Published : 29 Dec 2018 11:42 AM
Last Updated : 29 Dec 2018 11:42 AM
பிரபஞ்சத்தில் இருக்கிற கூறுகள் அனைத்தும் மனித உடலாகிய பிண்டத்திலும் உள்ளன. பிரபஞ்சத்தின் வேறெந்தக் கோளத்திலும் இல்லாத காற்றும் நீருமே இந்தப் புவிக் கோளத்தின் தனித்துவங்கள். காற்றும் நீருமே உயிர்களின் ஆதாரங்கள். நாம் சுவாசிக்கும் காற்று அதன் தூய்மைத் தன்மையை இழக்கத் தொடங்கி மூன்று நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.
17-ம் நூற்றாண்டின் இறுதியில் மேற்குலகில் தொழிற் புரட்சித் தொடங்கியபோதே காற்று அதன் தூய்மையை இழக்கத் தொடங்கி விட்டது. அப்போதிருந்து மனித சுவாச முழுமையின் அளவு குறையத் தொடங்கிவிட்டது. நுரையீரலில் படியும் தார் போன்ற கரும்புகைப் படிவத்தையும் பஞ்சாலைகள், நூற்பாலைகள், ரசாயன ஆலைகள் போன்றவை மூலமாக நுரையீரலில் படியும் வறண்ட தூசிப் படிவத்தையும் உடலியளார்கள் பிற்காலத்தில் கண்டறிந்தனர். ஒரே விதமான நோய்க்குப் பலியான பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உடல்களை ஆய்வு செய்த பின்னர் மருத்துவர்கள், இதற்குக் காரணம் அவர்கள் செய்யும் பணிச் சூழல் என்று ஆய்வறிக்கை அளித்தனர்.
ஆனால், மேற்குலகில் ஆலையின் பெரும் புகை போக்கி மேல் நோக்கி உயர்ந்த பொழுதே கவிஞர்களும் இயற்கைப் பற்றாளர்களும் தொழில் மயத்திற்கு எதிராகக் குரல் எழுப்பினர். ஆனால், சுற்றுச் சூழல்குறித்த கரிசனமும் மனித ஆரோக்கியம் குறித்த அக்கறையும் இல்லாத உலகின் பல பகுதிகளில் ஆலைப் புகையும் தூசு மாசுகளும் காற்றில் நச்சுத் தன்மையை அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
ஐம்பூதங்கள்
காற்றின் தூய்மையைச் சுத்திகரிக்கும் ஆற்றல் இயற்கைக்கு உண்டு தான். ஐம்பெரும் பூதங்களில் ஒன்றான காற்றில் உள்ள நச்சை வெளி எனும் ஆகாய பூதம் தொடர்ந்து தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது. வெளிப் பூதத்தின் உயிர் வடிவங்களே தாவரங்களும் மரங்களும். மரம், செடி, கொடி ஆகியவற்றின் இலைகள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. இயற்கையின் இந்த இயல்பாற்றலால் 17-ம் நூற்றாண்டில் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஆலைகள் வெளியிட்ட சில நூறு கிலோ கிராம் புகையைத் தூய்மைப்படுத்த முடிந்தது.
தடுமாறும் இயற்கை
ஆனால், இன்று நீங்களும் நானும் உள்ளிட்ட உலக மக்கள்தொகையினர் 753 கோடிப் பேரும் ஆளாளுக்கு நாள்தோறும் பல பத்து கிலோ கார்பனை வெளியிடுகிறோம். நாம் சுவாசித்து வெளியிடும் கார்பன் டையாக்ஸைடில் தொடங்கி, நமது வாகனங்கள் வெளியேற்றும் புகை, நமது நுகர்வுப் பொருட்களைத் தயாரித்து அளிக்கும் ஆலைகள் வெளியேற்றும் அடர்த்தியான புகை ஆகியவை இந்தக் கோளத்தின் வெளி முழுவதையும் மிக வேகமாக மாசடையச் செய்கிறது. மாசாக்கப்படும் வேகத்துக்குத் தூய்மைப்படுத்தும் (ஆகாய பூதம்) வெளி ஆற்றலால் ஈடு கொடுக்க முடிவதில்லை. நச்சுத் தன்மையை நீக்கும் ஆகாய பூதத்தின் திறன் வேகமாகக் குறைத்துக்கொண்டே வருகிறது. மனித இனம் தன் பங்குக்கு நாள்தோறும் பல்லாயிரணக்கான ஏக்கரில் பரவி விரிந்திருக்கும் வானுயர்ந்த மரக்காடுகளை அழித்துக்கொண்டே வருகிறது.
நைட்ரஜன் ஆக்ஸைட், கார்பன் மோனாக்ஸைட், சல்பர் டையாக்ஸைட், ஓசோன் போன்ற உடலுக்கு ஒவ்வாத கூறுகள் மிக வேகமாகக் காற்றில் அதிகரித்து வருகின்றன. இந்திய நகரங்களில், வாரணசி, கான்பூர், டெல்லி, லக்னோ, சென்னை ஆகியவற்றின் காற்று சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறிவிட்டது. பூங்கா நகரம் என்றழைக்கப்படும் பெங்களூரு, சுத்தமான காற்றுக்கும் குளுமைக்கும் பெயர் பெற்றிருந்தது. சமீப காலத்தில் பெங்களூரும் அவப்பெயருக்கு ஆளாகிக்கொண்டு வருகிறது. ஆக்சிஜன் பார்லர்களும் சுவாசிக்கும் தகுதியான காற்றைத் தயாரிக்கும் கம்ப்ரஸர்களும் எனக் காற்று ஒரு வியாபாரமாக மாறி வருவதைப் பொருளாதார வளர்ச்சி என்றும் சில நிபுணர்கள் சொல்லக்கூடும்.
விற்பனைக்கு வரும் ‘காற்று’
வளர்ச்சியடையாத நாடுகளில் நல்ல நீருக்குக் காசு கொடுக்கும் நிலையிலிருந்து அடுத்த கட்டமாக உயிரின் முதல் தேவையான காற்றையும் காசு கொடுத்து வாங்கும் மிக மோசமான நிலையை நோக்கி மக்கள் தள்ளப்படுகின்றனர். வளர்ச்சியடைந்த மேற்கத்திய அல்லது அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் இந்த நிலை இல்லை. சூழல் மாசு பற்றிய விழிப்புணர்வு அந்த நாடுகளில் அதிகரித்துவிட்டதால் காற்றில் மாசை உருவாக்கும் தொழில்களைக் கட்டுப்படுத்துவது அந்நாட்டு அரசுகளின் கொள்கை முடிவாக ஆக்கப்பட்டு விட்டது. சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் தொழில்கள் அனைத்தும் இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளை நோக்கித் தள்ளப்பட்டு விட்டன.
சுவாசிக்கும் வழிமுறைகள்
நமது அரசுகளின் கொள்கை முடிவில் நீங்களோ நானோ எந்த மாற்றத்தையும் கொண்டுவந்து விட முடியாது. ஆனால், இத்தனை மோசமான சூழலிலும் நம் உடலுக்குத் தேவையான அதிகபட்சத் தூய்மையான காற்றை நம்மால் சுவாசிப்பதற்கான வழி முறைகளை உருவாக்கிக் கொள்ள முடியும். நுரையீரலுக்குள் செல்லும் காற்றின் தூய்மைத் தன்மையைப் பார்க்கும் முன் நுரையீரலின் முழு கொள்ளளவுக்கு நாம் சுவாசிக்கிறோமா என்பது நாம் எழுப்பிப் பார்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி.
இன்றைய ஆலை உற்பத்தி முறையில், நடுத்தர வர்க்க வாழ்க்கை முறையில் சுவாசத்தை முழு அளவுக்கு உள்ளிழுக்கும் வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது. நாற்பது வயதைக் கடந்த ஒருவர் அரை கிலோமீட்டர் நிற்காமல் நடக்க முடிகிறது என்றால் அவர் அன்றாடம் உடற்பயிற்சி செய்கிறவராக மட்டுமே இருக்க முடியும். உண்மையில் தனித்த பயிற்சி ஏதும் மேற்கொள்ளாமல் தன்னியல்பிலேயே அவசியமான நேரங்களில் எல்லாம் நடக்கவும் ஓடவும் முடிய வேண்டும். தலைக்கு மேல் உள்ள செல்பில் உள்ள டப்பியை எக்கி எடுக்கும்போது அங்கங்கே பிடிக்கிறது வலிக்கிறது என்றால் அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே நுரையீரலின் தரம் குறைந்துவிட்டது என்று பொருள். மூச்சினை உள்ளிழுக்கும் அளவு குறைந்துவிட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுவாசமே வாழ்வு
நாம் வாங்கும் மூச்சின் அளவும், நுரையீரலின் தரமும் குறையக் காரணங்கள் புகைச் சூழலிலும் தூசிச் சூழலிலும் வேலை செய்வதோ வசிப்பதோ மட்டுமே மல்ல. ஒரு நாளில் பத்து மணி நேரம் புறக் காற்று சிறிதும் இல்லாத ஏசி அறையில் அமர்ந்துவிட்டு, வீட்டிலும் வந்து ஏசி அறையில் தூங்குவதும்கூடக் காரணமாகி விடலாம். குழந்தைகள் தனித்து ஓடவும் நடக்கவும் தொடங்கிய காலம் தொட்டு இறுதிக் காலம்வரைக்கும் இலகுவான, இயல்பான, சுதந்திரமான மூச்சைச் சுவாசிக்கும் ரகசியத்தைக் கற்றுக்கொண்டால் ஒருவரது வாழ்நாளில் நுரையீரல் தொடர்பான நோய்கள் மட்டுமல்ல வேறெந்த நோயும் அவரது “ஆரா”வுக்கு வெகுதொலைவுக்கு அப்பாலே நின்று விடும். சுதந்திரமான சுவாசம் என்பது நுரையீரலுக்கானது மட்டுமல்ல; உடலின் ஒவ்வொரு செல்லுக்குமானது. சுதந்திர சுவாசத்திற்கான ரகசியத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.
தொடரும்...
தொடர்புக்கு: கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT