Last Updated : 07 Dec, 2018 06:48 PM

 

Published : 07 Dec 2018 06:48 PM
Last Updated : 07 Dec 2018 06:48 PM

காது கொடுத்தமைக்கு நன்றி!

“தென்னையைப் பெத்தா இளநீரு… பிள்ளையைப் பெத்தா கண்ணீருன்னு சொல்வாங்க. எங்களுக்குத் தென்னைகள்தாம் பிள்ளைகள். அதெல்லாம் இறந்துகிடக்கு பாருங்க. பெத்த பிள்ளையோட சடலத்தை மண்ணில் புதைக்காம, அதைத் தினமும் பார்த்துக்கிட்டிருக்கிறது எவ்வளவு கொடுமை.? மனசு வலிக்குதய்யா…” – என்று அழுகிறார் செல்வராஜ்.

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்காடு கிராமத்தைச் சேர்ந்த தென்னை விவசாயி. ‘கஜா’ புயலில் தென்னம்பிள்ளைகளை இழந்தவர், இன்று தன்னையே இழக்கும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார். விவசாயிகளுக்குத் தென்னை என்றால், ‘டெல்டா’ பகுதி மீனவர்களுக்குப் படகுகள்!

அந்த மாவட்டத்தில் உள்ள பலரின் நிலை இன்று இதுதான். 1992-ம் ஆண்டில், ‘பேரிடர்’ என்பதை ‘சூழலியல் ரீதியாக மட்டுமல்ல, சமூக, உளவியல் ரீதியாக ஏற்படும் இடையூறுகளும் பேரிடர்தாம்’ என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுத்தது. நாட்டில் இன்று ஏதேனும் பேரிடர்கள் ஏற்பட்டு உடல் ரீதியாகக் காயம்பட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு முதலுதவி முதல் அவசர சிகிச்சைவரை வழங்கப்பட்டு வருகிறது.

அந்தப் பேரிடரால் மக்களுக்கு ஏற்பட்ட உளவியல்ரீதியான காயங்களுக்கு எந்தவிதமான சிகிச்சையையும் வழங்கப்படுவதில்லை. சிகிச்சை என்ன… முதலுதவிகூட இல்லை என்பதுதான் சோகம்!

உயிர்ச் சேதங்கள், பொருளாதார இழப்புகள், குடும்ப நபர்களை விட்டுப் பிரிதல், பாதுகாப்பின்மை, நம்பிக்கையின்மை, பேரிடர் காலத்திலும் சாதி, மதம், இன, மொழிரீதியான பாகுபாடுகள் பார்ப்பது, நிவாரண முகாம்களில் தங்களின் தனிநபர் உரிமை (பிரைவஸி), கண்ணியம் ஆகியவை பறிபோவது, உள்ளூர் மரபு, பண்பாடு ஆகியவற்றுக்குப் பொருந்தாத மறுவாழ்வு நடவடிக்கைகள் என ஒரு பேரிடரின்போதும், பேரிடருக்குப் பிறகும் மேற்கொள்ளப்படுகிற செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் சொல்லி மாளாது.

அதுபோன்ற நேரத்தில், அவர்கள் எதிர்பார்க்கும் விஷயம் ஒன்றுதான்… தங்களது கஷ்டங்களை யாரேனும் காதுகொடுத்துக் கேட்டுவிட மாட்டார்களா என்பதுதான்! யாரிடமாவது தங்களின் துயரத்தைக் கொஞ்ச நேரத்துக்கு இறக்கிவைத்துவிட முடிந்தால், அவர்களது மன உளைச்சலுக்கு அதைவிடப் பெரிய வடிகால் வேறு எதுவும் இருந்துவிடப் போவதில்லை. அந்த மாற்றத்தை நோக்கி முதல் அடி எடுத்து வைத்திருக்கிறது புதுக்கோட்டை மாவட்டம்.

வழிகாட்டும் புதுக்கோட்டை

கல்வியைப் பெண்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, ‘அறிவொளி இயக்க’த்தின் கீழ், பெண்கள் பலரும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டார்கள். ‘கல்வியை இப்படியும் கொண்டுசேர்க்க முடியும்’ என்று தமிழகத்திலேயே முதன்முதலாக நிரூபித்தது புதுக்கோட்டை மாவட்டம்.

அந்த முன்னெடுப்பு இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் பேசப்பட்டது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான், தன் புத்தகம் ஒன்றில், இந்தத் திட்டத்தைப் பற்றி உயர்வாக எழுதியிருந்தார்.

இன்று அதே புதுக்கோட்டை மாவட்டம்தான் தமிழகத்தில், ஏன் இந்திய அளவிலேயே ‘பேரிடர்கால மனநல’த்துக்கான முதல் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. நவம்பர் 16 அன்று ‘கஜா’ புயல் டெல்டா மாவட்டங்களை உலுக்கியது. ‘தானே’ புயலைவிடவும் அதிகமான பொருளாதாரச் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், குறிப்பாக, தென்னை விவசாயிகள் அதிக அளவில் இழப்புகளை எதிர்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வரத் தொடங்கின.

நிவாரணப் பணிகளின்போது அரசு மருத்துவர்களின் சேவை பெரும்பாலும் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு மட்டுமே மருந்திடுவதாக அமைந்திருந்தன.

பொதுவாக, பேரிடர் ஏற்பட்ட சில நாட்களுக்கு, அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகள்தாம் முக்கியமானவையாக இருக்கும். அந்தத் தருணத்தில் யாரும் தற்கொலை செய்துகொள்ள நினைக்க மாட்டார்கள். பேரிடர் நிகழ்ந்து, அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையாகத் தெரிய வரும்போதுதான், மன உளைச்சல் முதற்கொண்டு தற்கொலை எண்ணங்கள்வரையானவை எட்டிப் பார்க்கும்.

பேரிடர் காலத்துக்குப் பிறகான தற்கொலைகள் குறித்து, எந்த ஒரு கணக்கெடுப்பாவது இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பது சந்தேகமே. கணக்கெடுப்புகளை விடுங்கள்… அந்தத் தற்கொலை பற்றிய செய்திகளேகூட ஊடகங்களில் முழுமையாகப் பதிவாவதில்லை.

இந்நிலையில், ‘கஜா’ பேரிடருக்குப் பிறகு ஏற்படும் சாத்தியமுள்ள தற்கொலை முயற்சிகளைத் தடுத்து நிறுத்தும்விதமாக, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட மனநலத் திட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், அதிகாரிகள் குறிப்பிடத்தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

நவம்பர் 30 முதல் டிசம்பர் 3வரை மனநல மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோரடங்கிய 13 பேர் கொண்ட குழு ஒன்று, குருவிக்கரம்பை, நெடுவாசல், சேதுபவாசத்திரம் என அந்த மாவட்டத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று, விவசாயிகளைச் சந்தித்து, அவர்களுக்கு என்ன மாதிரியான மனநல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொண்டு, முதற்கட்டமாக ஓர் ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளனர்.

அந்த ஆய்வறிக்கை அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அரசின் வழிகாட்டுதலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடங்க உள்ளனர்.

அந்த மருத்துவர் குழு நடத்திய ஆய்வில் மிக முக்கியமான விஷயம் தெரிய வந்துள்ளது. தங்களின் துயரத்தை யாரிடமாவது பேசிப் பகிர்ந்துகொள்வதன் மூலம், அவர்களது மன உளைச்சல் குறைந்திருக்கிறது என்பதுதான் அது!

தொடருமா திருச்செல்வத்தின் முடிவு?

அந்த ஆறுதல், தனக்குக் கிடைக்கும் முன்பே, மரணித்துவிட்டார் நெடுவாசலைச் சேர்ந்த விவசாயி திருச்செல்வம். சோகத்தின் சுமை தாளாமல் நிற்கிறது அந்த வீடு. தென்னையை இழந்து, துக்கம் தாள முடியாமல், அதை யாரிடமும் சொல்ல முடியாமல், பூச்சிக்கொல்லியைக் குடித்துத் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். ‘கஜா’ பேரிடரால் நிகழ்ந்த முதல் தற்கொலை இது என்று சொல்லப்படுகிறது. அவர் இறந்த எட்டாவது நாள் அது.

‘இவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கு. அதிகாரிகளை விடுங்க. ஒரு ஆறுதலுக்காகத் தெரிஞ்சவங்ககூட யாரும் வந்து பார்க்கலை, ஒரு வார்த்தை கேட்கலைங்கிற கவலைதான் அவரை இந்த நிலைமைக்குத் தள்ளிடுச்சு’ என்கிறார்கள் அவரது உறவினர்கள்.

ஏற்கெனவே, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது அந்தத் திட்டத்துக்காக யாரும் தங்களது நிலங்களை விற்க முன்வரவில்லை. ஆனால், ‘கஜா’ புயலால், நிலங்களை விற்கும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் நெடுவாசல் விவசாயிகள்.

அடுத்து, பொங்கல் வருகிறது. கடன் கொடுத்தவர்களும், கடன் வாங்கியவர்களும் நெருக்குதலுக்கு உள்ளாகும் விழாக் காலம் அது. இதர தமிழர்கள் பொங்கலை ருசிக்கும்போது, எத்தனை உயிர்களை மன அழுத்தமும், தற்கொலை எண்ணங்களும் அறுவடை செய்யப் போகின்றனவோ தெரியவில்லை.

அந்தத் துயரம் தடுக்கப்பட, மேற்கண்ட மருத்துவர் குழுவின் அறிவுரைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும். மனநலம் மனிதருக்கு உயிர் போன்றது அல்லவா..!

‘உள்ளூர் மக்களுக்கேற்ற ‘மாடல்’ தேவை!’

“இந்தப் பேரிடரால் புதுக்கோட்டை மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், அதனால் ஏற்படும் மனநலச் சிக்கல்களை உணர்ந்து, நாங்கள் அரசுக்கு ஒரு திட்டத்தை முன்மொழிந்தோம். அதற்கு அரசு அனுமதியளித்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவக் கல்வி இயக்ககம், மருத்துவப் பணிகள் இயக்ககம், ஆரம்ப சுகாதார இயக்ககம் ஆகிய பலதுறைகள் இணைந்து அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளன” என்கிறார் மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம்.

kaadhu-5jpgகார்த்திக் தெய்வநாயகம்right

“இந்தக் குழுவில் மனநல மருத்துவர்கள் மட்டுமல்லாது, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையைச் சேர்ந்த மனநல மருத்துவ மாணவர்களும், மருத்துவ மனநல உளவியல் (கிளினிக்கல் சைக்காலஜி) மாணவர்களும் அடங்குவர்.

அவர்களுக்கு இந்தக் கள ஆய்வு, புதிய கற்றல் அனுபவமாகவும் இருந்தது. எங்களது ஆய்வு முடிவுகளை அறிக்கையாகத் தயாரித்து, அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதற்கும் ஏற்ற பேரிடர் காலத்துக்குப் பிறகான மனநல சிகிச்சை வழங்குவதற்கு ஒரு மாதிரியை உருவாக்க முயல்கிறோம்” என்கிறார் அவர்.

இந்தக் கள ஆய்வு முடிந்த அடுத்த சில நாட்களிலேயே புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு, மனநல மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும் அடங்கிய தலா நால்வர் கொண்ட மருத்துவக் குழுக்களைத் தமிழக அரசு அனுப்பியுள்ளது.

“மனநலப் பிரச்சினைகளைக் கண்டறிவது மட்டுமல்ல, அதற்குப் பிறகான ‘ஃபாலோ அப்’ மிகவும் முக்கியம். அதற்காக, மாவட்ட சமூகப் பணியாளர்களும் இதில் பங்கெடுக்க உள்ளார்கள்” என்றார் கார்த்திக்.

 

‘பேரிடரை மீண்டும் வாழ்ந்து பார்க்கிறார்கள்!’

இந்த முதற்கட்ட மருத்துவக் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார். அவரிடம் ஆய்வு குறித்துப் பேசியதிலிருந்து…

“நெல் விவசாயிகளுக்கு ‘மாற்றுப் பயிர்’ என்ற ஒரு தீர்வாவது இருக்கிறது. ஆனால் தென்னை விவசாயிகளுக்கு அதுவும் இல்லை. இந்தப் புயலில் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று மட்டுமே பலரும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அது தவறு. தேங்காய் நாரிலிருந்து கயிறு திரித்தல் போன்ற தென்னையையொட்டிய இதர வணிகமும் வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

kaadhu-4jpgஅரவிந்தன் சிவக்குமார்

பணம் இல்லாதது, ஆள் பற்றாக்குறை, புயல் பாதிப்புக் கணக்கெடுப்புகள் முடியாதது போன்ற காரணங்களால் மரம் விழுந்த நிலங்கள் இன்னும் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் விடிந்ததும் அந்த நிலத்தையும் மரங்களையும் பார்க்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்படுகிறது. இது அவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. ஆண்கள் பலர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்கள். இதனால் சிலருக்கு ‘டெலிரியம்’ எனப்படும் மனக் குழப்பம் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

எதிலும் ஆர்வமற்று இருப்பது, பசியின்மை, தூக்கமின்மை, காரணமில்லாமல் ஏற்படும் எரிச்சல், அழுகை, தேவையற்ற பதற்றம் போன்ற பல சிக்கல்களைப் பாதிக்கப்பட்ட மக்கள் சந்திக்கிறார்கள். ‘ரீலிவிங் தி எக்ஸ்பீரியன்ஸ்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ‘ஏற்கெனவே நடந்து முடிந்த பேரிடரை, மீண்டும் தங்கள் கற்பனையில் வாழ்ந்து பார்க்கும்’ மக்களை நாங்கள் சந்தித்தோம்.

முத்தன்பள்ளம் போன்ற கிராமங்களில் பாசி படிந்த தண்ணீரையே தங்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கு மக்கள் பயன்படுத்துகிறார்கள். குடிநீர், உணவு போன்ற அடிப்படைத் தீர்வுகள்கூட அவர்களுக்குக் கிடைக்காதபோது, அவர்களுக்கு மேலும் மன உளைச்சல் அதிகரிக்கிறது!” என்றார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x