Published : 15 Dec 2018 12:57 PM
Last Updated : 15 Dec 2018 12:57 PM

மூலிகையே மருந்து 35: தெம்பு தரும் தும்பை

தனது வெண்ணிறச் சிறு மலர்களைத் தேடி, வண்டுகளையும் பட்டாம்பூச்சிகளையும் வரவழைக்கும் தந்திரம் தெரிந்த சிறிய தாவரம் தும்பை. நோய்களைத் தடுக்கும் ‘மூலிகைத் தந்திரன்’. அதன் பூவிலிருந்து தேனை உறிஞ்ச, வண்டுகளோடு போட்டி போட்டுக்கொண்டு இளம்பிராயத்தில் தும்பைச் செடிகளைத் தேடி அலைந்த நினைவுகள் பலருக்கும் இருக்கலாம். 

போரில் கலந்துகொள்ளும் இரு அணி வீரர்களும் தும்பையின் அழகிய பூங்கொத்தைச் சூடிக்கொள்வார்களாம். போரிடும் இருவருமே தூய்மையானவர்கள் என்பதைக் குறிக்கவே இந்த ஏற்பாடு. எதிராளியும் தூய்மையானவர் என்பதைக் குறிக்க, ‘தும்பைப் பகைவர்’ என்கிறார் குமட்டூர் கண்ணனார். ‘தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி’ எனக் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடுகிறார்.

பெயர்க் காரணம்: சங்க இலக்கியங் களில் இது, ‘தும்பை’ என்றே சுட்டப்படுகிறது. ‘தும்பை’ என்பது சூடும் மலரால் பெற்ற பெயர் என்று நச்சினார்க்கினியர் பொருள் கற்பிக்கிறார்.  

அடையாளம்: இரண்டடி வரை வளரும் சிறுசெடி வகை இது. தூய்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் வெண்ணிற மலர்கள் தும்பைக்கு உரிய அடையாளம். சிறுதும்பை, பெருந்தும்பை ஆகிய வகைகள் உண்டு. ‘லாமியேசியே’ (Lamiaceae) எனும் வாசனைமிக்கக் குடும்பத்தைச் சார்ந்த தும்பையின் தாவரவியல் பெயர் ‘லுகாஸ் அஸ்பெரா’ (Leucas aspera). டிரைடெர்பினாய்ட்கள் (Triterpenoids), ஓலியோனோலிக் அமிலம் (Oleanolic acid), சைடோஸ்டிரால் (Sitosterol), லியுகாஸ்பெரோன்கள் (Leucasperones) போன்ற வேதிப் பொருட்கள் தும்பையில் குடியிருக்கின்றன.

உணவாக: பசுமையான தும்பை இலைகளை அவ்வப்போது சமையலில் சேர்த்துவர, சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் துன்பப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. இதன் இலைகள் மற்றும் பூக்களை உலர்த்தி வைத்துக்கொண்டு, தேனில் குழைத்துச் சாப்பிட, நாட்பட்ட இரைப்பு நோயின் தீவிரம் விரைவில் குறையும். நாவறட்சி ஏற்பட்டு, அதிக தாகம் இருக்கும்போது, தும்பையின் பூக்களை, தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது தேன் சேர்த்துப் பானமாகப் பருக, வறட்சி குறைந்து நா மலரும்.

பூச்சாறு ஐந்து துளியை உலர்ந்த பேரீச்சம் பழத்துடன் கலந்து சுவைக்க, உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், நுரையீரல் பாதையில் சிறைப்பட்டிருக்கும் கோழையும் வெளியேறும். தும்பைச் செடியை உலர்த்திச் சூரணமாக்கி, நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துப் பாலில் கலந்து சாப்பிட்டு வர, ரத்தச் சோகை குணமாகும்.

மருந்தாக: ‘டிரைகோபைடான்’ பூஞ்சைக்கு எதிராகச் செயல்பட்டு அதன் பரவலைத் தடுக்கும் திறன் தும்பைக்கு இருப்பதாக ஆய்வுகள் பதிவு செய்கின்றன. தும்பை மற்றும் நொச்சி இலைகளைச் சேர்த்து புகை போட, கொசுக்கள் விலகுவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. புற்றுநோய் செல்களுக்கு எதிராகச் செயல்படும் தன்மையும் தும்பைக்கு உண்டு.

வீட்டு மருந்தாக: நல்லெண்ணெய்யில் தும்பைப் பூ மற்றும் சிறிது மிளகுத் தூள், ஓமம் சேர்த்துக் காய்ச்சி, வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய்க் குளியல் செய்து வர, எவ்விதமான நோயும் உங்கள் உடலுக்குள் எட்டிப் பார்க்காது. குறிப்பாக, ஒற்றைத் தலைவலியைக் குணமாக்க வழி தேடுபவர்கள் இந்த எண்ணெய்க் குளியலை முயலலாம்.

சீரற்ற மாதவிடாயை முறைப்படுத்த, தும்பை இலை மற்றும் உத்தாமணி இலையை அரைத்து, சுண்டை அளவு மருந்தாகப் பிரயோகிக்கும் வழக்கு முறை கிராமத்தில் பின்பற்றப்படுகிறது. தலைவலி, மூக்கில் சதை வளர்ச்சி, சைனஸைடிஸ், சளி தொந்தரவுகளுக்கு, இதன் இலைச் சாற்றை மூக்கில் பிழியும் நசிய மருத்துவ முறை சித்த மருத்துவத்தில் பிரசித்தி பெற்றது.

‘மீளாக் கபப்பிணியை மேலிட்ட சன்னிகளை…’ எனத் தொடங்கும் தேரன் பாடல், தும்பைச் செடியானது கபநோய்களுக்கு எதிரான மிகச் சிறந்த மூலிகை என்பதைப் பதிவுசெய்கிறது. தும்பைச் செடியிலிருந்து தயாரிக்கப்படும் ‘கண் மை’, கண்நோய்களுக்கான மருந்தாக முற்காலங்களில் பயன்பட்டிருக்கிறது.

சருமத்தில் தோன்றும் எரிச்சல், சிரங்கு, சொறி போன்ற அறிகுறிகளுக்கு, தும்பை இலையை அரைத்து உடல் முழுவதும் பூசிய பின் குளிக்கலாம். தலைபாரம், சளி அவதிப்படுத்தும்போது, இதன் இலைகள் மற்றும் மலர்களைக் கசக்கி வெந்நீரிலிட்டு ஆவி பிடிக்கலாம்.

தும்பைச் சாறு ஒரு கரண்டி, சிறிது மிளகுத்தூள் மற்றும் தேன் சேர்த்துக் கொடுக்க, வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறும். தலைபாரத்துக்குத் தும்பைப் பூவைச் சாறு பிழிந்து, ஒரு மெல்லிய துணியில் நனைத்து நெற்றியில் பற்றுப் போடலாம். இதன் மலரை மென்று சாப்பிட, தொண்டைப் புண் குணமாகும்.

தும்பை… நலத்துக்குத் தெம்பு..!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x