Published : 19 Jan 2019 11:43 AM
Last Updated : 19 Jan 2019 11:43 AM
என் ஸ்மார்ட் போனில் ‘பேண்டர்ஸ்னாட்ச்’ எனும் ஆங்கிலப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தக் காட்சி வந்தபோது உண்மையாகவே வாயடைத்து நின்றேன். கதாநாயகன் உணவு மேஜை அருகே அமர்ந்து இருக்கிறான். அவன் தந்தை கதாநாயகனை நோக்கிச் சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்கிறார். அவருடைய ஒரு கையில் பழரசம் இருக்கிறது, மற்றொரு கையில் பிஸ்கட் இருக்கிறது.
திடீரென ஸ்மார்ட் போன் திரையில் ‘பழரசம்’, ‘பிஸ்கட்’ என இரு வார்த்தைகள் ஒளிர்கின்றன. உங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்யும்படி அது அறிவுறுத்துகிறது. நீங்கள் பழரசத்தைத் தெரிவு செய்தால் திரையில் கதாநாயகன் பழரசம் அருந்துகிறான், நீங்கள் பிஸ்கட்டைத் தெரிவு செய்தால் கதாநாயகன் திரையில் பிஸ்கட் தின்கிறான். இப்படியாக நீங்கள் தேர்வு செய்ததன் அடிப்படையில் சினிமா நகர்கிறது.
கதையை நகர்த்தும் பார்வையாளர்
இதை interactive சினிமா என்கிறார்கள். பிரபல இணையத் திரைப்படச் செயலியான netflix இந்த முயற்சியைப் பரீட்சார்த்த அடிப்படையில் செய்திருக்கிறது. டிஜிட்டல் திரைப்படங்களை உங்கள் ஸ்மார்ட் போனுக்குக் கொண்டுவரும் செயலியே நெட்ஃபிளிக்ஸ். அது அளிக்கும் இந்த இன்டராக்டிவ் சினிமா புதுமையாக இருக்கிறது. இந்த இன்டராக்டிவ் சினிமாவில் கதாபாத்திரங்களின் தேர்வையும் அவர்களின் செயல்களையும் நீங்களே தெரிவு செய்ய முடிவதால், நீங்கள் பார்க்கும் படம் உங்கள் விருப்பத்துக்கேற்றாற்போல் நகரும்.
சுருக்கமாகச் சொன்னால், கதையின் நகர்வைப் பார்வையாளரின் தேர்வே முடிவுசெய்கிறது. இனிவரும் காலத்தில் கதையை மட்டுமின்றிக் காட்சிகள், கதாபாத்திரங்களின் உடை போன்றவற்றைக்கூடப் பார்வையாளரே தேர்வு செய்யும் தொழில்நுட்பம் வரலாம். இன்றைய தொழில்நுட்பம் சினிமா பார்ப்பதைப் புதுவித அனுபவமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. பார்வையாளரின் விருப்பத்துக்கேற்றாற்போல் நகரும் இந்த சினிமாவை அடுத்த தலைமுறை சினிமா என்கிறார்கள்.
பேராபத்தை உருவாக்கும் தொழில்நுட்பம்
நிறைகள் பல இருந்தாலும், இந்த இன்டராக்டிவ் சினிமாவில் பேராபத்தும் உள்ளது. நீங்கள் நெட்ஃபிளிக்ஸ் செயலியில் படத்தைப் பார்ப்பதால், உங்கள் தேர்வுகளை அந்தச் செயலியால் பதிவுசெய்து கொள்ள முடியும். பார்வையாளர்கள் என்ன தெரிவு செய்கிறார்கள் என்பதைப் பதிவுசெய்து கொள்வதன் மூலம், அந்தப் பார்வையாளரின் மன ஓட்டத்தை எளிதாகப் பகுப்பாய்வு செய்துவிட முடியும்.
பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் உளவியலைத் தெரிந்து அதைத் தமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் சாத்தியத்தை அந்த சினிமாவுக்குப்பின் இருக்கும் மனிதர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் அளிக்கிறது. ஏற்கெனவே, ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் நம்மைச் சோதனை எலிகளாக்கி நம்மை அவர்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆட வைக்கின்றன.
இந்த மாதிரியான இன்டராக்டிவ் சினிமாக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், ஓர் அரசு தன் குடிமக்களை அது விரும்பும் கருத்துக்கு ஆதரவாகச் செயல்படவைக்க முடியும். மக்களின் எண்ணவோட்டத்தைப் படித்துவிட்டால், தன் மக்களைத் தந்திரமாக வசீகரித்து, அவர்கள்மீது அவர்களுக்கே தெரியாமல் ஓர் உளவியல் போரையே அரசால் நடத்த முடியும்.
வருங்காலத்தைப் பயனுள்ளதாக்குவோம்
நாம் இந்த மாதிரியான இன்டராக்டிவ் சினிமாக்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொழுதுபோக்காக இருந்தாலும், அது நம்மையும் நம் சமூகத்தையும் மேம்படுத்துவதாகவே இருக்க வேண்டும். ஒருபோதும் நம்மை எலிகளாக, ஆட்டு மந்தைகளாக மாற்றும் வாய்ப்பை அவற்றுக்கு நாம் அளித்துவிடக் கூடாது. நம்மையும் நம் சமூகத்தையும் மேம்படுத்தும் வகையில் இந்த இன்டராக்டிவ் சினிமா இருந்தால், வருங்காலத்தில் நம் பொழுதுபோக்கும் பயனுள்ளதாக அமையும்.
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment