Published : 01 Dec 2018 10:31 AM
Last Updated : 01 Dec 2018 10:31 AM
குளிக்கும்போது ஆசனத் துளையைத் தொட்டுப் பாருங்கள். எண்ணெய் கசிவது போலவும், குழந்தையின் உதட்டைத் தொடுவதுபோல் குளிர்ச்சியாகவும் இருந்தால் அது நல்ல நிலையில் இருக்கிறதென்று பொருள்.
அப்படி இல்லையென்றால் உள்ளே பெருங்குடலில் மல வாயில் வெப்பம் ஏறத் தொடங்கிவிட்டது என்று புரிந்துகொள்ள வேண்டும். இந்த வெப்பத்தைத் தணிக்க உள்ளுக்குள் என்ன சாப்பிடுவது?
வெந்தயத்தில் இருந்து விளக்கெண்ணெய், வேப்பங்கொழுந்து எனப் பரிந்துரைக்க இன்று நவீன ‘வாட்ஸப் வைத்தியர்கள்’ புற்றீசல்போல முளைத்துவிட்டார்கள்.
மருந்துகளைப் பொதுமைப்படுத்துவது போன்ற அபத்தமும் ஆபத்தும் உடலுக்கு வேறொன்றும் இல்லை. இது அஞ்சறைப் பெட்டி மருந்து தொடங்கி அமேசான் அரிய வகை மூலிகைவரை அத்தனைக்கும் பொருந்தும்.
தவிர்ப்பதே நல்லது
உடலின் இயல்புக்கு மாறாக ஒன்று நிகழுமானால் ‘எதைத் தின்று அதைச் சரிசெய்வது?’ என்று கேள்வி எழுப்புவதற்கு மாறாக ‘எதைத் தவிர்ப்பது?’ என்பதுதான் உடனடியாக நாம் எழுப்பிக்கொள்ள வேண்டிய முதன்மைக் கேள்வியாகும்.
நமது ஆசனவாயில் பிரச்சினை என்றால் உடனடியாக நாம் அமரும் ஆசனத்தையும் ஆசன முறையையும் மாற்றியாக வேண்டும். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் ஆசனவாயில் பிரச்சினை உள்ளவர்களை அது அமரவிடுவதே இல்லை.
பழைய விவசாயம் சார்ந்த உற்பத்தி, உழைப்பு முறையில் மலச்சிக்கல் தோன்றுவது மிகவும் அரிதான ஒன்றாகவே இருந்தது. நகரங்களில் மளிகைக் கடைகளில் கைக்கெட்டும் தொலைவிலேயே அனைத்துப் பொருட்களையும் வைத்துக்கொண்டு அதிகாலை தொடங்கி முன்னிரவு வரை ஆசனம் அசையாமல் பொருட்களை எடுத்துக் கொடுக்கும் கடைக்காரருக்குத்தான் மலச்சிக்கல், மூலம் போன்ற பிரச்சினைகள் இருந்து வந்தன.
இன்றைய உழைப்பு – உற்பத்தி முறை, உட்கார்ந்து செய்வதாகவே மாறிக்கொண்டு வருகிறது. அதில் நாம் உடனடியாக எந்த மாற்றத்தையும் செய்துவிட முடியாது. ஏனென்றால் அது சமூக, அரசியல், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை. ஆனால், தனிப்பட்ட முறையில் நம் உடலுக்குத் தேவையானதை நாம் செய்துகொள்ள முடியும்.
ஆசன இருக்கையை மாற்றுங்கள்
இன்று எத்தனை பெரிய அதிகாரியானாலும் சுழல்கிற, சாய்கிற, சரிகிற விதமாக இருக்கைகளை அமைத்துக்கொள்ள முடியும். இந்த வசதிகள் அனைத்தும் வேலையை எளிதாக்குவதற்குத்தானே தவிர, இந்த இருக்கைகள் உடல்நலனைப் பொருட்டாகக்கொண்டு தயாரிக்கப்பட்டவை அல்ல.
நீண்ட நேரம் அமர்ந்த நிலையில் வேலை செய்கிற பொற்கொல்லர்கூட, உடலின் வெப்பம் வெளிநோக்கிப் பரவித் தணியும் விதமாக மூங்கில், வைக்கோல், தேங்காய் நார்களில் பின்னப்பட்ட இருக்கைகளை அமைத்திருப்பார்கள். காற்றுப் பரவ வாய்ப்பு இல்லாத இடத்தில் தொடர்ந்து அமர்கிறபோது, ஏறும் வெப்பத்தை உணரும் தன்மை இருந்ததால், அதைத் தவிர்க்க நார் கொண்டு பின்னப்பட்ட இருக்கைகளை உருவாக்கிக் கொண்டார்கள்.
