Published : 10 Nov 2018 12:01 PM
Last Updated : 10 Nov 2018 12:01 PM
அன்றாடம் நாம் பயன்படுத்தும் ‘வாட்ஸ் ஆப்’ போன்றதுதான் இந்த ‘டெலிகிராம்’ செயலியும். என்றாலும், வாட்ஸ் ஆப்புக்கும் இந்தச் செயலிக்கும் உள்ள முக்கிய வித்தியாசம், வாட்ஸ் ஆப்பில் தகவல் பரிமாற்றம் முழுவதும் அந்தந்தக் கருவிகளில் மாத்திரம் சேமிக்கப்படும். ஆனால், டெலிகிராம் செயலியில், தகவல்கள் நேரடியாக அந்த நிறுவனத்தின் இணைய சர்வரில் சேமிக்கப்படும்.
உங்கள் பிள்ளைகள் இந்தச் செயலியைத் தங்கள் டிஜிட்டல் கருவிகளில் பயன்படுத்திக் கொண்டிருந்தால், பெற்றோர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, இந்தச் செயலியை அழிக்கச் சொல்வதுதான்! அவ்வளவு ஆபத்தான செயலி இது. சில காலம்வரை ஆப்பிள் நிறுவனத்தின் ஐஸ்டோரில் இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்தத் தடையை நீக்கிவிட்டார்கள்.
இணையம் இருந்தால் இணையலாம்
இந்தச் செயலி இலவசமாகவே கிடைக்கிறது. இதைக் கொண்டு, நீங்கள் எழுத்து, படம், கோப்புகள் போன்றவற்றை மற்றொருவருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதில் உங்கள் செல்போன் எண் உதவியுடன் பதிவுசெய்து கொள்ளலாம். அல்லது உங்களுக்கெனத் தனியான பயனர் பெயருடன், ‘பொது’ என்ற வகையில் உங்களை நீங்கள் பதிவுசெய்து கொள்ளலாம். பொது என்ற வகையில் பதிவு செய்துகொள்பவர்களை யார் வேண்டுமானாலும் தொடர்புகொள்ள இயலும்.
இணையத் தொடர்பு இருந்தால் மட்டும்தான் இது செயல்படும். தகவல்கள் அனைத்தும் ‘கிளவுட்’ எனும் முறையில் அந்நிறுவனத்தின் சர்வரில் சேமிக்கப்படும். இந்தச் செயலியைக் கொண்டு நீங்கள் தனி நபருக்கோ ஒரு குழுவுக்கோ தகவல் அனுப்பலாம். நீங்கள் 6 மாதம் வரை இந்தச் செயலியைப் பயன்படுத்தாமல் இருந்தால், உங்கள் பயனர் கணக்கு தானாகவே அழிந்துவிடும்.
வசதிகள் என்ன?
இந்தச் செயலி மூலம் ‘ஸ்னாப்சாட்’ செயலியைப் போல் ஒரு சில நொடிகளில் அழிந்துவிடக்கூடிய தகவலை அனுப்பலாம். மேலும் நீங்கள் முன்னர் அனுப்பிய தகவலை, ‘எடிட்’டும் செய்யலாம். இதன் இன்னொரு சிறப்பம்சம், இது முழுக்க முழுக்கத் தொழில்நுட்ப வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட செயலி. எனவே, செயலித் தொழில்நுட்ப அறிவு கொண்ட யாரும், இந்தச் செயலியில் பல ‘அப்டேட்’டுகளைச் செய்யலாம். நிறுவனம் செய்யும் என்று காத்திருக்கத் தேவையில்லை.
மேற்கண்ட வசதிகள் காரணமாக, இன்று பலரும் வாட்ஸ் ஆப்பை விட்டு நீங்கி, இந்தச் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். வெறும் தகவல் பரிமாற்றத்துக்காக மட்டும் இந்தச் செயலியை நீங்கள் பயன் படுத்துகிறீர்கள் என்றால் நல்லதுதான். ஆனால், உங்கள் பிள்ளைகள் இந்தச் செயலியைப் பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.
சிக்கல்கள் என்ன?
முதல் சிக்கல், இந்தச் செயலியில் எந்த வகையான தகவல்களை அனுப்பலாம் என்பது குறித்த கண்காணிப்பு இல்லை. அதனால் இந்தச் செயலியில் ஆபாசப் பட வீடியோக்கள் குவிந்துள்ளன. இதன் காரணமாகத்தான் ஆப்பிள் நிறுவனம் இந்தச் செயலியைத் தன் ஸ்டோரிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருந்தது.
அடுத்த சிக்கல், பொது எனும் வகையில் நீங்கள் பதிந்திருந்தால் உங்களை யார் வேண்டுமானாலும் பின்தொடர முடியும். இதனால் உங்கள் பிள்ளைகளை, இணையத்தில் உலாவும் தவறான நபர்கள் ‘டார்கெட்’ செய்யக்கூடும். எனவே, இந்தச் செயலியைப் பயன்படுத்த வேண்டாம் எனக் காவல் துறையினரும் தொழில்நுட்ப வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர்.
இந்தச் செயலியை நாமே ‘அப்டேட்’ செய்ய முடியும் என்பதால், பயனாளர்களின் தகவல்களைப் பிறர் திருடும் சாத்தியம் நிரம்ப உள்ளது. எனவே, உங்களுக்கு இந்தச் செயலியைப் பற்றிய தொழில்நுட்பம் தெரியவில்லை என்றால், இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
செயலிகள், டிஜிட்டல் கருவிகள் போன்றவை குறித்து நம் பிள்ளைகளுடன் நடத்தும் உரையாடல்கள் அவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, உங்கள் பிள்ளைகளுடன் அவர்கள் பயன்படுத்தும் செயலிகளைப் பற்றி அன்றாடம் ஒரு ‘டெக்’ உரையாடலைத் தொடர்ந்து நிகழ்த்துங்கள்.
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment