Published : 19 Jan 2019 11:43 AM
Last Updated : 19 Jan 2019 11:43 AM

மூலிகையே மருந்து 40: ஆயுளை நீட்டிக்கும் சீந்தில்

‘ஆயுளை நீட்டிக்கும் அதிசயப் பொருள் ஏதேனும் உண்டா?’ என்று கேட்பவர்களிடம், ‘இருக்கவே இருக்கிறது சீந்தில்’ எனச் சட்டெனப் பதில் உரைக்கலாம்! வயோதிகம் வாட்டும் போதும், தீராப் பிணிகளால் அவதியுறும் நேரத்திலும், உடல் நலனை மீட்டெடுக்க சீந்தில் போதும்! பல பருவங்களைக் கடந்து வாழும் ‘மூலிகை மார்க்கண்டேயரான’ சீந்தில் கொடி, மனித குலத்தில் பல மார்க்கண்டேயர்களை உருவாக்குகிறது.

பெயர்க்காரணம்: சோமவல்லி, அமிர்தவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்களைக்கொண்டது சீந்தில். ‘வல்லி’ என்றால் ‘கொடி’ என்ற பொருளில், கொடி வகையான சீந்திலுக்கு அமிர்த‘வல்லி’ எனும் பெயர். அமிர்தம் என்றால் ‘அழியாத தன்மையைக் கொடுக்கும்’ என்ற அர்த்தத்தில் ‘அமிர்தை’ எனும் பெயர் இதற்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் பொற்சீந்தில் எனும் இனமும் உண்டு.

அடையாளம்: இதய வடிவ இலைகளைச் சுமந்துகொண்டு சரசரவெனக் கொடியேறும் தன்மையை இது கொண்டுள்ளது. கொடி வகையானாலும், முற்றிய சீந்தில் கொடி வலிமைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழும். ‘மெனிஸ்பெர்மேசியே’ (Menispermaceae) குடும்பத்தின் உறுப்பினரான சீந்தில் கொடியின் தாவரவியல் பெயர் ‘டினோஸ்போரா கார்டிஃபோலியா’ (Tinospora cordifolia). ‘ஃபுரானோலேக்டோன்’ (Furanolactone), ‘டினோஸ்போரின்’ (Tinosporin), ‘பெர்பெரின்’ (Berberine), ‘பால்மடைன்’ (Palmatine) போன்ற மருத்துவ வேதிக்கூறுகளை சீந்தில் அதிகமாக வைத்திருக்கிறது.

உணவாக: சீந்தில் கிழங்கை நெய் வடிவில் காய்ச்சி, உணவு வகைகளில் சேர்த்துவர, பசித்தீ அதிகரித்து வயிற்று மந்தம் நீங்கும். தகிக்கும் தாகத்தையும் கொதிக்கும் உடல் வெப்பத்தையும் குறைக்க, நெற்பொரியோடு சம அளவு சீந்தில் சேர்த்து, தண்ணீரி லிட்டுக் கொதிக்கவைத்த இதமான பானத்தைப் பருகலாம்.

இதன் கிழங்குக் குடிநீர், சுரத்தைக் குறைக்கும் நேரடி மருந்து. செரிமானக் கருவிகள் சோர்வடைந்து, பசியும் ருசியும் இல்லாமல் அவதியுறும் போது, காய்ந்த சீந்தில் கொடி, லவங்கப்பட்டையை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி, ‘ஊறல்-பானத்தை’த் தயாரித்து, செரிமானத்துக்கு உற்சாகமூட்டலாம்.

நீரிழிவு நோயில் உண்டாகும் அதிதாகத்தைக் குறைக்க சீந்தில் உதவும் என்கிறது தேரன் வெண்பா. சீந்தில் கிழங்கால் பித்தம், பேதி, மாந்தம், மேக நோய்கள் போன்றவை சாந்தமடையும் என்பதை ’சீந்திற் கிழங்கருந்த தீபனமா மேகவகை…’ எனும் பாடல் தெரிவிக்கிறது.

மருந்தாக: இன்சுலின் சுரப்பை அதிகரித்து, அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் உற்பத்தியாகும் காரணிகளைத் தடுத்து, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க சீந்தில் உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எலும்புகளுக்கு ஊட்டத்தைக் கொடுப்பதோடு, எலும்புகளின் திண்மையை அதிகரித்து முதிர்ந்த வயதிலும் வீறுநடை போட சீந்தில் துணை நிற்கிறது. புற்று செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு, புற்று நோயின் அதிகாரத்தைக் குறைக்கும். தனது எதிர்-ஆக்ஸிகரணி செயல்பாடு மூலம், நமது உடல் உறுப்புகளின் செயல்திறனைப் பன்மடங்கு அதிகரிக்கிறது.

வீட்டு மருந்தாக: உள்ளங்கை, பாதங் களில் தோன்றும் எரிச்சலுக்கு, சீந்தில் சூரணத்தைத் தண்ணீரிலிட்டுப் பருக, எரிச்சலுக்கு நிவாரணம் கிடைக்கும். தலைபாரம், மூக்கில் நீர்வடிதல், அடுக்குத் தும்மல் போன்ற பீனச (சைனசைடிஸ்) குறிகுணங்களுக்குச் சீந்தில் சிறப்பான பலன் அளிக்கும். சீந்தில் துணைகொண்டு தயாரிக்கப்படும் ‘சீந்தில்-சுக்கு பால் கஷாயம்’, வாத நோய்களுக்கான மருத்துவப் பொக்கிஷம். சீந்தில், இஞ்சியின் நுண்கூறுகள், சித்த மருத்துவத்தின் கூட்டு மருத்துவத் தத்துவத்துக்கு ஆதாரம். மெலிந்த உடலுக்கு வலுவைக் கொடுக்க, சீந்தில் சூரணத்தோடு பூனைக்காலிச் சூரணத்தைச் சிறிதளவு சேர்த்துப் பாலில் கலந்து சாப்பிடலாம்.

சீந்தில்சர்க்கரை: சீந்தில் கொடியிலிருந்து நுணுக்கமாக உருவாக்கப்படும் ‘சீந்தில் சர்க்கரை’ (சீந்தில் மா) எனும் சித்த மருந்து, தோல் நோய் முதல் நீரிழிவு நோய்வரை கட்டுப்படுத்தும் திறமை வாய்ந்தது. தோல் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் சித்த மருந்துகளில், சீந்தில் சர்க்கரையின் சேர்மானம் மருந்தை மேலும் வீரியமாக்கும். வெண்ணிறத்துடன் கைப்புச் சுவையை உணர்த்தும் சீந்தில் மா, ஆரம்ப நிலை ஈரல் பிரச்சினைகளுக்கான மருந்தும்கூட!

இதன் புகையைச் சுவாசிக்கப் பல நோய்கள் குறையும் என்பதால், காய்ந்த சீந்தில் கொடியைப் புகை போடும் வழக்கம் கிராமங்களில் உண்டு. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க, இதன் கிழங்குத் துண்டுகளை மாலையாக்கி அணிந்துகொள்ளும் பழக்கமும் சில பகுதிகளில் இருக்கிறது.

இளம் சீந்தில் தண்டைவிட, கசப்பு ஊறிய முற்றிய சீந்தில் கொடிக்கே மருத்துவக் குணங்கள் அதிகம். முதிர்ந்த சீந்தில் கொடியைக் காயவைத்துப் பொடித்து, கற்கண்டுத் தூள் சேர்த்து, பாலில் கலந்து பருகுவது உடலை உரமாக்கி, ஆயுளை அதிகரிப்பதற்கான டானிக்.

பனிக்காலத்தில் ஏற்படும் சளி, தலைபாரத்துக்குச் சீந்தில் சாறு, கறிவேப்பிலைச் சாறு, கற்பூரவள்ளிச் சாறு, மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து மருந்தாகப் பயன்படுத்தலாம். சீந்தில் கொடி, பொடுதலை, வல்லாரை, திப்பிலி போன்ற மூலிகைகளின் சாற்றைச் சுண்டச் செய்து தயாரிக்கப்படும் ‘சுரச’ வகை மருந்து குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தத்தைக் குணப்படுத்தும்.

சீந்தில், நலத்துக்கான தூண்டில்!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x