Published : 07 Dec 2018 06:45 PM
Last Updated : 07 Dec 2018 06:45 PM

செயலி என்ன செய்யும்? 11 - ‘மேட்ச்’ ஃபிக்ஸிங் மோகம்..!

உங்களுக்கு நண்பர்கள் வேண்டும் என்றால், பல சமூக ஊடக வலைத்தளங்கள் உதவிக்கு வரும். அதுவே ஒரு வாழ்க்கைத் துணை வேண்டுமென்றால்?  ‘வாழ்க்கைத் துணை’ என்றால் திருமணம் மட்டுமே அல்ல.  நட்புக்கும் கொஞ்சம் அதிகமாக,  நம் விருப்பு வெறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் துணை, ஆனால் மனைவியோ கணவனோ அல்ல.

இந்த மாதிரியான துணையை ஆங்கிலத்தில் ‘டேட்டிங் பார்ட்னர்’ என்பார்கள். ‘முரட்டு சிங்கி’ளுக்குக்கூடத் துணையைப் பெற்றுத்தரச் செயலிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ‘டிண்டர் (Tinder)’.

‘இடதா...  வலதா..?’ என்று கேட்டால், ஒருவருக்கு அரசியல் ஞாபகம் வரவில்லை என்றால், நிச்சயம் அவர் டிண்டர் செயலியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ஆம்... இந்தச் செயலியில் மிக முக்கியச் செயல்பாடு, இடதும் வலதும்தான்.

டவுன்லோட் மட்டுமே இலவசம்

டிண்டர் செயலி, ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இலவசமாகவே கிடைக்கிறது.  தரவிறக்கம் செய்து கொள்ள மட்டுமே இலவசம்.  இதனுடைய பல  சிறப்புச் சேவைகளைப் பெற, நீங்கள் மாதா மாதம் பணம் கட்ட வேண்டும்.

இந்தச் செயலி செயல்படும் முறை எளிதானது.  நீங்கள் உங்கள் ஃபேஸ்புக் கணக்கைக் கொண்டு இந்தச் செயலியில் பயனாளராக வேண்டும்.  இதன் மூலம் ஒரு நபரின் உண்மைத் தன்மையை அவர்கள் உறுதி செய்கிறார்கள்.  அடுத்து உங்களுக்கான ஒரு ‘புரொஃபைலை’ உருவாக்க வேண்டும்.  ஒளிப்படங்களைப் பகிர்வது உங்கள் விருப்பம்.  அதைக் குறிப்பிட்ட நபருக்கு மட்டும் காட்டும் பாதுகாப்பு அம்சம் உள்ளது.

தள்ளு… தள்ளு… தள்ளு…

அடுத்து, உங்கள் இடத்தைச் செயலி  கண்டுபிடிக்கும். இதற்கான அனுமதி கொடுத்தால் போதும்.  அதன்பின் உங்கள் புரொஃபைலின் அடிப்படையில், இதர பயனாளர்களின் புரொஃபைலோடு ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பிட்டு, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் உங்களைப் போலவே துணை தேடும் வேறு பயனாளர்களை உங்களுக்குக் காட்டும்.  நீங்கள் ஆண் என்றால் பெண்களையும், பெண் என்றால் ஆண்களையும் இந்தச் செயலி பட்டியலிடும்.

உங்கள் திரையில் வரும் பயனாளர் ஒளிப்படங்கள் மற்றும் அவர்கள் காட்ட நினைக்கும் சுயவிவரங்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்கள் முன் காட்டப்படும் அந்த புரொஃபைலைக்கொண்ட அட்டையை வலதுபுறமாகத் தள்ளினால், உங்களுக்கு விருப்பம் என்று அர்த்தம். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்த அட்டையை இடதுபுறமாகத் தள்ள வேண்டும்.

நீங்கள் விருப்பம் தெரிவித்த நபர் உங்கள் புரொஃபைலைக் கொண்ட அட்டையை வலதுபுறம் நகர்த்தி விருப்பம் தெரிவித்தால், உங்கள் இருவருக்கும் ‘மேட்ச்’ ஆகிவிட்டது  என்று அர்த்தம். அடுத்த கட்டமாக நீங்கள் இருவரும் பேசிக் கொள்ளலாம்.  அப்படியே உங்கள் நட்பை வளர்த்து, அவருடன் டேட்டிங் செல்லலாம்.

‘அடல்ட்ஸ் ஒன்லி..!’

இன்று பல பதின் வயதினரைப் பித்துப் பிடிக்க வைத்திருக்கும் செயலி இது. இந்தச் செயலி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட செயலி.  அடுத்து இந்தச் செயலியை  18 வயதுக்கு மேலானவர்கள்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், 18 வயதாகிவிட்டதை உறுதிசெய்ய அவர்கள் கடைப்பிடிக்கும் முறை, சற்றுப் பலவீனமானது. எனவே, இதை 18 வயதுக்குக் குறைவானவர்களும் பயன்படுத்த சாத்தியங்கள் உள்ளன. அப்படிச் செய்தால் அது பல சிக்கல்களைக் கொடுக்கும்.

பதின் வயதினர் இந்தச் செயலியைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். அடுத்து, அவர்கள் போலியான புரொஃபைலைக் கொடுத்துப் பயன்படுத்தினால் நூறு சதவீதம்  அபாயம் இருக்கிறது.  இந்தச் சேவை என்பது நண்பர்களைத் தேடுவதற்கான இடம் அல்ல. அதனால் இங்கு வெறும் நட்புக்காக என்று நினைத்துச் சிக்கிக் கொள்ளும் பதின் வயதினர் அதிகம். பதின் வயதினருக்கு நட்புக்கும் துணைக்கும் காமத்துக்கு மான வேறுபாடு கள் புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

‘மேட்ச் ஃபிக்ஸிங்’ போட்டி…

பெரும்பாலும் சக நண்பர்களின் வற்புறுத்தலால், பிற நண்பர்களிடம் தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்ளவும் இந்தச் செயலியைப் பலர் பயன்படுத்து கிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுடன் எத்தனை பேர் ‘மேட்ச்’ ஆகியிருக்கிறார்கள் என்பதை ஒரு போட்டியாகப் பாவித்துக்கொள்கிறார்கள்.  இதனால் அதிக நேரம் இந்தச் செயலியைப் பயன்படுத்தி இணை தேடும் முயற்சியில் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.

அடுத்து இந்தச் செயலியின் உதவியுடன் உங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்பதால், தவறான மனிதர்களிடம் சிக்கிக் கொள்ளும் சாத்தியங்களும் அதிகம்.

உங்கள் பிள்ளைகள் இந்தச் செயலியைப் பயன்படுத்தினால், நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை அதிலிருந்து வெளியேறச் சொல்வதுதான்.

எல்லாத்துக்கும் துட்டு..!

18 வயதுக்கு மேலானவர்கள் இதைப் பயன்படுத்துவதில் பொருளாதாரரீதியாகச் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. சிறப்புச் சேவைகளுக்குப் பணம் கட்ட வேண்டும் என்பதால் செலவு அதிகம். உதாரணத்துக்கு, ஒரு நாளைக்கு உங்களுக்கு 50 பேரின் புரொஃபைல்தான் காட்டப்படும். ஒருவேளை அதை நீங்கள் அதிகமாக்கிக்கொள்ள வேண்டும் என்றால், கட்டணம் செலுத்த வேண்டும். 

ஒரு நாளைக்கு இத்தனை பேருக்கு மட்டும்தான் விருப்பம் தெரிவிக்க முடியும். அதை அதிகப்படுத்திக்கொள்ளவும் கட்டணம் செலுத்த வேண்டும். இப்படியாக ஒவ்வொரு சிறப்பு சேவைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதால், உங்கள் ‘பர்ஸ்’ பத்திரம்.

‘வாழ்க்கைத் துணை’ என்பது மனநலரீதி யாக உங்களின் விருப்பு வெறுப்புகளைப் பகிர்ந்துகொண்டு உங்களின் நண்பராகவும் உற்ற துணையாகவும் இருக்க வேண்டும். அதைவிடுத்து வெறும் பாலியல் தேவைகளுக்காக இணையைத் தேடுவது, உங்களது மனநலத்துக்கும் வாழ்க்கைக்கும் சிக்கலைச் சேர்க்கும்.

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x