இப்போது நாம் செய்ய வேண்டியது அலுவலகத்தில் நமக்கு அளிக்கப்பட்ட இருக்கை எதுவானாலும் அதன் மீது பனை ஓலையால் இரட்டை அடுக்கில் பின்னப்பட்ட தடுக்கு அல்லது மர உருளைகள் கோத்த இருக்கையை நமது ஆசனத்தின் மீது போட்டுக்கொண்டால் உடலின் வெப்பம் உள்முகமாக ஏறாது வெளிமுகமாகப் பரவித் தணியும்.
குறிப்பாக, பேருந்து, கார் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் உடல் சூடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்குப் பொருத்தமான தீர்வாக அமையும்.
நீர் அருந்த வேண்டாம்
உடலின் வெப்பம் வெளியில் பரவித் தணிவது மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்கான முக்கியமான காரணி. அதுபோக வேறு சில அம்சங்களையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
நமக்கு மலம் கழிவது தொடர்பாகத் தெளிவான புரிதலே இல்லை. காலையில் எழுந்ததும் கழிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காகப் பெரியவர்கள் பலரும் சூடாகத் தேநீர் அல்லது காபி அல்லது இரண்டு லிட்டர் நீர் அருந்துவதைப் பழக்கமாக வைத்துள்ளனர். இந்த நீரருந்தும் பழக்கம் சிறுநீரகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பின்னர் பார்க்க உள்ளோம். வயிறானது பீங்கான் கோப்பை அல்ல, நீர் ஊற்றி அலசிவிட..!
ஒரு பாம்பு ஊர்ந்து செல்வது போல மலம், விசுக்கென்று இறங்கிவிடுவது மிகவும் சரியானது. அதுவும் காலை ஐந்தில் இருந்து ஏழு மணிக்குள் நிகழ்ந்துவிடுவது கூடுதல் சிறப்பு.
அதற்கு முந்தைய நாள் இரவில் வயிற்றுக்குக் கொடுக்கப்பட்ட உணவு நார்ச்சத்து மிகுந்ததாகவும் மிதமானதாகவும் இருந்திருக்க வேண்டும். இன்னும் குறிப்பாக, பழ உணவாக இருந்தால் கூடுதல் உதவியாக இருக்கும். இந்த இரண்டையும்விட மிக முக்கியம் குறைந்தது பத்து மணிக்காவது உடலைப் படுக்கையில் கிடத்தியிருக்க வேண்டும். பதினோரு மணிக்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும்.
அதே நேரம் காலை ஐந்திலிருந்து ஏழு மணிக்குள் மலம் தானாக வெளியேறவில்லை என்றால் அதைப் பெரிய குறையாகவோ உடலியல் பிரச்சினையாகவோ கருத வேண்டியதில்லை. டீ, காபி, வெந்நீர் போன்ற முயற்சிகள் மேற்கொள்வதும் உசிதமல்ல. கழிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் தன்னியல்புக்கு மாற்றுவதே நெடுநோக்கில் மிகவும் சிறந்தது.
நீர்த்த உணவே சிறந்தது
காலை உணவை நீர்த்த (தம்ளரில் ஊற்றிக் குடிக்கும் பதத்தில்) கூழ் அல்லது அரிசிக் கஞ்சி அல்லது பழச்சாறு அல்லது காய்கறி – இறைச்சி ரசம் அல்லது புளிப்பேறாத தாளித்த மோர் என்ற அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இங்கு சொல்லப்பட்டவை அனைத்துமே உணவு வகைகள்தாம், உடலுக்கு ஆற்றல் தருபவைதாம்!
மேற்சொன்ன அனைத்தையுமே ஒன்றை அடுத்து ஒன்று என முயன்று பார்க்கும் மகானுபவர்கள் சிலர் இருக்கக்கூடும். நன்றாக நினைவில் கொள்ளுங்கள், மேற்சொன்னவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே அதிகபட்சம் முன்னூறு மில்லிக்கு மிகாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும் மதிய உணவு உண்பதற்குள் மலம் கழித்தால் மட்டுமே வழக்கமான உணவு. இல்லையேல் அடுத்த வேளைக்கும் ரசம் அல்லது மோர் சாதம் மட்டுமே. இங்கு கூறப்படுவது பத்தியமல்ல, உடலியல் கூறின்படி அனைத்து உடலுக்கும் ஏற்ற வழி முறை. தொடர்ந்து மேலும் சில எளிய வழிமுறைகளைப் பார்ப்போம்.
(தொடரும்)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT