Published : 15 Dec 2018 01:00 PM
Last Updated : 15 Dec 2018 01:00 PM
குழந்தைக்குப் பொருத்திவிடும் டயாபர் வாயிலாகவோ வளர்ந்த பின்னர் தொடர்ந்து ஓரிடத்தில் அமர்ந்திருப்பதன் வாயிலாகவோ உள்வெப்பம் தணியாமல் மலம் இறுக்கமடைந்து வெளியேறுதல் கடினமாகிவிடும். அந்த நேரத்தில், கடந்த இதழில் சொன்னதுபோல நீர்த்த உணவை உண்டு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவது நல்லது.
இல்லாமல் போனால், மலச் சிக்கல் நீண்ட காலப் பிரச்சினையாக மாறி, குதம் பிதுங்கி வெளியேறுதல், குதவாயில் நீர்க் கட்டி, சீழ்க்கட்டி போன்றவை தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.
பெருங்குடலை நாம் சுத்தமாக வைத்திருக்கத் தனியாக ஏதும் செய்ய வேண்டியதில்லை. அதை அசுத்தப்படுத்தும் வேலைகளைச் செய்யாமல் இருக்கும்படியான உணவுப் பழக்கம் நம்மிடம் இருப்பதே போதுமானது. ஏனென்றால், பெருங்குடலில் சேரும் கழிவை உடனடியாக நீக்கிச் சுத்தப்படுத்து வதற்கென்றே உடலுக்கு நன்மை செய்யும் கிருமிகள் பெருமளவில் அங்கே தங்கியுள்ளன.
உடலில் உள்ள நன்மை செய்யும் கிருமிகளில் பாதிக்கும் மேலானவை பெருங்குடலில்தான் உள்ளன. அதுவும் நமது பிறப்போடு, தாயின் கருக்குழாய் வழியாக நமக்கு அளிக்கப்படுகிறது.
தவறான உணவுப் பழக்கத்தால் பெருங்குடல் தனது ஆற்றலை இழந்து மலச் சிக்கல் ஏற்பட்டு அல்லது செரிமானப் பிரச்சினை ஏற்பட்டு அப்பெண்டிக்ஸ் வலி தோன்றும்போது, அறுவை சிகிச்சை செய்து அப்பெண்டிக்ஸை நீக்குவது ஒன்றுதான் வழி.
அப்பெண்டிக்ஸ் வலி குறைய…
அப்பெண்டிக்ஸ் வலி ஒரே நாளில் திடுமென உயர்ந்து உயிர் வாதையாக மாறுவதில்லை. சாப்பிட்டு முடித்தவுடன் அடி வயிற்றின் வலப்புறத்தில் சிறிதாகத் தோன்றித் தொடர்ந்து எச்சரித்துக்கொண்டே இருக்கும். அதை நாம் பொருட்படுத்தாமல் புறக்கணிக்கிறபோது அல்லது வலி நிவாரணி கொடுத்துத் தற்காலிகமாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே போகிறபோதுதான் அது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போய், ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலையை அடையும்.
இப்போது நாம் செய்யத் தகுந்தது இதுவொன்றே. அடிவயிற்றில் வலி ஏற்பட்டதும் வலி தானாகக் குறையும்வரை இதமான வெந்நீர் தவிர வேறெதும் உண்ணக் கூடாது. வலி முழுமையாகக் குறையாத வரை பசி தோன்றாது. எனவே, ஓரிரு நாட்கள் ஆனாலும் பாதகமில்லை. உண்பதை முற்றாகவே தவிர்த்துவிடலாம்.
மிகவும் அவசியமான நேரத்தில் இளநீர் அல்லது விருப்பமான பழச்சாறு அல்லது புளிக்காத மோர் போன்றவற்றை அருந்தி வந்தால் வழக்கத்துக்கு மாறான கெட்ட நாற்றத்துடன் மலம் வெளியேறும். அதற்கு ஓரிரு நாட்கள்கூட ஆகலாம். அதற்குப் பொறுத்திருப்பதைத் தவிர தேர்ந்த, சிறப்பான சிகிச்சை வேறொன்றும் இல்லை.
மேற்படியான மல வெளியேற்றத்துக்குப் பின் வலி நிச்சயமாகப் பெரும்பகுதி குறைந்துவிடும்.
நார்ச்சத்து உணவே நல்லது
அடுத்து வழக்கமான உணவுப் பழக்கத்திலிருந்து உடனடியாக மாறிவிடுதல் வேண்டும். மையாக அரைத்த மாவால் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்களை (இட்லி, தோசை, சப்பாத்தி உட்பட) முற்றாகத் தவிர்த்து விட்டு, நார்ச்சத்து மிகுந்த கொர கொரப்பான மாவில் தயாரிக்கப்பட்ட சிவப்பரிசி அல்லது ராகி மாவால் தயாரிக்கப்பட்ட புட்டு, இடியாப்பம் போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்ளலாம். சிறுதானியம், நொய்யரிசி, உடைத்த கோதுமை ஆகியவற்றைக்கொண்டு சமைக்கப்பட்ட உப்புமா, பொங்கல், கஞ்சி போன்றவை மிகவும் சிறந்தவை.
தற்காலிகமாக இறைச்சி உணவையும் கிழங்குகளையும் தவிர்த்துவிட்டு நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளைப் பெருமளவு எடுத்துக் கொள்ளலாம். மிகவும் குறிப்பாக பப்பாளி, மாதுளை போன்ற நீர்த் தன்மை மிகுந்த பழங்களை மட்டுமே இரவு உணவாக எடுத்துக் கொள்ளுதல் நல்லது.
காலையில் வெறும் வயிற்றில் மோர் அல்லது இளநீர் எடுத்துக்கொண்டு மீண்டும் பசி வந்த பின்னர் உணவு எடுத்துக் கொள்வது நல்லது. புளிக்காத மோர் அல்லது நொதிக்க வைத்த வடித்த கஞ்சியின் நீர் இரண்டும் பெருங்குடலுக்குத் தேவையான நன்மை செய்யும் கிருமிகளை உருவாக்கக் கூடியவை.
குடல்வாலில் கழிவு தேக்கமடைந்து வலி தோன்றுகிற போது சளிப் பிடித்து மோர், பழம் போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருட்கள் உண்ணப் பிடிக்கவில்லை என்றால் இறைச்சி, காய்கறி, கீரை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் சூப்பை ஒவ்வொரு நேரமும் முழு உணவாகவே எடுத்துக்கொள்ளலாம். வலி முற்றாக நீங்கிய பின்னர் கஞ்சி, ரசம் சாதம் போன்றவற்றுக்குத் திரும்பி, ஒருவாரத்துக்குப் பின்னர் வழக்கமான உணவை எடுத்துக்கொள்ளலாம். அப்போதும் மாவால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்ப்பதே நல்லது.
பெருங்குடலின் மூத்த அண்ணன், உயிர்களின் ஆதாரம், சிறப்புச் சலுகை எதுவும் கோராமல் நமக்குத் தொடர்ந்து ஆற்றலை வழங்கிக் கொண்டிருக்கும் உறுப்பு எது? அது பற்றி அடுத்த இதழிலிருந்து பார்ப்போம்.
(தொடரும்)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment