Last Updated : 19 Jan, 2019 11:43 AM

 

Published : 19 Jan 2019 11:43 AM
Last Updated : 19 Jan 2019 11:43 AM

காயமே இது மெய்யடா 17: காற்றினிலே வரும் கீதம்

நாம் வாழும் சூழலில் உள்ள காற்று, நமது உடல்நலனுக்கு உகந்ததாக இல்லையென்பதை இத்தொடரில் பலமுறை பார்த்திருக்கிறோம். முடிந்த அளவு ஒவ்வொரு நாளும் தூசு, புகை மாசற்ற திறந்த வெளியில் சுத்தமான காற்றை ஆழ்ந்து சுவாசிப்பதற்கு உரிய நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

உடல் கடிகாரத்தின்படி நுரையீரல் காலை மூன்று மணியிலிருந்து ஐந்து மணிவரையில் மிகுந்த ஆற்றலுடன் இயங்கும். தூய்மையான காற்றை அப்போது சுவாசிப்பது உடல்நலனுக்கு மிகவும் நன்று. அப்போது நமது நுரையீரல் முழு வீச்சில் இயங்குவதைப் போலவே புவி மண்டலத்தின் காற்றும் ஆற்றலை முழு அளவுக்கு வெளிப்படுத்தும். புறச்சூழலைக் கவனித்துப் பார்த்தால் கோழி தொடங்கி புள்ளினங்களும் பிற உயிரினங்களும் அதிகாலை வேளையில் உற்சாகக் குரல் எழுப்புவதைக் கேட்க முடியும்.

அதைப் படைப்பு நேரம் (பிரம்ம முகூர்த்தம்) என்று இந்திய மரபு கூறுகிறது. அந்த நேரத்தில், காற்று மண்டலத் துணை உறுப்பாகிய பெருங்குடல் ஆற்றலுடன் இயங்கும். காலை ஐந்திலிருந்து ஏழு வரையிலாவது படுக்கையில் பல்லி யாக ஒட்டிக் கிடக்காமல் ஆற்றல் வழங்கும் காற்றைப் பெருமளவு உள்ளிழுக்க உடல், மூச்சுப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

குடும்பத்துடன் ஓர் உலா

வணிக மால்களாக மாற்றப்படாத பள்ளி மைதானங்கள் நடுத்தர, பெரு நகரப் பகுதிகளில் இருக்கின்றன. அவற்றில் காலையோ மாலையோ வேக நடை அல்லது மெல்லோட்டம் செல்ல வேண்டும். அதைக் குடும்பப் பழக்கமாக மாற்றிக் கொள்வது நல்லது. மைதானங்கள் மட்டுமல்லாது காலை நேரத்தில் பூங்காக்களிலும் உலவலாம்.

கடந்த பத்தாண்டுகளில் பூங்கா பராமரிப்பும் பயன்பாடும் மேம்பட்டுள்ளன குடும்பங்களாகக் காலை நேரத்தில் பூங்காவில் உலவுவது கலாச்சாரமாக மாற்றப்பட வேண்டும். அப்போது மட்டுமே எந்த வயதிலும் நாம் நோயற்றவர்களாக இருக்க முடியும்.

வாரத்துக்கு ஒருமுறையேனும் நமது வாழிடத்துக்கு அப்பால் உள்ள திறந்த பசுமைவெளியில் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் அரை நாளைச் செலவிட வேண்டும். நொறுக்குத் தீனி, சிறப்பான சாப்பாடு என்று மெனக்கெடாமல் நான்கைந்து குடும்பங்களாக அவரவர் வீட்டுச் சாப்பாட்டைக் கொண்டு சென்று பகிர்ந்து உண்பது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது என்ற அளவில் வைத்துக் கொண்டால் மட்டுமே இதைத் தொடர் நடவடிக்கையாக வைத்துக்கொள்ள முடியும்.

திறந்த வெளிக்காற்றைச் சுவாசிப்பது மட்டுமே இது போன்ற சுற்றுலாக்களின் முதன்மைப் பொருளாக இருக்க வேண்டும். இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு மதுரைச் சூழலியல் நண்பர்கள் மேற்கொள்ளும் பசுமை நடை. சமூகவியலாளர் முத்துக்கிருஷ்ணன் தொடங்கிய இந்த முயற்சி சுமார் 500 குடும்பங்களில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

சிந்தனையைக் கிளர்ந்தெழச் செய்யுங்கள்

நமது சுவாசத்தின் மூலமாகக் கிடைக்கப்பெறும் ஆக்ஸிஜனில் பெரும்பகுதியை மூளை எடுத்துக் கொள்கிறது. காலை ஏழு மணி வரைதான் காற்றில் அதிக ஆக்ஸிஜன் நிலவுகிறது. இன்றைய நடுத்தர வர்க்க வாழ்க்கை முறையில் அதிகாலை என்றாலே அது ஆறரை மணியைக் குறிப்பதாகிவிட்டது.

எழுவதிலிருந்து அவரவர் அன்றாடக் கடமையைப் பள்ளி, அலுவலகம் எனத் தொடங்கும் ஒன்பதரை மணி வரையிலான நமது நேரம் உடல், மனம், சிந்தனை அத்தனையும் பரபரப்பின் உச்சத்தை நோக்கிப் பயணிப்பதாக இருக்கிறது. அதுவே நமது உடல் நலக்கேட்டின் ஆரம்பப் புள்ளி.

நம்முடைய நெற்றியை மீண்டும் மீண்டும் முட்டிக்கொண்டிருக்கும் கான்கிரீட் முனைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்கிறபோது மட்டுமே உடலின் இறுக்கம் தளரும். உடல் இறுக்கம் தளர்கிற போதுதான் மன இறுக்கம் தளரும். மன இறுக்கம் தளர்ந்தால் மட்டுமே செக்குமாட்டுத் தனத்தில் உழலும் சிந்தனையிலிருந்து மாறுபட்டு ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்க இயலும். தம் கட்டி உடலை விரைப்பாக்கிக் கொள்வதற்கு மாறாக நம்முடைய அன்றாடங்களை ஒரு பறவையைப் போலக் கடந்து செல்ல உடலையும் மனத்தையும் தளர்த்துவதற்குப் பழக வேண்டும்.

நம்முடைய படைப்பூக்கத் திறன் என்பது தலைக்குள் கொட்டி வைத்துள்ள தகவல் சேமிப்பிலிருந்து எழுவதல்ல. மாறாக, புறத்திலிருந்து உள்ளே நுழைவதற்கு ஏற்ற வண்ணம் உடலும் மனமும் இவையிரண்டின் தொடர்ச்சியாகக் கெட்டிப்படாத சிந்தனை இளக்கமும் தான் சிந்தனைக் கிளர்ச்சிக்குத் துணையாக இருக்கும். நுரையீரலின் சிற்றறைகளுக்குள் மிக நல்ல காற்றை இருத்தி வைக்கப் பொருத்தமான வழி, கடற்காற்றை ஈர்ப்பது, மலையேறுவது - இவையிரண்டால் நம் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்துப் பார்க்கும் முன் கடந்த இதழின் தொடர்ச்சியான ஒன்றைப் பார்ப்போம்.

மூக்கடைப்பை அகற்றும் வெற்றிலை

தற்காலத்தில் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சளி மூக்கடைப்பு இல்லாத நாட்களே அரிதாகி வருகிறது. மாசு நிறைந்த புறச் சூழல், சத்தற்ற உணவுமுறை போன்ற காரணிகளோடு தற்கால மருந்துகளும் இளம் தாய்மார்களின் குழந்தைப் பேற்றுக்குப் பின்னான உடல் பேணுதலில் உள்ள அக்கறையின்மையும் குழந்தைகளின் தொடர் சளிக்கு முக்கியமான காரணம். பச்சிளங் குழந்தைக்குப் பிடிக்கும் சளியை எப்படித் தவிர்ப்பது என்று பார்ப்போம்.

கனமான புதுத் தோசைக்கல்லை அடுப்பில் வைத்துக் கால் தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு மிதமாகச் சூடேற்ற வேண்டும். அது ஆவி விடத் தொடங்கும் தருணத்தில் நன்றாக விரிந்த கருப்பு வெற்றிலை இரண்டைப் போட்டுச் சூடேற்ற வேண்டும். குழந்தையின் தோல் தாங்கும் பக்குவத்துக்குச் சூடேறியதும், அதை எடுத்துக் குழந்தையின் இரண்டு மார்புப் பகுதியிலும் உள் பக்கமாக வைத்தால், எண்ணெய்ப் பசையில் வெற்றிலை ஒட்டிக்கொண்டு விடும். இதேபோல நான்கைந்து முறை மார்பிலும் தோள்பட்டையிலும் வைத்து எடுத்தால் மூச்சு விடுவது சீரடையும்.

சளியை விரட்டும் துளசி

சளி மேலும் தீவிரமாகாமல் தடுக்க  அரைப்பிடி துளசியைக் கனமான இரும்பு வாணலியில் போட்டுப் பத்துத் துளியளவு நல்லெண்ணெய் விட்டு ஆவி எழப் புரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். துளசி சூடாக இருக்கும் போதே அடுப்படிக்குப் பயன்படுத்தும் கல்லுரலில் போட்டு அரைத் தேக்கரண்டி நீர் விட்டு இடிக்க வேண்டும். துளசி இலை திரளும் பக்குவத்துக்கு வந்தபின்னர் ஐந்தாறு சொட்டு சாறு பிழிந்து அதனுடன் அதே அளவு தேனில் கலக்கி, குழந்தையின் நாவில் தடவிவிட வேண்டும். துளசிச் சாறு குழந்தையின் சளியை மலத்தின் வழியாகவோ வாந்தியாகவோ வெளியேற்றிவிடும். மூக்கின் வழியாகச் சளி இளகியும் செல்லலாம்.

சளி வெளியேறுவதைத் தடுக்கலாமா?

வெளியேறும் சளியைத் தடுக்க முயலுவதே அடிக்கடி சளித் தொல்லை உருவாவதற்கான முதன்மையான காரணம் என்பதால், அதைத் தடுக்க முயலக் கூடாது. சளி வெளியேறுவதை நம்மால் ஒருபோதும் தடுக்க இயலாது என்பதே நிதர்சனம். ஆனால், சளியின் தொல்லையைத் தணிக்கவும், அடுத்து சளி உருவாவதைத் தவிர்க்கவும் முடியும். அது குழந்தைப் பருவத்தில் மட்டுமல்ல அனைத்துப் பருவத்திலும் எப்படிச் சாத்தியம் என்பதையும் மலையேற்றம், கடற்காற்று சுவாசத்தின் நன்மை குறித்தும் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்...)
தொடர்புக்கு: கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x