Published : 12 Jan 2019 10:43 AM
Last Updated : 12 Jan 2019 10:43 AM
சுழன்று சுழன்று ஏறக்கூடிய அழகிய சுழல்கொடி உத்தாமணி! கொத்தாய்ப் பூக்கும் உத்தாமணியின் மலர்கள் காற்றில் அசையும்போது, ‘மணி’ அடித்து நம்மை வரவேற்பதைப் போன்ற தோற்றத்தை அளிக்கும். கடந்த தலைமுறையில் ‘கூகுள்’ வசதி இருந்திருந்தால், ‘இரைப்பு, சளி, இருமல் போன்ற தொந்தரவுகளுக்கு உடனடி தீர்வைக் கொடுக்க, அதிகம் தேடப்பட்ட தாவரமாக உத்தாமணியே இருந்திருக்கும். அது குழந்தைகள் நலனுக்கான முத்தான மூலிகையும் கூட!
பெயர்க்காரணம்: வேலிப்பருத்தி, உத்தமமாகாணி, உத்தமக்கன்னிகை, அச்சாணி மூலி, உத்தமதாளி போன்ற வேறு பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. காய் முற்றி வெடிக்கும்போது, உள்ளிருக்கும் இதன் ‘பஞ்சு சூழ் விதைகள்’ காற்றில் மிதந்து வேலியோரங்களில் விழுந்து கொடியாகப் படரும். இதன் காரணமாக இதற்கு ‘வேலிப்பருத்தி’ எனும் பெயர் ஏற்பட்டிருக்கிறது.
அடையாளம்: இதன் இதய வடிவ இலைகளைத் தொடும்போது மென்மையான உணர்வைக் கொடுப்பதோடு, இலைக் காம்பைக் கிள்ளினால் பால் வெளியேறும். சிறு முட்களைக் கொண்ட காய்களை வைத்து இதை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். ‘பெர்குலாரியா டேமியா’ (Pergularia daemia) எனும் தாவரவியல் பெயர் கொண்டது. ‘அஸ்கிலிபிடேசியே’ (Asclepiadaceae) குடும்பத்தைச் சார்ந்தது. டானின்கள் (Tannins), ஃப்ளேவனாய்ட்கள் (Flavanoids), புரதங்கள் போன்ற நலக்கூறுகள் இதில் உள்ளன.
உணவாக: வயிற்றுப் புழுக்களின் ஆதிக்கத்தால், பிள்ளைகளைப் பசியின்மை வாட்டும்போது, உத்தாமணி இலைகளைக் குடிநீரிட்டு அரைக் கரண்டியளவு கொடுக்க, புழுக்கள் வெளியேறிப் பசி அதிகரிக்கும்.
உத்தாமணி, வசம்பை இரட்டையர்களாகப் பாவித்துத் தயாரிக்கப்படும் மருந்துகள், இளம் குழந்தைகளுக்கு ஏற்படும் இனம்புரியா நோய்களுக்கும் தீர்வளிக்கும். இலைச் சாற்றைக் கரண்டி அளவு வழங்க, ஆஸ்துமா நோயாளர்களின் அவஸ்தை குறைவதை உணரலாம்.
தாய்ப்பாலோடு சேர்த்து இணை உணவுகளைக் குழந்தைகளுக்கு வழங்கும்போது உண்டாகும் மந்தம், வயிற்று வலிக்கு உத்தாமணி சேர்ந்த ‘பிள்ளை மருந்துகள்’ அருமையான நிவாரணம் அளிக்கக்கூடியவை. உத்தாமணி சாறுடன் ஊறவைத்த மிளகைப் பொடித்து, சிறிதளவு பாலில் கலந்து கொடுக்க, வாயுக் கோளாறு இம்சைப் படுத்தாது.
சுரத்தின் தீவிரத்தைக் குறைக்கவும் இந்த ‘உத்தாமணி-மிளகு’ பயன்படும். உத்தாமணி, நொச்சி, பொடுதலை போன்ற மூலிகைகளை வதக்கிச் சாறு பிழிந்து, சிறு கரண்டி அளவு குழந்தைகளுக்குக் கொடுப்பது, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.
மருந்தாக: இதன் வேருக்கு வலிநிவாரணி செய்கை இருப்பது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருக்கும் ‘டெர்பினாய்டுகள்’, காயம் ஏற்பட்ட இடத்தில் மீள்திசுக்களின் வளர்ச்சியை அதிகரித்து, விரைவாகக் காயத்தை ஆற்றுகிறது. கல்லீரலுக்குப் பாதுகாப்பளிக்கும் செய்கை இதற்கு உண்டு. ஆய்வு விலங்குகளின் ரத்த சர்க்கரை அளவையும் உத்தாமணி குறைத்திருக்கிறது. வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்த, இலைகளிலிருக்கும் டானின்கள் காரணமாக அமைகின்றன.
வீட்டு மருந்தாக: இதன் சாற்றைக் கொண்டு செய்யப்படும் பவழ பற்பம் எனும் சித்த மருத்து, நுரையீரல் நோய்களில் சிறப்பாகச் செயல்படக் கூடியது. வசம்பு, சுட்ட கரி, கொஞ்சம் உப்பைச் சட்டியிலிட்டு, உத்தாமணி சாறு சேர்த்துக் காய்ச்ச, வெண்மை நிறத்தில் பொடி கிடைக்கும்.
இதற்கு ‘உத்தாமணி கருக்கு’ என்று பெயர். குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த நோய்கள், செரியாமை போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவர் கூறும் அளவோடு வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். கருப்பைச் சார்ந்த கோளாறுகளை நிவர்த்திசெய்ய வழங்கப்படும் சித்த மருந்துகளுக்கு அனுபானமாக உத்தாமணி சாறு பயன்படுகிறது.
உத்தாமணிக் கொழுந்து, பூண்டு, விளாம்பழ ஓடு ஆகியவற்றை வறுத்து வயதுக்குத் தக்கபடி, வெண்ணெய்யில் குழப்பிக் கொடுக்க, கழிச்சல் குணமாகும். உத்தாமணி, மிளகு, ஓமம், சிற்றாமுட்டி வேர் போன்ற மூலிகைகளின் உதவியோடு தயாரிக்கப்படும் குடிநீர், வாத சுரத்துக்கான அருமருந்து. உத்தாமணி, தைவேளை, நாய்வேளை, குப்பைமேனி இலைகளை அரைத்து உடலில் துவாலையிடும் முறை சித்த மருத்துவத்தில் பின்பற்றப்படுகிறது.
உத்தாமணி இலைச்சாறு, தேனோடு சில மருந்துகளைச் சேர்த்துக் கொடுக்க, நுரையீரல் பாதை தெளிவடைந்து சுவாசம் மகிழ்ச்சியாய் உறவாடும். உத்தாமணி இலைச் சாற்றோடு, சிறிது உப்புக் கூட்டி கொடுக்க வாந்தியுண்டாக்கி கபத்தை வெளியேற்றும்.
நாட்பட்ட வாதம் தொடர்பான நோய்களுக்கு, இதன் வேரைக் கழிச்சல் மருந்தாகப் பிரயோகித்து, ‘விரேசனத்தால் வாதம் தாழும்’ என்ற தத்துவார்த்த அடிப்படையில் வாத நோய்களைக் கட்டுப்படுத்தும் மருத்துவ சூட்சுமம் சித்த மருத்துவத்திற்குச் சொந்தமானது. மூட்டுகளில் ஏற்படும் வீக்கங்களுக்கு இதன் இலைச் சாற்றோடு சுண்ணாம்பு கலந்து போடும் வழக்கம் உண்டு. உத்தாமணி இலைச் சாற்றுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து கொதிக்கவைத்து, பசை போலச் செய்து வீக்கங்களில் பற்றிட, உடனடியாக வீக்கம் வடியும்.
‘ஆலித் தெழுந்தநோய் அத்தனையும் தீருமே… வாதங் கடுஞ்சன்னி…’ எனும் உத்தாமணி பற்றிய பாடல், அதன் மருத்துவப் பலன்களை அழகாய் விவரிக்கிறது. உத்தாமணி பாலால் தாளித்த கற்சுண்ணத்தை, கற்ப மருந்தாகக் குறிப்பிடுகிறது சித்த மருத்துவம்.
உத்தாமணி… ஆரோக்கியத்துக் கான சிந்தாமணி!...
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT