Published : 22 Dec 2018 12:31 PM
Last Updated : 22 Dec 2018 12:31 PM

மூலிகையே மருந்து 36: நோய்களைக் கொய்யும் ‘கத்திரி!’

ஒழுகும் மூக்கை இயல்பாக்கி, குளிர் காலத்தை ஆனந்தமயமாக்கும் மூலிகை, கண்டங்கத்திரி. இப்போதைய பனிச்சூழலுக்கு அத்தியாவசியம். உடல் முழுவதும் கூர்மையான முட்களுடன் ஆக்ரோஷமாகக் காணப்படினும், கபத்தைத் தகர்த்தெறியும் ‘மூலிகை அன்பன்’ இது. கம்பீரமான குரலுக்குச் சொந்தம் கொண்டாட, கண்டங்கத்திரியை நமது சொந்தமாக்கிக்கொண்டால் போதும். தரிசு நிலங்களில்கூட இயல்பாய் முளைத்துக் கிடக்கும் கண்டங்கத்திரி, ‘நோய்களை விரட்டுவதில் விற்பன்னர்’.

பெயர்க் காரணம்: கண்டங்காரி, பொன்னிறத்தி, முள்கொடிச்சி, சிங்கினி ஆகிய வேறு பெயர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. கண்டத்தில் (கழுத்தில்) உள்ள குற்றத்தைச் சரிசெய்யும் கத்திரி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ‘கண்டங்’கத்திரி. அதிக கபத்தைக் கட்டுப்படுத்த உதவும் மூலிகை என்பதால், ‘கபநாசினி’ என்ற பெயரும் உண்டு.

அடையாளம்: படர்ந்து செல்லும் முட்கள் ஏந்திய கண்டங்கத்திரியின் பழங்கள் மஞ்சள் நிறத்திலும், மலர்கள் ஊதா நிறத்திலும் காட்சியளிக்கும். ‘சொலானேசியே’ (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாவரவியல் பெயர் ‘சொலானம் சுரடென்ஸ்’ (Solanum surattense). சொலனைன் (Solanine), சொலசொடைன் (Solasodine), பீட்டா-கரோடீன் (Beta-carotene), கொமாரின்கள் (Coumarins) போன்ற தாவர வேதிப்பொருட்கள் இதில் அங்கம் வகிக்கின்றன.

உணவாக: கண்டங்கத்திரி பழ வற்றலைக்கொண்டு செய்யப்படும் ‘மருந்துக் குழம்பு’, மாசடைந்த நுரையீரலைச் சுத்தப்படுத்தும். பசியில்லாமல் அவதிப்படுபவர்கள், செரிமானத்தைத் துரிதப்படுத்தும் கண்டங்கத்திரிப் பழத்தைச் சமையலில் சேர்த்து வரலாம். இரைப்பு, இருமல், அரிப்பு ஆகியவற்றைப் போக்கும் மகத்தான பழத்தை, கண்டங்கத்திரியிடமிருந்து உரிமையுடன் எடுத்துக் கொள்ளலாம்.

இதன் பழத்தை உலர்த்திப் பொடித்து அரை ஸ்பூன் அளவு, தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, இரைப்பு, இருமல் அறிகுறிகள் நன்றாகக் குறையும். கண்டங்கத்திரிப் பழத்தோடு தூதுவளைப் பழத்தையும் சேர்த்து உலர்த்தி, சிறிது மிளகுத் தூள் சேர்த்து கப நோய்களுக்கு முதலுதவி மருந்துப் பொடியாக அலமாரிகளில் சேமித்து வைக்கலாம்.

மருந்தாக: செரிமானப் பகுதியில் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உறிஞ்சப்படுவதற்குக் கண்டங்கத்திரி உதவும். ரத்தத்தில் அதிகரித்திருக்கும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் திறனும், நுரையீரல் புற்று செல்களுக்கு எதிராகச் செயல்படும் வீரியமும் கண்டங்கத்திரிப் பழங்களுக்கு இருப்பதாக ஆய்வு கூறுகிறது. புழுக்கொல்லி செய்கையுடைய கண்டங்கத்திரி, வயிறு மற்றும் குடல் பகுதியில் கிருமித் தொற்றுகள் ஏற்படாமல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளப் பயன்படுகிறது.

வீட்டு மருந்தாக: கண்டங்கத்திரி வேர், கோரைக் கிழங்கு, சிறுதேக்கு, சுக்கு, சிறுவழுதுணை வேர் ஆகியவற்றைத் தண்ணீரிலிட்டுக் காய்ச்சி குடிநீர் வகை மருந்தாகப் பயன்படுத்த, வாத சுரம் உடலில் தங்காது என்கிறது ‘தேரன் குடிநீர்’ பாடல். கண்டங்கத்திரி வேரைக் குடிநீரிலிட்டு, அதில் கொஞ்சம் திப்பிலிப் பொடியும் தேனும் கலந்து சாப்பிட, இருமல் மறையும். உடலில் தோன்றும் வியர்வை நாற்றத்தைப் போக்க, இதன் இலைச் சாற்றோடு நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி உடலில் பூசிக் குளித்து வரலாம்.

இதன் பழத்திலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், வெண்புள்ளி நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. விக்கலை நிறுத்த கண்டங்கத்திரி விதையுடன், திப்பிலி மற்றும் அமுக்கரா சூரணம் சேர்த்து, குடிநீராகக் காய்ச்சி, தேன் சேர்த்துக் கொடுக்கலாம். கண்டங்கத்திரிப் பழம், துளசி, வெற்றிலை ஆகியவற்றின் சாற்றை நல்லெண்ணெய்யிலிட்டுக் காய்ச்சித் தயாரிக்கப்படும் எண்ணெய்யைக் கொண்டு தலை முழுகிவர, பீனச (சைனஸைடிஸ்) தொந்தரவுகள் மறையும்.

கண்டங்கத்திரி தாவரத்தை எரித்துச் சாம்பலாக்கி, அதைக்கொண்டு பல் துலக்கி வர, பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களைத் தடுக்க முடியும். பொடுகுத் தொல்லையைக் குறைக்கும் எண்ணெய் வகைகளில் இதன் இலைச் சாற்றைச் சேர்த்துப் பயன்படுத்த, சிறப்பான பலன்களை விரைந்து கொடுக்கும்.

சிறுநீரடைப்பைச் சரி செய்ய, கண்டங்கத்திரி இலைச் சாறு மருந்தாகப் பயன்படுகிறது. ஆசனவாய்ப் பகுதியில் தோன்றும் அரிப்பு எரிச்சலைக் குணமாக்க, கண்டங்கத்திரி மலர்களை நல்லெண்ணெய்யிலிட்டுக் காய்ச்சி, அந்தப் பகுதியில் தடவலாம்.

கண்டங்கத்திரி… நோய்களுக்குப் போடும் கத்திரி!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x