்ளிழுக்கும் அளவைக் குறைத்துக் கொண்டுவிடும். அதே வேளையில் உட்சேர்ந்த ஈரத்தைத் தும்மலை உருவாக்கி வெளித் தள்ளிவிடும். நுரையீரல், சுவாசக் குழாய், மேல் மூக்கின் அடிப்பாகம், ஆக்ஸிஜனில் அதிக அளவை எடுத்துச் செல்லும் மூளை நரம்பு போன்ற பகுதிகளில் நீர் தேங்கி விடாமல் நுரையீரல் மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையே தும்மல், இருமல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நமது உடலின் உயிராற்றல் (நோயெதிர்ப்புத் திறன் – இம்யூனிட்டி) முழு வீச்சில் இருந்தால், வெப்பச் சம நிலை சரியாகப் பேணப்பட்டிருந்தால் அது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உள் நுழையும் போதே எதிர்கொண்டு ஆவியாக்கி தனக்கு உகந்த வகையில் பயன்படுத்திக்கொள்ளும். அதனால்தான் ஆரோக்கியமான உடல் கொண்டவருக்கு எத்தனை தீவிரமான பனிக்காலத்திலும் சளி, தும்மல், இருமல் தொல்லைகள் இருப்பதில்லை.
தோள்பட்டையை, மார்பைக் குறுக்கி அமர நேர்கிற சூழலிலும் சுவாசிக்கும் மூச்சின் அளவு குறைகிறது. அதிலும் பேருந்தில் பயணிக்கும்பொழுது சதைப்பற்றான இருவருக்கு இடையே சிக்கிக் கொண்டால் போதும் சதை அழுத்தம், மன அழுத்தம் இரண்டும் சேர்ந்து சுவாசிக்கும் அளவு மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கிவிடும். நாம் அமர்கிறபொழுது உள்ளுறுப்புகள் மேல் நோக்கி உந்தப்படுவதால் நுரையீரலின் வசதியான இருப்பு குறைக்கப்பட்டு உள்ளிழுக்கப்படும் சுவாசக் காற்றின் அளவு குறைந்துவிடுகிறது. அமர்ந்த நிலையில் சுவாசத்தின் அளவு குறைவதால் மூளைக்குப் போகும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து மூளையின் செயல் திறன் மந்தமாகி விடுகிறது.
பொதுவாகவே அமர்ந்த நிலையில் சுமார் எழுபதிலிருந்து எண்பது சதவீதம் வரையிலும், படுத்த நிலையில் சுமார் ஐம்பதிலிருந்து 60% வரையிலும்தான் சுவாசத்தை உள்ளிழுக்கிறோம். ஆகவேதான் சுகவீனம் உற்றவர்களை அதிக காற்று சுவாசிக்கும் விதமாகச் சாய்ந்த நிலையில் படுக்க வைக்கிறோம். நிமிர்ந்து அமர்வதும் தோள்பட்டை விரிய இரண்டு கைகளையும் கூப்பிய வண்ணம் ஒரு நாளைக்குப் பத்து நிமிடங்களேணும் நிற்பது, நுரையீரலின் முழுக் கொள்ளளவுக்கும் மூச்சை உள்ளிழுப்பது போன்ற எளிய சுவாசப் பயிற்சிகளின் மூலம் உடலின் திறனை மேம்படுத்துவோம். ஆயுளை நீட்டிப்போம்.
தொடரும்...
தொடர்புக்கு: கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT